பிரான்சு முழுவதும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் !

நவம்பர் 15 திங்கள் முதல், பிரான்சில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் சுகாதார நெறிமுறையின் 2 ஆம் நிலைக்குச் செல்லும் என தேசிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 9, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி பிரான்சு நாடு முழுவதும், பிரான்சின் கடல் கடந்த நிர்வாகப்பகுதிகளிலும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

“தொற்றுநோயிலிருந்து மீளும் இந்த சூழலில், நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து தளர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரிந்தாலும், பள்ளியில் முகமூடி அணிவது இப்போதைக்கு கட்டாயமாகப் பின்பற்றப்படும்” என்று செவ்வாய்க்கிழமை தனது உரையின் போது அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

நவம்பர் 8 திங்கள் முதல் அனைத்து புனிதர்கள் விழா விடுமுறைக்காலம் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து 40 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முகமூடி மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

சுகாதார நெறிமுறையின் நிலை 1-இன் படி அமைக்கப்பட்ட அளவுகோல், 100,000 மக்களுக்கு 50 நோயாளிகளுக்கும் குறைவான விகிதத்தில் இருக்க வேண்டும். நெறிமுறையின் 3 ஆம் மட்டத்தில் இருந்த பள்ளிகள் அதே மட்டத்திலேயே இருக்கும் என்று அமைச்சகம் குறிப்பிடுகிறது.

மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் (மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம்) மக்களுக்கு கோவிடுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் ஐரோப்பாவின் தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment