இன்று மாலை ஆறு மணி அளவில் வெளியே கிளம்பிய பொழுது கிழக்கில் முழு நிலவு.

ஓ! இன்று சித்ரா பவுர்ணமி போல என்று நினைத்துக் கொண்டு சென்றேன். மனதில் சிறு பையனாக இருந்த பொழுது சித்திரை முழு நிலவை அப்பா அம்மா, சகோதரர்கள், தங்கையுடன் கொண்டாடிய நினைவலைகள் நிழாலாடியது. அப்பொழுது திருச்சிக்கு மேற்கே கரூர் செல்லும் வழியில் அகண்ட காவிரி ஓடும் லாலாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பாவிற்கு காவல்துறையில் பணி. எனக்கு அவ்வளவு விபரம் தெரியாத வயது.

அன்று மதிய உணவிற்கு மேல் கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளும் அம்மா திடீரென பல்வேறு கலவை சோறுகள் (சித்ரான்னம்) செய்யத் தொடங்கினர். கூடவே கேசரி, வடை, பச்சி, பக்கோடா என்று சிற்றுண்டிகள் வேறு. மாலை ஏழு மணிக்கு அப்பா வீட்டுக்கு வந்த உடன் வெளியே விளையாடிக் கொண்டிருந்த எங்களைக் கூப்பிட்டு “கைகால் அலம்பி வாருங்கள். வெளியே செல்ல வேண்டும்” என்றார். எங்களுக்கு ஆச்சரியம். அம்மா வேறு விதவிதமாக உணவு, சிற்றுண்டிகள் செய்துள்ளார். ‘இப்ப சாப்பிடாமா எங்க போறோம்?’ என்று குழப்பம்.

அப்போது எங்கள் குடியிருப்பின் பின்னால் ஒரு டென்ட் சினிமா கொட்டகை இருந்தது. இரவுக்காட்சி பத்தரை மணிக்குதானே என்று குழப்பம் வேறு. அதற்குள் அம்மா செய்த உணவுகளை ஈயம் பூசிய பித்தளை ஐந்தடுக்கு சாப்பாட்டு கேரியர், மற்றும் தூக்குகளில் போட்டு பேக் செய்து விட்டார். ப்ளாஸ்க்கில் சுடச்சுட காப்பி வேறு. அவரும் மாற்றுடை உடுத்தி, கதம்ப சரத்தை பின்னலில் சொருகி வழக்கமாக வெளியே செல்லும் அலங்காரத்தில் தயார். நானும் உடன் பிறந்தவர்களொடு உடைமாற்றி ரெடியானோம். நான் அம்மாவிடம் சென்று “எங்கம்மா போறோம். திருச்சி அத்தை வீட்டிற்கா” என்று கேட்டேன்.

அப்பா சிரித்துக் கொண்டே “வாங்கடா போலாம்’ என்று கதவைப் பூட்டிவிட்டு கேரியரைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். கடைக்குட்டித் தங்கையை அண்ணன் தூக்கிக்கொள்ள நானும், தம்பியும் கூடவே சென்றோம். இந்த இடத்தில் ஊர் பற்றி சில தகவல்கள். திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை லாலாப்பேட்டை வரை காவிரிக்கரையை ஒட்டியே வந்து அங்கு ஆற்றை விட்டு சற்று விலகி இடப்புறமாக தெற்கு நோக்கி திரும்பி மீண்டும் மேற்கில் செல்லும். அந்த இடத்தில் சமீபத்தில் சுங்கவரிச்சாலை வந்ததும் இப்பொழுது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

முன்பு இங்கு ஒரு ரயில்வே கேட் இருந்தது. அதன் பிறகு மாயனூர் தென்கரை கால்வாயை கடக்கும் பாலம் ஒன்றும், பாசனக் கால்வாய் ஒன்றின் சிறு பாலமும் உண்டு. லாலாப்பேட்டையும் அதற்கு நேரெதிர் வடக்கில் தொட்டியம் என்ற ஊர் திருச்சி – சேலம் சாலையில் இருக்கிறது. காவிர்ப் பாசனம் என்பதால் வாழைதான் பிரதானமாக பயிரிடப்படும். அதிலும் ரஸ்தாளி ரகம்தான் இங்கு புகழ்பெற்றது. இன்று அதற்கு புவிசார் காப்புரிமை கூட உண்டு என்று நினைக்கிறேன். இந்த மேம்பாலம் வருவதற்கு முன்பு இங்கு ரயில்வே கேட் அடிக்கடி போடப்பட்டு பழ வியாபாரம் ஜரூராக நடக்கும்.

இன்று காவிரி மணற்கொள்ளையின் தலைமை இடமாகத் திகழும் இப்பகுதி அன்று மணல் பரந்து விரிந்த அகண்ட காவிரியாக கோடைக்காலத்தில் சிலுசிலுவென ஆங்காங்கே நீரோட்டத்துடன் ரம்மியமாக இருக்கும். அதுவும் சித்திரை முழு நிலவில் காண்பதற்கு விவரிக்க சொற்கள் இல்லை. சாலையின் ஓரத்தில் கருப்பத்தூர் கருப்புசாமி கோவில் ஒன்று இருந்தது. அப்போது நீரோடும் காலத்தில் தொட்டியத்திற்கு பரிசல் போக்குவரத்து உண்டு. அந்தத் துறை வழியாக இறங்கி ஆற்றின் நடுவே சென்று ஜமக்காளம் விரித்து அமர்ந்தோம்.

சுற்றிலும் வெண்மணல் தூவி நிறைந்த ஆற்றில் சித்திரை முழு நிலவின் ஒளி போர்த்தி ஆங்காங்கே ஓடும் தெளிந்த நீரோடையில் ஜொலித்த நிலா ஏதோ ஒரு மாய உலகை சிருஷ்டித்து வைத்திருந்தது. அம்மா கொண்டு வந்திருந்த உணவுகளை சிறிது சிறிதாக கையில் கொடுக்க உண்டு முடித்தோம். பிறகு என்ன உண்ட உணவு செறிக்கும் வரை விளையாட்டு. அன்று அப்பாவுடன் மணலில் ஓட்டப்பந்தயம் ஓடி ஜெயித்தது போல பெற்ற வெற்றி இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் அப்பாக்களை வெல்வது அவ்வளவு சுலபமல்ல.
உண்மையில் வாழ்வின் சுமைகள் தெரியாத ‘அது ஒரு நிலாக்காலம்’.

பிறகு 1991ல் கும்பகோணத்தில் வேலை. பல இலக்கிய ஜாம்பவான்கள் புழங்கிய ஊர். சோழ வரலாற்று கதைகளிலும், இலக்கியங்களிலும் பிரதானம் பெற்ற நகர். அரசலாற்றுக் கரையில் ‘குடந்தை ஜோதிடர்’ குடிசை எங்கிருந்திருக்கும் என்று உத்தேசமாக தேடியதெல்லாம் உண்டு. இங்கும் சித்திரை நிலவு அனுபவம் உண்டு. அதற்கு பிறகு வருகிறேன். அப்பொழுது குடந்தையில் ஜாகை என்றாலும், மாதத்தில் இருமுறை மயிலாடுதுறையில் தங்கி வேலை பார்ப்பது பணியின் ஒரு அங்கம். மருத்துவ விற்பனைப் பிரதிநிதி. ஊரைச் சுற்றியுள்ள நாற்திசைகளில் இருக்கும் கிழக்கு கடற்கரையோர சிறு நகரங்களுக்கு செல்ல வேண்டும். அதில் ஒன்றுதான் பூம்புகார் அருகிலுள்ள திருவெண்காடு.

சாண்டில்யனின் ‘யவனராணி’ காட்டும் புகார்மீது பெரும் மயக்கம் உண்டு. அதுவும் ‘இந்திரவிழா’ சித்தரிக்கும் காதலர் விழா கள்வெறி கொள்ளச் செய்த இளம்பருவம். அறை நண்பரும் ஒத்த மன அலையை உடையவர். ஒரு சித்திராப் பவுர்ணமி அன்று மதியம் கிளம்பி மயிலாடுதுறையில் தங்கினோம். அவர் அப்பகுதியை சேர்ந்தவர் என்பதால் நண்பர் ஒருவருடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஆளுக்கு இரண்டு பியர் போத்தல்கள் என அளவாக வாங்கிக் கொண்டு பைக்கை குதிரையாக நினைத்துக் கொண்டு பயணித்தோம். அன்று பாமகவின் சித்திரை விழாவெல்லாம் கிடையாது. நாங்கள் போய் சேர்ந்த எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்கி தெரு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுமினுத்தது.

அன்றைய பூம்புகாரில் நுழைவதற்கு முன்பாக கலைஞர் நிறுவிய சில வலைவுகளும், கட்டிடங்கள் மட்டுமே உண்டு. ஊர் என்று எதுவும் இல்லை. பகலில் சென்றால் சில பெட்டிக் கடைகள் இருக்கும். இரவில் நிலவொளி தவிர்த்து கடற்கரை ஓரத்தில் ஒன்றுமில்லை. சென்னை கடற்கரையை பார்த்து மகிழ்ந்த சிலருக்கு அதை பீச் என்று சொன்னால் எட்டி மிதிப்பார்கள்.
ஊர் பெயருக்கு ஏற்றவாறு கார் நிறத்து மணல் உடைய சுமார் பத்தடி பரப்பு கொண்ட கடற்கரை. பவுர்ணமி தினத்தில் வழக்கத்துக்கு அதிகமாக எழும் அலைகள் சற்று மிரட்டும்.

கடற்கரை அருகே சென்ற எங்களுக்கு அந்த நிசப்தமான ஏகாந்த சூழ்நிலை எங்களை பரவசத்தில் ஆழ்த்த பைக்கை ஒரமாக நிறுத்திவிட்டு, காலை நீட்டி கடலலைகள் காலில் உரசுமாறு அமர்ந்து பியர் போத்தலை திறந்து வாயில் கவிழ்த்தோம். அன்றைய பேசு பொருள் மிகுதியும் சாண்டில்யனின் கதைகள்தான்.

ஓரிரு கவிதைகள், சில இலக்கிய சர்ச்சைகள். அருந்திய பியர், புகாரின் கதைகள் என்று லேசான மயக்கத்தில் மல்லாந்து கண்ணயர்ந்தோம். திடீரென பரதவர்கள் கள்ளுண்டு வெறிக்கூச்சலுடன் தங்கள் காதலிகளை துரத்துவது போல ஒரு பிரம்மை. சட்டென்று விழித்து பைக் நிற்கும் இடத்தைப் பார்த்தோம். எழுந்து அமைதியாக கிளம்பி மயிலாடுதுறை சேர்ந்தோம்.

அதே கும்பகோணத்தில் இருந்த பொழுதுதான் 1993ல் எனக்கு மணமானது. 1994லில் மீண்டும் சித்ரா பவுர்ணமி. மாடியில் குடியிருப்பு. கீழே வீட்டின் உரிமையாளர் (இனி அம்மா) பருவம் அடைந்த மூன்று மகள்களுடன் இருந்தார். அவர்களின் தந்தையும் எங்கள் துறையில் வேலை பார்த்து எனது திருமணத்திற்கு முன்பு மறைந்து விட்டார். எங்களுக்கெல்லாம் மூத்த முதல் தலைமுறை விற்பனைப் பிரதிநிதி. எனக்கும் நன்கு அறிமுகமானவர். கிட்டத்தட்ட அந்தக் குடும்பத்திற்கு ஒரு காப்பாளனாக நண்பர்கள் என்னை அங்கு குடியமர்த்தினர். என்றோ நான் செய்த நற்காரியத்தின் பலனாக எனக்கு மேலும் மூன்று தங்கைகள் வாய்க்கப் பெற்றனர். என்னிடமும், மனைவியிடமும் அளவில்லாத பாசம் கொண்டவர்கள். இன்றும் தொடர்பில் உள்ளவர்கள்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் மட்டுமே அங்கிருந்தேன். எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்கள் மிக்கது அந்த சில மாதங்கள். நண்பர்கள் பலரும் எந்தவித தயக்கமும் இன்றி நேரம் காலம் இல்லாமல் வீட்டிற்கு உரிமையுடன் வந்து செல்வர். நான் இருக்கிறேன் இல்லை என்ற பேதம் கிடையாது. எனது நண்பர்கள் குழு அனைவரும் வீட்டு அம்மாவின் குடும்பத்துக்கு நன்கு தெரிந்தவர்கள். இப்படியான ஒரு காலத்தில் மீண்டும் சித்திரை முழு நிலவு. நண்பர்கள் சிலர், தங்கைகள் என எல்லோரும் சேர்ந்து நிலாச்சோறு வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். பிறகென்ன மதியம்
எல்லோரும் சேர்ந்து விதவிதமாக சித்ரான்னங்கள், சிற்றுண்டிகள் என்று ஒரே அமர்க்களம்.

இரவு ஒன்பது மணிக்கு மொட்டை மாடியில் தொடங்கிய நிலாச்சோறு நள்ளிரவில் முடிவுற்றது ஒரு மறக்க இயலாத நினைவின் படிமங்கள். அதன் பிறகும் சில சித்ரா பவுர்ணமிகள் உண்டு. சென்னை வந்த பிறகு பூம்புகார் சென்ற நண்பருடன் சில வருடங்கள் பெசன்ட்நகர் கடற்கரைக்குச் சென்று இரவு பத்து மணி வரை நிலவொளியில் அமர்ந்து உரையாடிவிட்டு வந்துள்ளேன். அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி வந்த பிறகு ஓரிரு வருடங்கள் எல்லோரும் சேர்ந்து சித்ரா பவுர்ணமி நிலாச்சோறு சாப்பிட்டதும் உண்டு. ஆனால் இவையெல்லாம் அந்த முதல் மூன்று நிகழ்வுகள் கொடுத்த ஒரு சந்துஷ்டியை கொடுக்கவில்லை.

இப்பதிவின் முதல் பத்தியில் இன்று சித்திரை முழு நிலவு என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் இன்று வைகாசி மாதம் பவுர்ணமியில் வரும் ‘புத்த பூர்ணிமா’. புத்தர் என்றாலே ‘புது ஒளி’. அவர் பிறந்தது, ஞானம் அடைந்தது, வீடு பேறு பெற்றது மூன்றும் பவுர்ணமி தினத்தில் நடந்த நிகழ்வுகள். கீழதேய நாடுகளின் ஞானம் சந்திரனை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மரபு. அவர்கள் நம்பிக்கை, வாழ்வியல் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. நாட்காட்டிகள் கூட ‘Lunar calendar’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த மரபின் துவக்கம் புத்தரில் இருந்தே தொடங்கி இருக்கலாம்.
இன்று புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் விடுதலைக்குத் தீர்வாக முன்னெடுக்கப்படுகிறது. அந்த நம்பிக்கை ஒளி முழு நிலவின் குளிர்ச்சியாக எல்லோருக்கும் பரவட்டும்

எல்லா மதங்களின் பெயராலும் இன்று உலகம் முழுவதும் வன்முறை நடந்து வருகிறது. ஓரளவிற்கு எல்லா மதங்களிலும் வன்முறை போதனையும் புனிதம் என்ற பெயரில் நியாயப் படுத்தப் படுகிறது. ஆனால் இன்று பௌத்தம் போற்றும் நாடுகளில் வன்முறை இருந்தாலும் பௌத்தம் என்றும் அதை போதிக்கவில்லை என்பதே அம்மதத்தின் சிறப்பு. பௌத்தம் ஏற்ற, ஏற்கிற அனைவருக்கும் ‘புத்த பூர்ணிமா’ வாழ்த்துக்கள்!

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment