கர்னல் தோட்டம்

உலக புத்தக தினத்தில் எதையாவது எழுதலாமே என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் என்ன எழுதுவது?

ம்ம்…புத்தகங்களை அறிமுகப்படுத்திய எனது பள்ளியைப் பற்றி எழுதினால் என்ன?

1997, ஜூன் மாதம்.

புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.

இரண்டாம் வகுப்பு சேர்ந்தபோது அப்பாவின் விரலைப் பிடித்தபடி, பள்ளி நுழைவு வாசலை ஒருவித பதற்றத்துடன் நெருங்கிய அந்த தருணம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

சுற்றிலும் அழகிய மரங்கள், பரந்து விரிந்த மைதானங்கள், உயர்ந்த கட்டிடங்கள் என பிரம்மாண்டமாக காட்சியளித்தது பள்ளி. அங்கிருக்கும் பாத்ரூம் அளவில் தான் நான் அதற்கு முன்பு படித்த ஒன்றாம் வகுப்புப் பள்ளி இருக்கும். அதனோடு ஒப்பிடும் போது இந்த பள்ளி ஒரு கடலைப் போலவே எனக்குத் தெரிந்தது.

அப்போது ஃபாதர் பீட்டர் ராஜேந்திரன் முதல்வராக இருந்தார். நர்சரி அண்டர் கிரவுண்டில் இருக்கும் 2nd std ‘C’ section ல் எனக்கு அட்மிஷன் கிடைத்தது.

தினமும் காலை 9 மணிக்கு ப்ரேயர் ஆரம்பித்து விடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நல்லொழுக்கப் பாடலைப் பாட வேண்டும். ஒவ்வொரு பாடலையும் அதன் ராகத்திற்கு ஏற்ப ஏற்றி இறக்கி பாடுவோம். அதிலும் புதன்கிழமைதோறும் பாடும், ‘உழைப்பின் நல் மேன்மையை நாம் உணர்ந்திடுவோம்…உழைப்பினால் உயர்ந்திடுவோம்…’ என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட். இன்றும் அடிக்கடி அந்த பாடல்களை அவ்வபோது உள்ளுக்குள் முனுமுனுப்பதுண்டு.

‘இந்த உலகில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது?’ என்ற கேள்வி திரைப்பட இயக்குனர் வஸந்த்திடம் ஒருமுறை கேட்கப்பட்டது. என் பள்ளியின் முன்னால் மாணவரான அவர், ‘என் பள்ளியில் பெரிய மைதானம் ஒன்று இருக்கும். அதற்கு அருகில் இருக்கும் ஸ்டோன் பென்ச்சில் போய் சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும். என் கவலை எதுவாக இருந்தாலும் மறைந்து விடும்’ என சொல்லியிருப்பார். 

உண்மைதான்.

இன்றும் அவ்வழியே செல்லும்போது சிறிது நேரம் ஸ்டோன் பென்ச்சில் உட்கார்ந்துவிட்டுத் தான் அங்கிருந்து நகர்வேன். சில நினைவுகளை அது மீட்டுத்தரும்.

நர்சரி பள்ளி மைதானத்தின் அருகே கேன்டீன் ஒன்று இருக்கும். அங்கு ஒரு சமோசா, இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும். பள்ளி இடைவேளையின் போது முட்டி மோதிக்கொண்டு அதை வாங்கி சாப்பிடுவோம். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஒருமுறை அதே சமோசாவைத் தேடி கேன்டீன் சென்றேன். ஆனால் அப்போது அந்த கேன்டீன் அங்கு இல்லை. கல்லூரி வளாகத்தை விரிவுபடுத்த கேன்டீனை வேறு இடத்தில் இடமாற்றம் செய்திருந்தனர். 

அதன்பிறகு அந்த சமோசாவைத் தேடி நான் போகவேயில்லை.

PET பீரியட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் நண்பர்களை வேடிக்கை பார்ப்பது தான் எனக்கும் ஸ்போர்ட்சுக்கும் இருந்த அதிகபட்ச உறவு. உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஒருவரின் பெயர் கூட என் நினைவுக்கு வரவில்லை. எங்கள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர்களின் முதன்மையான வேலையே ப்ரேயருக்கு தாமதமாக வரும் மாணவர்களை வரிசையில் நிக்க வைத்து பிரம்பால் வெளுத்து வாங்குவது தான்.

ஆனால் சாரணர் இயக்கத்தில் நான் இருந்தேன். ஆடிட்டோரியம் அருகில் இருக்கும் மரத்தின் நிழலில் தான் வகுப்புகள் நடைபெறும். செல்வநாதன்  சார் பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது. ‘பாரத ஸ்கவுட்டு, கைடு ஜண்டா ஊஞ்சா சதா ரஹேகா….’ என்று ஆரம்பிக்கும் அந்த பாடலைப் பாடும்போது பள்ளியே அதிரும். 

ஒவ்வொரு வருடமும் எங்களை புகைப்படம் எடுக்க ‘அன்னை ஸ்டுடியோ’வில் இருந்து ஒருவர் வருவார். பள்ளியில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் அவர் தான் போட்டோகிராபர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்த செய்தியைக் கேட்ட போது மனம் கனத்தது. பள்ளியின் நினைவாக என் கையில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவர் இருக்கவே செய்கிறார். 

ஆறாம் வகுப்பு சேரும் போது பென்சிலில் இருந்து போனாவிற்கு மாறுவோம். அது தான் எங்களுக்கு பள்ளியில் தரப்படும் உயரிய கௌரவம்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் ‘வீக்லி டெஸ்ட்’ ஒன்று வைப்பார்கள். 25 மதிப்பெண்கள். பேப்பர் கட்டுகள் AHM ரூமில் இருக்கும். அதை யார் முதலில் கொண்டுவருவது என்ற போட்டி நடைபெறும். அந்தந்த வகுப்பின் ஆசிரியர்கள் வரும்போது, ரோல் நம்பரைச் சொல்லி பேப்பரை வழங்குவர். 

ஃபெயில் ஆகும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு முறையில் சிகிச்சை அளிக்கப்படும். சிலர் கையை நீட்டச் சொல்லி பிரம்பால் ஓங்கி அடிப்பார்கள். சிலர் மர ஸ்கேலை விரல்களின் இடுக்கில் வைத்து அழுத்துவார்கள். 

டேவிட் ராஜ் சார், திருமுகம் சார், இளங்கோ ஐயா, பி.எம். ஆன்டனி ராஜ் சார், பால் சூசை சார், ஆரோக்கிய ராஜ் சார், மரிய அந்துவான் சார் போன்றோர் இன்றும் என் இணைப்பில் இருப்பவர்கள். என்னால் மறந்திட முடியாதவர்கள்.

அதிலும் எங்கள் தமிழாசிரியர் இளங்கோ ஐயா அவர்கள் அடிக்கடி 1967 ஆம் ஆண்டைப் பற்றி வகுப்பில் பேசுவார். அப்போது அவர் பேசிய அரசியல் நீண்ட நாள்களுக்குப் பிறகே எனக்குப் புரிந்தது. நான் மதிக்கும் ஒரே தலைவர் காமராஜர் மீது எனக்கு ஈர்ப்பு வர அவரும் ஒரு காரணம்.

நான் பத்தாம் வகுப்பிற்குத் தாவியபோது பள்ளி நிர்வாகம் ஒரு புது முயற்சியை செய்து பார்த்தது. நன்கு படிக்கும் மாணவர்களை ஒன்றாக இணைத்து ஒரே வகுப்பில் போடுவது தான் அது. 

10 – I வகுப்பில் அப்படிப்பட்ட ஒரு அடையாளத்தோடு தான் நாங்கள் இருந்தோம். அப்போது அது ஒரு விவாதப் பொருளாக இருந்தாலும் ஓரளவிற்கு கை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த ஆண்டில் நண்பன் இ.கார்த்திகேயன் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தான்.

நான் படிக்கும்போது ஃபாதர் பீட்டர் ராஜேந்திரனைத் தவிர ஃபாதர் அருள் தாஸ் மற்றும் ஃபாதர் ஏக்னல் அவர்களின் பீரியட். அருள்தாஸ் ஃபாதரின் ஆக்கமும், ஆக்னல் ஃபாதரின் தங்கு தடையற்ற தமிழ் உச்சரிப்பும் என் கவனத்தை ஈர்க்கும். ‘ரத்தின சுருக்கம்’ என்ற வார்த்தையை ஃபாதர் ஆக்னல் அடிக்கடி பயன்படுத்துவார்.

வருடம் ஒரு முறை பாண்டிக்கு Field Trip அழைத்துப் போவார்கள். ஏதோ வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதைப் போன்ற உற்சாகம் பிறக்கும். பாண்டி பீச், பார்க், அக்வாரியம் செல்வோம். வரும் வழியில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரிக்கு அழைத்து செல்வார்கள். வீட்டின் அருகிலேயே கிடைக்கும் அதே ‘மில்கா பிக்கிஸ் பிஸ்கட்’ அங்கு ஏனோ மிகவும் சுவையாக இருக்கும்.

மீசை அரும்பிய காலத்தில் மனம் பெண்களின் வாசத்தைத் தேடும். 

பாய்ஸ் ஸ்கூலில் பெண்களுக்கு எங்கே போவது? இருக்கவே இருக்கிறது ட்யூஷன். சொல்லப்படாத காதல்கள் அங்கே நிறைய உண்டு.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 1. 

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த நேரம். தானே புயலால், பள்ளியில் உள்ள அனைத்து மரங்களும் அடித்து நொறுங்கிப்போயிருந்தன. நான் எப்போதும் உட்கார்ந்து படிக்கும் அந்த மரமும் விழுந்து கிடந்தது. அடிபட்டு உயிருக்காகப் போராடி தோற்ற ஒரு சிங்கம், கண்மூடி சாய்ந்திருப்பது போலவே அது எனக்கு அப்போது தெரிந்தது. 

பள்ளியில் எங்கள் ஆசிரியர்கள் பொது புத்தகங்களைப் பற்றி ஒருநாளும் பேசியது கிடையாது. பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால் போதுமானது. விதிவிலக்காக என் பன்னிரெண்டாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் ரொசாரியோ சார், வெ.இறையன்பு இயற்றிய, ‘மென்காற்றில் விளை சுகமே’ என்ற புத்தகத்தைப் பற்றி பேசி படிக்கச் சொன்னார். அதுதான் நான் முதன்முதலாக பாட புத்தகத்தைத் தவிர்த்து நான் படித்த முதல் வெளி புத்தகம். இன்றும் என் புத்தக அலமாரியில் முதன்மையான ஒரு இடம் அதற்கு உண்டு.

சென்ற ஆண்டு என் பள்ளியின் 150 வது ஆண்டு விழா நடந்தேறியது. திருமுகம் சார் மற்றும் அலுமினி உறுப்பினர்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பழைய நண்பர்கள், ஆசிரியர்கள் என நிறைய நினைவுகளை அந்நாள் அள்ளித்தந்தது.

இத்தனை பழமை வாய்ந்த என் பள்ளியில் பயின்ற எண்ணற்ற சாதனையாளர்கள் உலகம் முழுக்க உள்ளனர். ஆனால் அவர்கள் ஏனோ அழைக்கப்படவில்லை. வெறுமென செல்போன் ஒளியை மிதக்கவிட்டு விழாவை முடித்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. விரைவில் மீண்டும் ஒரு பள்ளி விழாவிற்காக காத்திருக்கிறேன்.

இது கடுகளவு பகிர்தல் மட்டுமே. ஆனால் மனதிலிருந்து நீங்காத நினைவுகள் இன்னும் நிறைய உள்ளன. அவற்றை அள்ளி அள்ளி கொடுத்து, தித்திக்க வைத்திடும் எம் பள்ளி கர்னல் தோட்டம், அது ஒரு கரும்புத் தோட்டம்.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment