மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்க முடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு இரவு படுப்பதற்கு விடியப்புரம் இரண்டு மணியாகிவிடும். நான் சற்று தாமதமாகவே எழும்பி தேநீர் குடிக்காமால் மதியச் சாப்பாட்டையே சாப்பிடுவது வழக்கம். புலம் பெயர்ந்த வாழ்வில் பலருக்கு இது நாளாந்த வாழ்வுமுறை. ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
பாடசாலை விடுமுறைக்காலம் என்பதால் மனைவி மக்கள் எல்லோரும் சுவிஸில் இருக்கும் மனைவியின் சகோதரன் வீட்டிற்கு விடுமுறைக் கொண்டாட்டத்திற்கு போய்விட்டார்கள். நான் இருப்பது பிரான்ஸ் நாடு.
நேற்று இரவு சாப்பிட்ட மிச்ச சோற்றை பிறிச்சில் வைத்திருந்தேன். அதைத்தான் சூடாக்கி சாப்பிட தயாராகிக்கொண்டிருந்தேன். நாட்டில் இருக்கும் காலத்தில் எப்போதும் அம்மா மூன்று நேரமும் சமைத்துதான் சாப்பாடு தருவார். இங்கு நேரமிருந்தாலும் இது ஒரு பழக்கமாகிவிட்டது. வீடுகளில் இவை பற்றிக் கதைத்தால் யாதார்த்தம் விளங்காத பழங்கால மனிதன் என்ற திட்டை தாண்டி, அவர்களுக்கு எந்த உண்மையும் விளங்கப்போவதில்லை. நானும் வேலை அலுப்பில் விழுந்து படுக்கவேண்டியதுதான்.
சாப்பாட்டு மேசையில் இருந்துகொண்டு டிவியை போட்டு என் சாப்பாட்டுக்குள் கைவைக்கின்றேன், வீட்டு வாசல் மணியை யாரோ அடிக்கிறார்கள்.
கையில் அள்ளிய கவளத்தை அப்படியே போட்டுவிட்டு அரைக்காலில் நின்று என் இடப்பக்கமிருந்த ஜன்னல் சீலையை விலக்கி பாக்கின்றேன்.
அறுபத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பாட்டி. அவரையும் அவர் கணவரையும் எங்கள் வீதியில் பலமுறை போவதை பார்த்திருக்கின்றேன். சில நேரங்களில் என் மூன்று வயது மகனுடன் நின்று கதைத்துமிருக்கிறார்கள். ஆனால் ஒரு நாளும் வீட்டுக்குள் வந்தது கிடையாது.
நான் முழுதாக எழும்பி ஜன்னலை விலக்கி ‘என்ன பாட்டி?’ என்றேன்.
அழுதுகொண்டு அவசரமாக ‘மகன் ஒரு அவசரம் வாங்கோ’ என்று பதட்டப்பட்டார். நான் அவசர அவசரமாக மேசையிலிருந்த பேப்பரை எடுத்து கையை துடைத்துக்கொண்டு வாசலிலிருந்த செருப்பை போட்டுக்கொண்டு ஓடினேன்.
பாட்டி கையை உரிமையோடு பிடித்து இழுத்துகொண்டு படபடவென நடந்து கொண்டே ‘வீட்ட பிள்ளைகள் பேரப்பிள்ளைகளெல்லாம் கடலுக்கு போய்ரீனம் இவருக்கு திடீர் என்று நெஞ்சு நோ வந்துட்டு. நான் கோப்பி வச்சு குடுத்தன் நெஞ்ச உருவிட்டன். சற்று நேரம் நல்லாயிருந்தார், பிறகு துடிக்கிறார். எனக்கு டொக்டருக்கு ரெலிபோனடிக்க தெரியாது அதுதான் உங்களுட்ட வந்தனான்’ என்று அழுகையை அடக்கமுடியாமல் அழுதார்.
நான் என் பொக்கேற்றிலிருந்த டெலிபோனை எடுத்து பொம்பியஸ்சை (அவசர சேவை) அழைத்தேன்.
பாட்டி அவர் வீட்டுக்கு என்னை கையோடு கூட்டிக்கொண்டுபோனார். கட்டிலில் துடித்துக்கொண்டிருந்த பாட்டியின் கணவரின் கண்கள் மேல் சொருகிவிட்டது. நான் அவர் உள்ளங்கைகளையும் உள்ளங்காளையும் மாறி மாறி தேய்த்தேன். அவரால் எதுவும் பேச முடியவில்லை. மூச்சுவிட மிகவும் கடினப்பட்டுக்கொண்டிருந்தார், பாட்டி அருகில் நின்று அழுகிறார். பொம்பியஸ் வந்தது மூக்கிற்கு ஒட்சிசனை கொடுத்து அவரை ஏற்றிக்கொண்டு போனார்கள். பாட்டியும் குழறிக்கொண்டு வாசல் வரை போனார், பொம்பியஸ் வானில் ஏற முற்பட்டார். அவர்கள் ஏற்ற மறுத்துவிட்டார்கள் நான் பாட்டியிடம் மகனின் கைபேசியெண்ணை கேட்டேன் அதுவும் அவருக்கு தெரியவில்லை. நான் பாட்டிக்கு சற்று நேரம் ஆறுதல் சொல்லிவிட்டு, கணவனைக் கொண்டுபோகும் ஆஸ்பத்திரியின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி கொடுத்துவிட்டு என் வேலைக்கு புறப்பட்டேன்
அவர்கள் மகனார் வீட்டின் காவ்(நிலக்கீழறை)வில் குடியமர்த்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் வீட்டு சூழலைப் பார்க்கும்போது தனிக்குடித்தனம் போல்தான் இருந்தது. சூரிய வெளிச்சமோ காற்றோ போவதற்கு ஒரு சிறிய ஜன்னல் கூட இல்லை. முதுமையில் யாரும் உதவிக்கில்லாத இப்படியொரு அழுத்தமான வாழ்வுமுறை அவர்கள் வாழ்நாளை குறைத்துக்கொண்டேதான் இருக்கும்.
இரண்டு நாள் கழித்து நான் எங்கள் வீட்டுக்கருகில் உள்ள தமிழ்கடைக்கு போனேன். அங்கே ஒட்டப்பட்டிருந்த ஒரு மரண அறிவித்தலில் அந்த பெரியவரின் புகைப்படமிருந்தது. நான் அதை வாசித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு ஐந்து பிள்ளைகள் எல்லோரும் பிரான்ஸ், கனடா, யேர்மன் என்று திக்குதிக்காக இருந்தார்கள். கடைக்காரர் ‘இவரைத் தெரியுமா? நல்ல மனிதர்’ என்றார். என்னால் அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அன்று அந்த பாட்டி உதவிக்காய் என் வீட்டு மணி அடித்தது தான் நினைவில் வந்தது. என் மனக்கண்ணில் நாங்கள் மாதம் தவறாமல் காசனுப்பி பார்ப்பதாகச்சொல்லும் ஊரிலிருக்கும் அப்பா அம்மாதான் நினைவில் வந்தார்கள். நான் எதுவும் பேசாமல் கடைக்கு வெளியே வந்தேன்…
28-07-2020
ப.பார்தீ