பாரிஸ் நகர மக்களும், பிரான்சின் மற்ற பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் 2023 புத்தாண்டை புகழ்பெற்ற ஆர்க் தெ திரையோம்ப் அருகே கொண்டாடினர்.
இரண்டு ஆண்டுகளாக நிலவிய கோவிட் நெருக்கடிகளுக்கு பிறகு, இந்தாண்டு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாம்ப்ஸ் எலிசீசில் பெருந்திரளாக கூடி 2023 புத்தாண்டை கொண்டாடி வரவேற்றுள்ளனர்.
பிரெஞ்சு அரசு நிர்வாகம் சுமார் 5 இலட்சம் மக்கள் வருவார்கள் என்று மட்டுமே எதிர்ப்பார்த்திருந்தது. 340 கிலோ வாண வேடிக்கைகளும், சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் நடு இரவில் நிகழ்த்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக சுமார் பத்து இலட்சம் மக்கள் கடும் காவல் கண்காணிப்பிற்கு, நெரிசலுக்கு நடுவிலும் சாம்ப்ஸ் எலீசில் பெருங்கூட்டமாக கூடினர்.
இறுதியாக சாம்ப்ஸ் எலீசிசில் புத்தாண்டு கொண்டாட்டம் 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 2,50,000 பேர் வந்திருந்தனர். 2020ஆம் ஆண்டு புத்தாண்டு நிகழ்வுகள் கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்தன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நேற்று பிரான்ஸ் முழுதும் 90 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாடு முழுதும் சுமார் 490 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.