உயரப்போகும் நவிகோ கட்டணம் !

கடந்த வாரம் நடைபெற்ற இல்-தெ-பிரான்ஸ் போக்குவரத்து நிர்வாக இயக்குனர்கள் சந்திப்பின் போது நவிகோ விலையை உயர்த்த வேண்டும் என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.

உயரும் நிதித் தேவைகளினால் Ile-de-France Mobilités நிறுவனம் இந்த கட்டண உயர்வு முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு யூரோக்கள் உயரப்போகிறது என்று உறுதி செய்யப்படாத நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் கூட உள்ள இதே இயக்குனர்கள் குழு, வாக்கெடுப்பின் அடிப்படையில் கட்டணத்தை முடிவு செய்யும்.

‘இதையெல்லாம் பார்க்கும்போது போக்குவரத்து கட்டணங்கள் கண்டிப்பாக உயரும் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை, கண்டிப்பாக தேவைப்படும் பட்சத்தில் அடுத்த வருடத்திலிருந்து நவிகோவின் கட்டணம் மாதம் 100 யூரோக்கள் எனுமளவு கூட நிர்ணயிக்கப்படலாம். ஆனால் என்ன காரணத்திற்காக மாநில அரசு நவிகோ கட்டணத்தை உயர்த்துகிறது?’ என பயணிகள் சங்கத்தின் தலைவர் மார்க் பெலிசியர் தெரிவித்துள்ளர்.

வருகின்ற 2024-ஆம் ஆண்டு 11 மற்றும் 14 ஆம் எண் புது மெட்ரோ போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

IDFM நிறுவனத்தின் தலைவர் வலேரி அடுத்தாண்டுக்கு 800 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கிற்கு அறுபது இலட்சம் பார்வையாளர்கள் வரவுள்ள நிலையில், போக்குவரத்து சேவையை அடுத்தாண்டு அதிகளவு மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

‘2015-ஆம் ஆண்டிற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் நவிகோ கட்டணம் உயர்த்தப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், கடந்த ஐந்தாண்டுகளாக நவிகோவின் கட்டணம் ஒரே விலையில் தான் இருந்தது’ என மார்க் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்திற்கு அரசு 52.5 சதவிகித அளவிற்கு நிதியுதவி அளிக்க ஒப்புக்கொண்டிருள்ளது. ஆனால், மீதமுள்ளதை பயணிகளும் நகர நிர்வாகங்களும் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

‘உள்ளூர் நிர்வாகத்தின் மீது போக்குவரத்து நிர்வாக சிக்கல்களை அரசு சுமத்த பார்க்கிறது. இது நகர நிர்வாகத்தை நெருக்கும். ஆனால், வரிகளின் வருவாய் நகர நிர்வாகத்திற்கு பகிரப்படாது’ என்று IDFM நிறுவனத்தின் எசோன் மாவட்ட தலைவர் பிரான்சுவா குற்றம்சாட்டியுள்ளார்.

இதையெல்லாம் சரிசெய்ய இன்னும் ஆறு மாத காலமே உள்ளன.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment