புதுச்சேரியில் பெண்களின் உரிமைகள் மற்றும் வாக்குரிமைக்காக குரல் எழுப்பிய முதல் பெண்களில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர்.
1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர்த்துகீசியம், டச்சு, பிரிட்டிஷ் மற்றும் கடைசியாக பிரென்சியர்கள் இருந்தனர். பிரெஞ்சு காலனித்துவவாதிகளுக்கு எதிரான யு.டி.யின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர் வ. சுப்பையாவின் மனைவி தான் சரஸ்வதி. அரசியல் சுதந்திரத்திற்காக சுப்பையா போராடினால் என்றால், சரஸ்வதி பெண்களின் சமூக சுதந்திரத்திற்காக போராடினார்.
சரகோபன் மற்றும் சுதாமணியின் இரண்டாவது குழந்தை சரஸ்வதி. இவர் அக்டோபர் 22, 1924 அன்று வேலூரில் உள்ள ஆரணியில் பிறந்தார். பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்தவர் அவர். இடைநிலையை கல்வியை முடித்தாலும் இரண்டாம் உலகப்போர் அவருடைய உயர் படிப்புகளுக்கு இடையூறாக இருந்தது.
1943 இல் சுப்பையாவை மணந்த பிறகு, சரஸ்வதி புதுச்சேரிக்கு வந்தார். திருமணமான நான்கு மாதங்களுக்குள் சுப்பையா நாடு கடத்தப்பட்டார். எனவே அவர் வேலூருக்குத் சென்று 1945 இல் புதுச்சேரிக்கு திரும்பினார்.
1946 ஆம் ஆண்டில், சரஸ்வதி ‘பிரெஞ்சு இந்திய மகளிர் சங்கம்’ ஒன்றை உருவாக்கி ஏப்ரல் 9 அன்று அனைத்து பெண்கள் மாநாட்டையும் ஏற்பாடு செய்தார். இந்த மாநாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
புதுச்சேரியின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் அமைப்பு இந்த சங்கம் என்று யூனியன் பிரதேசத்தின் வரலாற்றாசிரியர் ஏ.லட்சுமி தாதாய் கூறுகிறார். 1950-ஆம் ஆண்டில், அரசு யூனியன் பிரதேச பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.
“எனது தாயார் தனலட்சுமி, எங்கள் கிராமமான சண்முகாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற இடங்களைச் சேர்ந்த பெண்கள் குழுவை மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். எல்லோரும் சிவப்பு நிற புடவை அணிந்தார்கள். இந்த மாநாட்டில்தான் பெண்களின் வாக்குரிமைக்கான கோரிக்கை சரஸ்வதியால் எழுப்பப்பட்டது” என்று புதுச்சேரியில் எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சீனு தமிழ் மணி தெரிவித்தார். “இங்குதான் யூனியன் பிரதேசத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் இரு பாலினங்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என்றும் அவர் கூறினார்.
1959 இல் சரஸ்வதி கொசக்கடை தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் சரஸ்வதி ஆவார். 1959 முதல் 1964 வரை புதுவை பிரதிநிதிகளில் சபையிலும், 1968 மற்றும் 1978 க்கு இடையில் புதுவையின் முதல் பெண் துணை மேயராகவும் பணியாற்றினார்.
பல மக்கள் சேவைகள் ஆற்றிய சரஸ்வதி அவர்கள் ஜூன் 4, 2005 அன்று மறைந்தார். உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சரஸ்வதி மிகுந்த அக்கறை காட்டினார். இறக்கும் வரை ஒரு வலுவான கருத்தியலாளர் சரஸ்வதி ஒரு எளிய வாழ்க்கையை நடத்தினார். அத்தகைய தலைவர்களை இன்று கட்சியில் பார்ப்பது கடினம் ”என்று முத்துகண்ணு என்ற தொழிற்சங்கவாதி கூறினார்.
நன்றி : தி பெடரல்
தமிழில் : காயத்ரி ஸ்ரீகாந்த்