கிரேக்க, ரோமானிய, யூத புராணங்களிலும் இந்தியப் புராணங்களிலும் வானுலகிலிருந்து வந்த மனிதர்களுடன் உறவாடிய கடவுளர், தேவதூதர் பற்றிய கதைகள் பல உள்ளன. அவர்கள் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு உயர்ந்த, வேற்றுக்கிரகத்தவர் என்றும், அவர்கள் ஆதிகாலம் தொட்டு அவ்வப்போது பூமியில் வந்திறங்கியிருக்க வேண்டும் என நம்புகிறவர் எரிக்ஃவோன் டைனிகன் (Erik-von-daniken) என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டவர். இவரது கருத்துப்படி, அந்த வேற்றுலகத்தவரையே ‘காட்டுமிராண்டிகளாக ‘வாழ்ந்த பூவுலகத்தவர்’, ‘கடவுளர்’ எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அந்தக் கடவுளரே ஆதிமனிதர்களுடன் இனக்கலப்பு செய்து, அவர்களைப் பரிணாம உயர்வு அடைய வைத்து, அவர்கள் பழம் நாகரிகங்களை உருவாக்க உதவியிருக்க வேண்டும். இந்தக் கற்பிதத்தை இயங்குதளமாக்கி அவர் எழுதிய 26 நூல்கள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 600 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. சில ஆவணப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக்கப்பட்டன. டேனிகனின் கோட்பாட்டைச் சிலர் ‘டேனிகனிஸம்’ எனக் குறிப்பிடுவர். கடவுளரின் (வான) இரதங்கள் (Chariots Of Gods) என்ற அவரது நூல் 1978இல் வெளியாகியது. வேற்றுக்கிரகங்களிலிருந்து வந்தவர் பற்றியும் அவர்களின் விண்கலங்கள் பற்றியும் எழுதப்பட்ட இந்நூல், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலியில் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது. டேனிகன் எழுதிய இதர பிரபலமான நூல்கள் ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் (Gods From OuterSpace), கடவுளரின் கனகம் (Gold of gods), மற்றும் கடவுளரின் நீள்பயணம் (Odyssey of Gods). டேனிகனின் கருத்துப்படி எகிப்தில் பிரமிடுகள், உருவாக்கப்பட்டதற்கும் பெருநாட்டில் காணப்படும் பெரு நில ஓவியங்கள் (Geoglyphs) உருவாக்கப்பட்டதற்கும் காரணம் வேற்றுக்கிரகத்தவர்! உலகமெங்குமுள்ள கலாச்சாரங்களின் பழங்கதைகள் மற்றும் புராணங்களில் விண்வெளியிலிருந்து பறந்து வந்திறங்கிய இரதங்கள் – (இந்தியப் புராணங்களில் விமானங்கள்) – கடவுளர், தேவர்கள் பற்றிக் குறிப்பிடுவதைத் தன் கோட்பாட்டிற்கு ஆதாரங்களாக டேனிகன் தம் நூல்களில் காட்டுகிறார். மேலும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், புராதன சிதைவுகளையும், சிலைகளையும், தொல்லியல் பொருட்களையும் தன் கோட்பாடுகளுக்கு சான்றுகளாக வைக்கிறார். டேனிகனின் ஆதாரங்கள் பல விவாதத்திற்குரியவை, பல கேள்விக்குரியவை; சில நேரடியாக ஏமாற்று வேலை. எடுத்துக்காட்டாக, அவர் முற்காலத்தில் பறக்கும் தட்டுகள் வந்ததற்கு ஆதாரங்களாக அவற்றின் ஓவியங்கள் பொறிக்கப்பட்டுள்ள ஓடுகள் சிலவற்றை காட்டினார். அதைத் தொடர்ந்து 1978இல் நோவா என்ற தொலைக்காட்சி நிறுவனம் அந்த ஓடுகள் பற்றி துப்புத்துலக்கி, அவற்றைப் போலியானவை எனக் கண்டுபிடித்தது. அந்த ஓடுகளைச் செய்தவரைப் பேட்டிகண்டு டேனிகனின் புரட்டை அம்பலப்படுத்தியது. அந்த நிறுவனம் நேர்காணல் ஒன்றில் அதுபற்றி டேனிகனிடம் கேட்டபோது, அவர் “சிலர் என் கோட்பாட்டிற்கான ஆதாரங்களைப் பார்க்க விரும்பினர். அவர்களுக்காகவே சில ஆதாரங்களை உருவாக்க வேண்டியிருந்தது” என்றாராம், முகம் மாறாமல்.
துணிந்து புரட்டல் காரியங்களில் ஈடுபடுவது டேனிகனுக்குப் புதிதல்ல. 1968இல் பள்ளிப் படிப்பை நிறுத்திய அவர் பள்ளிப் பருவத்திலும், தம் 20 வயதிலும் ஏமாற்றியதற்காக தண்டிக்கப்பட்டார். பின்னர் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த காலத்தே போலியான சொத்து பத்திரங்களை வைத்து பணம் பெற்று கபளீகரம் செய்ததற்காக தண்டிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையிருந்தபோது எழுதிய நூலே ககனவெளியிலிருந்து வந்த கடவுளர். சிறைவாசம் முடிந்து வெளிவந்தவர் பிரபல எழுத்தாளர் எனக் கொண்டாடப்பட்ட காலத்தில், தன் சிறைத்தண்டனை தன் கோட்பாடுகளைப் பொறுக்காத கத்தோலிக்கச் சபையின் சதியென்றும், அவர்களால் ஜோடிக்கப்பட்ட வழக்கே அவரைச் சிறையிலிட வைத்தது என்றும் கூறி, ஜெர்மானிய எழுத்துலகில் இடம் பிடித்தார். டேனிகனின் நூல்கள் பிரபலமானதற்கு அவர் அளித்த புதுமையான விளக்கமும் அவற்றை அவர் படைத்த முறையும் முக்கிய காரணங்கள். எழுபதுகளில் நான் டேனிகனின் நூல்கள் சிலவற்றை முதலில் படித்தபோது, விவிலியம் மற்றும் புராணங்களில் காணப்படும் பழங்கதைகளுக்கு அவர் கொடுத்த விளக்கங்கள் சுவாரசியமானவையாகத் தெரிந்தன. பின்னர் தன் கோட்பாட்டை விளக்க அவர் எடுத்தாளும் ஆதாரங்கள் பற்றித் தொல்லியலாய்வாளர் என்ன கூறுகிறார்கள் என்பதை அறிய முற்பட்டபோதுதான் டேனிகனிஸத்தின் மிகை மற்றும் கற்பனை பற்றி உணர முடிந்தது. கட்டுக்கதைகளை, புனைவுகளை, திரிக்கப்பட்ட உண்மைகளைச் சுவைபடச் சொன்னால் பலரை நம்ப வைக்கலாம் என்பதற்கு டேனிகனின் கோட்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அறிவியலால் எளிதில் விளக்கவியலாத வியத்தகு விஷயங்களை தம் கற்பனை கொண்டு விளக்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். 1968இல் டேனிகன் எழுதிய கடவுளரின் (வான்) இரதங்கள்’ என்ற நூலில் வேற்றுலகத்தவர் வந்த விண்வெளிக்கலங்கள் தரையிறங்குமாறு பெரும் தளங்களை, பெருநாட்டில் பழங்குடியினரான நாஸ்கா (Nazca) இனத்தவர் அமைத்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். டேனிகன் குறிப்பிடும் வான இரதங்கள் வந்திறங்கிய தளங்கள் பற்றி தொல்லியலாளர் என்ன கூறுகின்றனர்? பெரு (Peru) நாட்டின் தென்பகுதியில் உள்ள நாஸ்கா (Nazca) மற்றும் பால்பா (Palpa) இடையே அமைந்த பீடபூமியில் உள்ள ஒரு பாலைவனம். அங்கு கி.மு. 2000இலிருந்து கி.பி.600 வரை வாழ்ந்த கலாச்சாரத்தவர், நிலத்தில் பெரிய ஓவியங்களை வரைந்துள்னர். கோடுகள் மற்றும் ஜியோமிதி கோலங்கள் தவிர குருவி, சிலந்தி, தேன்சிட்டு, குரங்கு, கழுகு போன்ற ஓவியங்களை வரைந்துள்ளது பற்றி இருபதுகளில் தெரியவந்தது. இப்பகுதி மீது விமானத்தில் பறந்தவர்களில் சிலர், அக்கோடுகள் விமானத்தளங்களாக இருக்குமோ என வியந்தனர். இதுவே டேனிகனின் கோட்பாட்டிற்கு ஆதாரம்! அந்த நில ஓவியங்கள் (Geoglyphs) மீது 1939இல் பால் கோஸோக் (Paul kosok) ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஏறத்தாழ 200 சதுர மைல் பரப்பில் வரையப்பட்ட நில ஓவியங்களை ஆராய்ந்த கோஸோக், இரும்புத்தாது அடங்கிய சரளைக் கற்கள் கொண்ட மேற்பரப்பை அகற்றியதால் கீழே தெரியும் வெண்மையான மணல் பகுதிகளே, ஓவியங்களின் கோடுகள் என்பதைக் கண்டறிந்தார். கோஸோக்கின் 12 ஆண்டு ஆய்வுக்கு உதவி செய்த மரியா ரெய்ஷ் (Maria reiche) இந்த ஓவியங்கள் பற்றி 1998இல் அவர் இறக்கும் வரையில் ஆய்வுகளைச் செய்தார். இவரது முயற்சியாலேயே நாஸ்கா நில ஓவியங்கள் யுனெஸ்கோவினால் 1995இல் பாதுகாக்கப்பட்ட கலாச்சாரச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. நாஸ்கா ஓவியங்களின் சிறப்பம்சங்கள் இரண்டு. ஒன்று, அவை சரளைகளை அகற்றி நிலத்தில் எளிதாக அமைக்கப்பட்ட கோடுகள் என்றாலும், ஆயிரம் ஆண்டுகளாக அழியாமலிருப்பது. இதற்கு முக்கிய காரணங்கள்: நாஸ்கா பீடபூமி மழையற்றது, பலத்த காற்று இங்கு வீசாதது, இரண்டாவது சிறப்பம்சம்: இந்த நில ஓவியங்களைத் தரையில் நின்றால் காணவியலாது. வானத்திலிருந்தோ அல்லது உயர்வான பகுதியிலிருந்தோதான் காணவியலும். நாஸ்கா நில ஓவியங்களையார் எதற்காக வரைந்தனர் என்பதற்கு கோஸாக் மற்றும் மரியாரெய்ஷ் செய்த ஆய்வுகள் பதிலை அளிக்கின்றன. இவற்றை வரைந்த நாஸ்கா கலாச்சாரத்தவர் போர்க்குணம் கொண்ட இதர குடியினரால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வாழ்ந்த கஹாச்சி என்ற சிதைந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்ஷின் கருத்துப்படி குரங்கு, சிலந்தி போன்ற ஓவியங்கள் சில விண்மீன் கூட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை. எவ்வாறு கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாலமியால் சில விண்மீன் தொகுப்புகள் கரடி, நாய், மாடு, ஓநாய் எனப் பகுக்கப்பட்டனவோ அது போல. மேலும் அங்கு வாழ்ந்தவர், இந்தியாவில் கோயிலைச் சுற்றி வலம் வருவது போல, நில ஓவியங்களின், கோடுகள் மீது நடந்து ஆவியுலகத் தொடர்புகளையும், கடவுளரையும் வழிபட்டனர் என்று கூறுகிறார் ரெய்ஷ். மேலும் சில நேர்கோடுகள் சம நாட்களில் (Equinox) கதிரவன் உதித்து மறையும் வரையுள்ள கதிரவனின் பாதையைக் குறிப்பிட்டவை என்பதும் தெளிவாகியுள்ளது.
நில ஓவியம் ஒன்றை உருவாக்க முயன்ற ஆய்வாளர் ஒருவர், ஒரு நில ஓவியம் வரைய ஏறத்தாழ 48 மணி (Manhours) தேவைப்படும் என்பதை நிரூபித்துள்ளார். ஆய்வாளர்கள் டேனிகனுக்கு விடுக்கும் கேள்விகளில் சில: 1) இவை விமான தளங்கள் என்றால் அவை ஏன் சிலந்தி, குரங்கு, தேன்சிட்டு போன்ற வடிவங்களில் காணப்பட்டன? 2) வான இரதங்கள் இங்கு தரையிறங்கியிருந்தால் மணலில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இங்கு ஏதாவது அவ்வாறு மாட்டிக்கொண்ட வான இரதத்தை இன்று காண முடியுமா? 3) வேற்றுக் கிரகத்தவர் நாஸ்கா கலாசாரத்தவருக்கு ஓவியங்களை வரையச் சொல்லிக் கொடுத்திருந்தால் என்ன மொழியில் சொல்லியிருப்பார்கள். மேற்கூறியவற்றில் டேனிகன் பதிலளிக்கப் போவதில்லை. ஏனெனில், வியத்தகு நில ஓவியங்களை ‘திறமையற்ற’, ‘எளிய’ நாஸ்கா கலாச்சாரத்தவர் ககன வெளியிருந்து கடவுளரின் உதவியில்லாமல் செய்திருக்க முடியாது. வேற்றுலகத்தவர் வந்ததற்கு டேனிகனின் முக்கியமான ஒரு ஆதாரம் மாயா விண்வெளி வீரர் என ஆய்வாளர் வேடிக்கையாக குறிப்பிடும் புடைச்சிற்பம் ஒன்று. இச்சிற்பம் விரிவாக ஆராயப்பட்டுள்ள மாயா புராணங்களின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளது என்றாலும், அசாத்திய துணிச்சலுடன் டேனிகன் இச்சிற்பத்தை விண்கலத்தில் செல்லும் விண்வீரரின் சிலை என்று தம் நூல்களில் குறிப்பிடுகிறார். 1949இல் அல்பெர்ட்டோ ரூஸ் (Alberto Ruz) என்ற ஆய்வாளர் மெக்ஸிகோவில் பேலங் (Palenqu) என்னுமிடத்தில் அமைந்த பிரமிடின் பாதாள அறையில் மூடப்பட்டிருந்த கல்லறை ஒன்றை கண்டுபிடித்தார். கல்லறையை மூடிய செவ்வகக் கல்லில் கி.பி. 690இல் இறந்துவிட்ட பாகல் எனும் மாயா அரசனின் உருவம் புடைச்சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது. அதன் அமைப்பு தொல்லியல் மற்றும் பழம் சிற்பக்கலை பற்றி அறியாதவர்களுக்கு வியப்பளித்தது. பலரைக் குழம்ப வைத்தது.
1974இல் ஹியூ’ ஹார்ல்ஸ்டன் (Hugh Harleston) என்பவர் பாகல்லின் சிற்பம், விண்கலத்தைச் செலுத்தும் விண்வெளிவீரன் சிற்பம் என்றும், அவன் அமர்ந்திருக்கும் விதம் வேகத்தையும், முன்னேறுவதையும் குறிக்கின்றது என்றும் எழுதினார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் விண்கலங்கள் செய்யப்படவில்லை என்பதை நாமறிந்தாலும், விடுவாரா டேனிகன்! இந்தச் சிற்பத்தையே அவர் வேறு கிரகத்தவர் விண்கலங்களில் வந்ததற்கு ஒரு முக்கியமான ஆதாரமாகக் காட்டுகிறார். அது உண்மையில், இறந்துவிட்ட பாகல், மரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பூவுலகிலிருந்து விடுபட்டு, ஆவிகளின் உலகில் வாழப் போவதைச் சித்தரிக்கும் புடைச்சித்திரம் அது. கல்லறையின் பக்கவாட்டில் பாகலின் மூதாதையர் சிலரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பாகலின் ஆவியுலகப் பயணம் அவனைத் தன் மூதாதையர்களின் ஆவிகளுடன் சேர்க்கவைக்கும் பயணம் என்பது மாயா இனத்தவர் நம்பிக்கை. இந்தச் சிற்பத்தில் டேனிகன், பாகலின் கழுத்துக்கு மேலும், காலின் அடியிலும் செதுக்கப்பட்ட அமைப்புகளை விண்கலத்தின் விசைகள் எனக்குறிப்பிடுகிறார். ஆனால் அவை மாயா மரபுப்படி பாதாளத்தைக் காக்கும் திறந்த வாய் கொண்ட பாம்பின் தாடைகள். பாகல் முன்னேறும் விண்கலத்தில் செல்லவில்லை. இறந்துவிட்ட அவன் ஆவியுலகத்திற்கு, பாதாளத்திற்குள் விழும் காட்சியே அது. – டேனிகன் போலப் பறக்கும் தட்டுகள், வேற்றுக் கிரகத்தவரின் வருகை போன்ற கோட்பாடுகளை நம்புபவர் பலர் உள்ளனர்.
ரேயலியன் (Raelian) என்ற மறையியல் குழுவினர் (Mystic society) விண்வெளியிலிருந்து வந்தவர் – வருபவர் பற்றி நம்புபவர்கள். ஆப்பிரிக்காவில் வாழும் டோகோன் எனும் குடியினர் சிரியஸ் (Sirius) எனும் விண்மீனிலிருந்து வந்த நோமோஸ் (Nommos) எனும் கடவுளை நம்புபவர்கள். இவற்றிற்கும் டேனிகனிஸத்திற்கும் உள்ள முக்கியமான வேற்றுமை, டேனிகனிஸத்தின் இனவுயர்வு வாதம். டேனிகனின் கருத்துப்படி, தென் அமெரிக்காவிலிருந்து சீனர் வரை வாழ்ந்த பழங்கலாச்சாரத்தவர்கள், விண்வெளியிலிருந்து வந்த வேற்றுக் கிரகத்தவருடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். ஏனெனில், கலாசார உயர்வு, பரிணாம முன்னேற்றமடையாத மக்கள் எகிப்திய மற்றும் இன்கா (Inca) பிரமிட்டுகளையும், ஈஸ்டர் தீவு சிலைகளையும் அவர்களாகவே செய்திருக்க முடியாது. அவை நிச்சயம் விண்வெளியிலிருந்து வந்த, உயர்ந்த, அறிவு தொழில்நுட்பத்தில் மேம்பட்ட வேற்றுக் கிரகத்தவரின் உதவியாலும், இனக்கலப்பாலும், மேம்படுத்தப்பட்ட ஆதிக்குடியினராலும் உருவாக்கப்பட்டவை. டேனிகனின் வாதம் வலுவற்றது என்பதை அவர் காட்டும் ‘ஆதாரங்களை’ நோக்கினால் தெரியவரும். எடுத்துக்காட்டாக மாயா கலாசாரத்தின் கோள்கள் பற்றிய அறிவு மாந்திரீகர் தாம் கோள்கள்- விண்மீன்களைப் பார்த்து அமைத்த குறியீடுகளின் அடிப்படையிலானவை. எகிப்தை ஆண்ட ஃபேரோ பரம்பரையினர், ஆண்டவனின் பிரதிநிதிகள் என நம்பப்பட்டதால், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிரமிடுகள் ஆயிரக்கணக்கான அடிமைகளின் துணையுடன் கட்டப்பட்டவை. அவற்றைக் கட்ட, காடுகள் பல அழிக்கப்பட்டது. வெட்டப்பட்ட மரக்கட்டைகளையும், சாய்தளம், கயிறு ஆகியவற்றையும் உபயோகித்து கட்டப்பட்டவை. அளவிலா உறுதியுள்ள அன்று வாழ்ந்த எகிப்தியரால் அவை கட்டப்பட்டன.
டேனினின் கோட்பாடுகளை எதிர்க்கும் ரொனால்ட் ஸ்டோரி (Ronaldstory), பழங்கால கலாச்சாரத்தவர் நமது பாரம்பரியங்கள், மறுவாழ்வு பற்றிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிரமிடுகளையும், நாஸ்கா நில ஓவியங்களையும், ஈஸ்டர் தீவு சிலைகளையும் உருவாக்கினர் எனவும், அவர்கள் கலாசார உயர்வடைந்தவர்கள் எனவும் குறிப்பிடுகிறார். மேலும் அவர்கள் விண்வெளியிலிருந்து வந்த கடவுளர் பற்றி தெளிவாகக் குறிப்பிடாததற்கு காரணம் அவர்களின் ஞாபக மறதியல்ல, அப்படியேதும் நடவாததே என்கிறார். பழம் நாகரிகங்கள் படைத்தவர்களை டேனிகன் மந்த புத்தியுள்ளவர்களாகவும், கலாச்சார உயர்வடையாதவர்கள் போலவும் சித்தரித்து, அவர்கள் மேம்பட்ட இனத்தவரான ‘கடவுளரின் உதவியுடன் பிரமிடுகள் போன்ற கலாசார குறியீடுகளை அமைத்தனர் என்றும் கூறும் டேனிகன், மத்திம (Middle Age) காலத்தில் பெரும் தேவாலயங்களை (Cathedral) அமைத்த ஐரோப்பியர் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது, ஐரோப்பியர் ‘அத்தகைய ஞானத்தையும் கலாச்சார மேம்பாட்டையும் அடைந்தவர்’ எனப் பதிலளித்தாராம். இந்த வாதத்தின் அடியோட்டம் என்னவென்றால் இனவுயர்வடைந்த வெள்ளைக்காரரால் கலாச்சார சாதனைகள் படைக்கவியலும். ஆனால் எகிப்திய, மாயா, நாஸ்கா கலாசாரத்தவர் உயர்வடைவதற்கு வேற்றுக் கிரகத்தவர் வந்து இனக்கலப்பு செய்யவும், சொல்லிக் கொடுக்கவும் வேண்டும். இதில் வெள்ளை இன உயர்வு வாதத்தை உணரலாம். இனக்கலப்பால் ஒரு குலம் ‘உயர்’ வடைந்த கதை நம் நாட்டிலும் உண்டு. திருவள்ளுவர், ஆதி-பகவன் என்ற தம்பதியினருக்குப் பிறந்தவர் என்ற கதையொன்று உண்டு. (ஆதி-பகவன் சமணக்கடவுளர் என்பது வேறு விஷயம்) பகவன் என்ற அந்தணர் காசிக்கு சென்ற வழியில் தனக்கென உணவு சமைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைச் சிறுமி அவரது உணவை களவெடுக்கப் பார்க்க, பகவன் தன் கையில் வைத்திருந்த கரண்டியால் அவள் தலையிலடித்து அவளை விரட்டிவிடுகிறார். பல ஆண்டுகள் கழித்து பகவன் ஆதி என்ற பெண்ணை மணக்கிறார். ஒருநாள் பகவன் ஆதியின் தலையில் உள்ள தழும்பு ஒன்றைப் பார்த்து அதுபற்றிக் கேட்க, ஆதி எவ்வாறு தான் சிறுமியாக இருந்தபோது, கரண்டியால் ஒருவர் தன் தலையில் அடித்ததைக் கூறுகிறாள். அப்போது பகவனுக்கு அவள்தாம் அடித்து விரட்டிய கீழ்ச்சாதிப் பெண் என்று தெரியவருகிறது. சாதித் ‘தூய்மை’ பேணத் தமக்குப் பிறக்கும் குழந்தைகளைத் தான் வளர்க்கக் கூடாது என்றும் துணிந்து அந்த அந்தணர் குழந்தைகளை நிராதரவாக விட்டுவிட முடிவெடுக்கிறார். ஆதிக்கு மூன்று குழந்தைகளைத் தருகிறார். இடுப்புக் கீழே தீண்டாமை கிடையாது அல்லவா! ஆதிக்கு பிறந்த குழந்தைகளில் நிர்க்கதியாக விடப்பட்ட குழந்தைகளில் ஒன்று வள்ளுவர் குலமகன் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்கிறது. திருவள்ளுவராக வளர்கிறது. ஆதியின் மற்றொரு ஆண் குழந்தை அதியமானாகவும், பெண் குழந்தை ஒளவையாராகவும் வளர்கின்றனர். இக்கதையின்படி திருக்குறள் யாத்த அறிவுமிகு திருவள்ளுவரும், புலவர்கள் போற்றிய பெண்புலவர் ஒளவையாரும், கொடையிற்சிறந்த அதியமானும் சகோதரி சகோதரர்கள். இக்கதையின் அடிப்படை சாதி மேம்பாடு. கீழ்ச்சாதியான வள்ளுவர் குலத்தில் பிறந்தவர் எவ்வாறு சுடர்மிகு அறிவுடன் இருந்திருக்க முடியும், அவர் உடம்பில் அந்தண இரத்தம் ஓடாமல்? டேனிகன் கூறுவது போல சில இனத்தவரின் இரத்த நாளங்களில் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்களின் குருதி ஓடிக்கொண்டிருந்தால் அதை மரபியல் ஆய்வுகள் செய்தால் கண்டுபிடிக்கலாம் அல்லவா?
முதலில் ‘வேற்றுக்கிரகத்தவர்’, அப்படி ஒரு சமுதாயத்தினர் இருந்தால் அவர்கள் பூவுலகத்தவருடன் கூடி இனப்பெருக்கம் செய்யவியலுமா என்பது அடிப்படைக் கேள்வி. உலகெங்கினும் பரவியுள்ள பல இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட மரபியல் ஆய்வுகள், மனித குலம் எனும் வம்ச விருஷத்தின் அடி மரம், ஆப்பிரிக்க இனம் என்பதையும் மனிதகுலத்தின் மூதாதையர் இரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க ஆதித்தாயிடம் உதித்தவர்கள்; அவர்களின் வழித்தோன்றல்கள், ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, உலகின் இதர பாகங்களுக்குக் குடியேறினர் என்பதையும் உறுதி செய்கின்றனர். இந்த முடிவுகள் உலகின் பல பாகங்களில் கண்டெடுக்கப்பட்ட, பல்வேறு பரிணாம நிலைகளை அடைந்த ஆதிமனித எலும்புகளால் வலுவடைந்துள்ள நிலையில், மரபியல் ஆய்வாளர் இதுவரை கண்டுபிடிக்காதது வேற்றுக்கிரகத்தவர் மரபணுக்கள் என்பதை டேனிகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொல்லியல் கோட்பாடுகளைப் படைப்பவர் திறந்த மனத்துடன் தடயங்களைச் சேகரித்து பின் அவற்றை ஆராயந்து, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கோட்பாடுகளைப் படைக்க வேண்டும். ஆனால் டேனிகனின் கதையோ, வேற்றுக்கிரகத்தவர் பழங்காலத்தில் பூவுலகிற்கு வந்து இனக்கலப்பு செய்து, கலாசார மேம்பாட்டையும், பரிணாம உயர்வையும் உண்டாக்கினர் என்ற ஊகத்தையே முடிவாக்கி, அதற்கு உறுதிச் சேர்க்க ‘ஆதாரங்களைத் தேடியது. இத்தகைய அணுகுமுறை போலி தொல்லியாய்வு (PseudoArchaeology) என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பேரூரில் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ பழம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் ஓடுகள் மற்றும் பாலக்காட்டுக்கருகே கண்டுபிடிக்கப்பட்ட ‘இராட்சத ஆதிமனிதத் தடங்கள்’ ஆகியவற்றைக் கண்டு பிடித்ததாகக் கூறியவர்களின் அணுகுமுறைகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
காலச்சுவடு, 2006
- சு.கி.ஜெயகரன், புவியியல் ஆய்வாளர்.