இலக்கியம்கட்டுரைகள்

பால் சர்பத்தும், பாரசீக பண்பாட்டுத் தழுவலும் : ஒரு வரலாறு

இன்றும் மின்ட் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் சௌகார்பேட்டைக்கு போனால், அங்கே பாதாம், முந்திரியுடன், ஈரானிய பாதாம் பிசின் ஆகியவை மொத்த விற்பனை கடைகளிலும் குடோன்களிலும் கிடைக்கும்.

அது அங்கே எப்படி வந்தது என்பது அடுத்த கேள்வி…

தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளில் உள்ள முஸ்லிம் சமூகங்களில் பாதாம் பிசின் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் (உனானி/திப்), சமையல் மற்றும் மதச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நன்மைகள் இஸ்லாமிய யுனானி மருத்துவம், முகலாய உணவு பண்பாடு மற்றும் தலைமுறைகளாக அனுசரித்து வரும் வீட்டு மருத்துவமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தினார். பாதம் பிசின் போன்ற பிசின் வகைகள் (எ.கா. அராபிய கம்/ “சம்க்-இ-அரபி”) செரிமானம் மற்றும் காயங்களை ஆற்றுவதற்கு பயன்பட்டன. இப்னு சீனா (அவிசென்னா) தனது “அல்-கானூன்” நூலில் இதைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: உடலின் வீக்கத்தை குறைப்பதற்கு, வயிற்றை பலப்படுத்துவதற்கு, இருமலை கட்டுப்படுத்த, நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு, மூட்டு ஆரோக்கியதற்கு, பிரசவத்திற்கு பின் உடலை வலுப்படுத்துவதற்கு மற்றும் சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள என யுனானி மருத்துவத்தில் பாதாம் பிசின் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

இரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முதன் முதலில் பாதம் மர பட்டைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பாதாம் பிசின் அரேபிய வணிகர்களால் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.

வரலாறு முழுவதிலும் முதலில் பட்டு வழி சாலை மற்றும் பாரசீக வணிக வழிகளிலும் இந்தியா வந்த பாதாம் பிசின், முகலாய மன்னர்கள் ஆண்ட பகுதிகளிலும், மலபார் பகுதிகளில் மருத்துவத்திலும், சமையலிலும் பயன்படுத்தப்பட்டது. பின்பு, வரலாற்றின் பிற்பகுதிகளில் இன்னும் சில அரேபிய நாடுகளில் இருந்தும், கடல் வழியாக 18 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியாலும் இந்தியாவிற்குள் அதிக அளவில் நுழைந்தது. மதராஸ் மாகாணத்தில் வருவதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் வடசென்னை ஜார்ஜ் டவுனில் வசித்த லெப்பை, மரைக்காயர் மற்றும் மின்டில் வசித்த பாரசீக-அரேபிய பகுதி வணிகர்கள். அன்று முதல் இன்று வரை, அரபியர்கள் துவங்கி, மார்வாடிகள் வரை பாதாம் பிசினின் வணிகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வடசென்னையில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் தான் இன்று வரை நாங்கள் பாதம் பிசினை வாங்குகிறோம். மேலே சொன்ன வடசென்னை பகுதிகளை சுற்றி தான் இன்று வரை பால் சர்பத் புகழோடு திகழ்கிறது. அங்கே இருந்த யுனானி மருத்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்ட போதிலும், மருத்துவத்தில் இருந்து சுவை மிகும் பானமாக மாறிய பால் ஷர்பத் இன்னும் இங்கேயேதான் இருக்கிறது.

பால் ஷர்பத் தழைத்ததற்கு காரணம் அதை இங்கே கொண்டு வந்தவர்கள் அல்ல. மாறாக யுனானி மருத்துவம் முறைகளை கற்ற விளிம்பு நிலை இஸ்லாமியர்கள். குறிப்பாக பட்டியல் சமூகமாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய தக்கனி இஸ்லாமியர்கள். உடல் நலம் பெறுவதற்காகத் தான் முதலில் இந்த சர்பத்தை தயாரித்து விற்க ஆரம்பித்தார்கள். அப்படி துவங்கி இன்னும் நிலைத்திருப்பது தான் இதன் சிறப்புக்கு சான்று.

திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் சுற்றி இருக்கும், மஞ்சள் காமாலையை போக்கும், பச்சை பான புகழ் மருத்துவ நிலையங்கள். மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை திரவங்களில் சேர்த்து ஷர்பத் தயாரித்து அவைகள் மூலமாக நோய்களை குணப்படுத்துவதை யுனானி மருத்துவர்கள் வெற்றிகரமாக கையாண்டார்கள். அதன் ஒரு வடிவமே இன்றைய பால் ஷர்பத்.

வடசென்னையை பொறுத்தமட்டில் பால் ஷர்பத் இங்கே தழைக்க இன்னுமொரு முக்கிய காரணம் உள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு 1964 ஆம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகம் மிக பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. உலகம் முழுதும் இருந்து வரும் கச்சா எண்ணெய், இரும்பு, பெட்ரோல், உர வகைகள் மற்றும் பல பொருட்களை இங்கே வரவைக்க இறக்குமதிக்காக பிரிட்டிஷ் காலத்தில் இருந்ததைவிட பல மடங்கு துறைமுகம் பெரிதாக்கபட்டது. அப்பொழுது அங்கே வேலை செய்ய லோடுமேன்கள் தேவைப்பட, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இடைக்கழிநாடு மற்றும் சூணாம்பேடு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பட்டியல் சமூக ஆண்கள் வேலைக்கு எடுத்து கொள்ளப்பட்டார்கள் என்று சொல்கிறார் துறைமுக பணியாளர் சங்கத்தின் இயக்குனர் திரு.பாபு மயிலான் அவர்கள். அவர்கள் அனைவரையும் அரசாங்கம் அதிக பளு தூக்கும் வேளைகளில் ஈடுபடுத்தியது. பட்டியலினம் அதற்கு தானே எப்பொழுதும் பயன்பட்டிருக்கிறது?

அந்த காலகட்டத்தில், அங்கு வேலைக்கு சேர்ந்தவர்கள் அதீத வெயிலால் அவதியுற்றனர். சூனாமேடு மற்றும் இடைக்கழிநாடு அதிக தென்னை மரங்களும், பனை மரங்களும், விளை நிலங்களும் அதிகம் சூழ்ந்த பகுதி. வெயில் எவ்வளவு அடித்தாலும் குளு குளு என்று இருக்கும். எனக்கு எப்படி தெரியும் என்று வியப்பீர்கள்…

எனக்குத் தெரியும். ஏனென்றால் என் அம்மாவின் தங்கையின் கணவர் மாசிலாமணி இடைக்கழி நாட்டை சேர்ந்தவர், துறைமுகத்தில் தான் அவர் லோடுமேனாக பணி செய்தார். நான் பல முறை அந்த கிராமத்திற்கு சென்றுள்ளேன். அங்கே வெயில் தெரியாமல் இருக்க மரங்களின் கீழே அமர்ந்து இளநீர் மற்றும் நுங்கை காலை முதல் மாலை வரை சுவைத்து கொண்டே இருப்போம். அவர்கள் இளநீருக்கும், நுங்கிற்கும் அடிமையானவர்கள். ஆகவே துறைமுகத்தில் வெயிலில் வேலை செய்யும் பொழுது அவர்களின் தாகம் தீர்க்க, உடலை குளிர்விக்க அவர்களுக்கு பால் ஷர்பத் அதீத உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நுங்கின் பதத்தில் இருந்த பாதாம் பிசின். அவர்களுக்கு பாதாம் பிசினில் தன்மையும், ருசியும் நுங்கை ஞாபகப்படுத்தியது. பால் ஷர்பத் வியாபாரம் சூடு பிடித்ததற்கு காரணம் மின்ட், பிராட்வே ,துறைமுகம் ஆகிய பகுதிகளில் வேலை செய்த விளிம்பு நிலை தொழிலாளர்கள் மற்றும் அங்கே குவிந்த வணிகர்கள். பெரம்பூரை பொறுத்தவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிம்ப்சன் கம்பெனி தொழிலாளர்கள்.

பாரசீகத்தில் மன்னர்களுக்கு சுகமளித்த, ருசியளித்த பால் ஷர்பத் இப்படியாக வடசென்னையில் உழைக்கும் வர்க்க மக்களுக்கும் அதே வேலையை செய்தது. உணவின் உன்னதம் இது. இயற்கையின் சமநிலை இது.

எவ்வளவு அற்புதமான விஷயம்?

பாரசீகத்துக்கும் ஈரானுக்கும் மெட்ராசுக்குமான இந்த தொடர்பை உறுதி செய்கிறது 1820 ஆம் ஆண்டின் மெட்ராஸ் துறைமுக பதிவேடு. இன்றும் கூட அதை ஈரானிய பாதம் கோந்து என்று தான் மெட்ராஸ் ஜார்ஜ் டவுன் மார்க்கெட்டுகளில் அழைக்கிறார்கள். பழைய மெட்ராஸ் மருத்துவ ஏடுகளில் அதனை “இபுன் ஏ பாதாம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். என்னை பொறுத்தவரை அமிர்தத்தை எந்த பெயரில் அழைத்தால் என்ன?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பால் ஷர்பத்திற்கு பின்னால் இருக்கும் மருத்துவத்தையும், ருசியையும் விட அதன் வரலாறு என்னை இன்னும் வியப்பூட்டுகிறது. ஒரு பானம் எங்கிருந்து பயணித்து, எங்கே வந்து, அந்த ஊரின் பானமாக இயல்பாக மாறி விடுகிறது பாருங்கள் .

நாம் உண்ணும் உணவிற்கு பின்னால் எத்தனை வரலாறு, எத்தனை விஷயங்கள்!

நான் மேலே எழுதிய எதுவும் என் அம்மாவுக்கு இது வரை தெரியாது. ஆனால் அம்மா அதை வயிற்று புண்ணுக்கு என்று சரியாக குடித்தாள். என் அம்மாச்சிக்கு யுனானி என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், அவருக்கு மனங்களை பயங்கள் மூலம் குளிர்விக்கும் மருத்துவம் தெரியும்.

90-களுக்குப் பின்பு நிறைய இஸ்லாமியர்கள் வடசென்னையில் இந்த ஷர்பத் தொழிலை விட்டுவிட்டார்கள். தற்பொழுது பால் ஷர்பத், பால் விற்பனை செய்யும் தெலுங்கு இடைநிலை சாதிகளிடம் தான் உள்ளது. அவர்களிடம் பணம் அதிகமாக புழங்குவதும், மக்கள் உணவில் பிரிவினை பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்பதையும் இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஆனால் சுவை முன்பு போல் இல்லை. பாலில் தண்ணீர் அதிகமிருக்கிறது, மலாய் போடுவதில்லை, பாதாம் பிசினின் அளவை குறைத்துவிட்டு, துளசி விதையை சேர்த்துவிடுகிறர்கள் .

வேறு வழி இல்லாமல் கடந்த பத்து வருடங்களாக வீட்டிலேயே செய்ய ஆரம்பித்து இருக்கிறோம். சுவையை விட அந்த பானம் தரும் நாஸ்டால்ஜியா எங்கள் பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

நாஸ்டால்ஜியாவிற்கு “நினைவேக்கம்” என்ற தமிழாக்கத்தை நண்பர் ஒருவர் தந்தார். அம்மாச்சி உலகில் இல்லை.

ஆனால் முலாம் பழமும், பால் ஷர்பத்தும், இன்னும் சில வாசனைகளும் அந்த இடத்தில் அப்படியே இருக்கின்றன, நீளா ‘நினைவேக்கங்களாக’…

Previous page 1 2

Shalin Maria Lawrence

Author, Columnist, Intersectional feminist and Human rights defender

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button