ஜனவரி 24 ஆம் தேதி ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் நோயாளர் பதிவுகளை உறுதிப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும். ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி மாத தொடக்கத்திலும் மொத்தம் 12 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். தற்போது அவர்களனைவரும் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 81 வயதான சீன சுற்றுலா பயணியான 12 வது நபர் உயிரிழந்தார்.
புதிய நோயாளர் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாமல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இடைவெளி ஏற்பட்டது. ஆனால் பிப்ரவரி 22 வார இறுதியில் இத்தாலியின் எல்லையில் நோய் தொற்று பெருமளவில் தொடங்கியபோது, பிரெஞ்சு அதிகாரிகள் அவசரக் கூட்டத்தை அழைத்து அதிக நோயாளிகளின் வருகைக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 2000 க்கும் அதிகமாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை தற்போது 48 ஆக உயர்ந்துள்ளது – அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் அல்லது தீவிரமான சுகாதார பிரச்சினைகள் உடையவர்களாவர்.
நோய் தொற்று பரவலைத் தடுக்க பிரான்ஸ் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
1000 க்கும் மேற்பட்ட மக்களுக்கான அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
முக்கியமான ஆபத்து நிலையில் ஒன்பது மண்டலங்கள் உள்ளன. அங்கே அனைத்து பொதுக் கூட்டங்களும் தடைசெய்யப்பட்டு பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அவை : பாரிசின் வடக்கே ஓயிஸ் (L’oise), ஜெர்மன் எல்லைக்கு அருகிலுள்ள ஹாட்-ரினில் மல்ஹவுஸ்(Mulhouse in Haut-Rhin), சுவிஸ் எல்லைக்கு அருகிலுள்ள ஹாட்-சவோய்(Haute-Savoie), பிரிட்டானியில் மோர்பிஹான்(Morbihan) , நார்மண்டியில் கால்வாடோஸ்(Calvados), தெற்கு பிரான்சில் ஆட் (Aude), கோர்சிகா தீவு மற்றும் தெற்கு நகரமான மான்ட்பெல்லியர் (Montpellier).
பாரீசை பொறுத்த வரை சுற்றுலா தளங்கள் திறந்திருக்கும், ஆனால் லூவ்ர் (Louvre), மியூசி டி’ஓர்சே (Musée d’orsay) மற்றும் வெர்சாய் (Versailles) போன்றவை பார்வையாளர்கள் வருகையினை பெருமளவில் கட்டுப்படுத்த உள்ளன. பார்வையாளர்கள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நகராட்சி தேர்தல்கள் ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன, இருப்பினும் வாக்காளர்கள் தங்கள் பேனாவை தாங்களே கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுகாதார வல்லுநர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு முகமூடிகளை வழங்க பிரெஞ்சு அரசாங்கம் கோரியுள்ளதுடன், கொரோனா வைரஸ் அச்சங்களை மருந்தகங்கள் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சானிட்டைசர்களின் விலையையும் கட்டுப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தற்போது ‘நிலை 2’ அல்லது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ளது, ஆனால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் இருவரும் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொள்ளை நோய் (நிலை 3) அளவினை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.