தொல்லியலுக்கு வெளிச்சம் தரும் கீழ்நமண்டி கற்கால நாகரிகம் !

வரலாற்று நோக்கில் வந்தவாசி பகுதி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது சமணமும் அதன் தொல்லியல் அடையாளங்களும் தான். ஆனால் தற்போது தொடர்ந்து வந்தவாசி குறிப்பாக தேசூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பண்டைய மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள், அவர்கள் விட்டுச்சென்ற அறிவுச் செல்வங்கள் நமக்கு இப்போது கிடைத்து வருகின்றன. ஏற்கனவே எனது முந்தைய பதிவுகளில் தேசூர் நடுகல், எச்சூர் பெருங்காலப்பகுதி, மகமாயி திருமணி பெருங்கற்காலப்பகுதிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்போது அப்பகுதிக்கு மற்றொரு மகுடமாக கிடைத்தது தான் கீழ்நமண்டி பெருங்கற்கால கல்வட்டங்களும் பிற தொல்லியல் அடையாளங்களும்.

தேசூர் அடுத்த குண்ணகம்பூண்டி சேர்ந்த மூ. பழனி, மின்வாரிய அலுவலர் அவர்கள் கொடுத்த தகவலின்படி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகன், ஆய்வாளர்கள் முனைவர் எ. சுதாகர், பழனிச்சாமி, ஏ. வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் சபர் உள்ளிட்ட பலர் கூட்டாக ஆய்வு செய்தோம்.

கீழ்நமண்டி கிராமத்தில் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட பகுதி, பறவைகளாலும் சிறுநீர்நிலைகளாலும் பாறைகளாலும் மிக எழிலார்ந்த இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களைப் புதைத்த ஈமக்காடு அவர்களின் நாகரிக எச்சங்களும் உள்ளன.

இந்த ஈமக்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன.
இக்கல்வட்டங்களில் நடுவில் மண்ணுக்கடியில் ஈமப்பேழையில் அக்காலத்தில் இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண்குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்துவிடுவது வழக்கம். இவ்வாறு புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பது அக்கால வழக்கமாகும். இதுபோன்ற பல கல்வட்டங்கள் இங்கு உள்ளன. இவற்றில் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இவை தொல்லியலாளர்கள் பெருங்கால கல்வட்டங்கள் என்று அழைக்கின்றனர்.

குழிக்குறிப்பாறைகள் (Cub Marks stones)

இங்கு கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்களில் சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் (Cub Marks stone) நான்கு இடத்தில் உள்ளன. இது போன்று தென்னிந்தியாவில் கர்னாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதியிலும் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கீழ்நமண்டி கல்வட்டப்பகுதியில் கிடைக்கும் குறிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த குழிக்குறிப் பாறையில் உள்ள வட்டக்குழிகள் அக்கால மனிதர்களின் வானியல் அறிவினைக் குறிப்பதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் இக்குறிகள் உலக அளவில் பல இடங்களில் கிடைக்கின்றன என்றும் ஒவ்வொரு இடங்களிலும் இதற்கு பொருள் மாறுபடலாம் என்றும் இது போன்ற குறிகள் பற்றி மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியுள்ளது என வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் கருதுகிறார்.

இந்த கல்வட்டப்பகுதியில் நெடுங்கல் அல்லது குத்துக்கல் (Menhir) என்று சொல்லப்படுகின்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கூர்மையான பாறைக்கற்கள் இரண்டு இடங்களில் உள்ளன. இப்பகுதியில் கால அடையாளப்படுத்த இயலாத பாறைக்கீறல்கள் கிடைக்கின்றன.

தொல்லியல் நோக்கில் இக்கீழ்நமண்டி கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்கள், நெடுங்கல், குழிக்குறிபாறை, கருப்பு சிவப்பு வண்ண பானைகள், இரும்பு ஆயுதங்கள், இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடையாளங்கள் ஆகியன தமிழக அளவில் மிக முக்கியத்துவம் பெறுவதாக தொல்லியல் அறிஞர்கள் க.ராஜன் மற்றும் சு. இராஜவேல் ஆகியோர் கருதுகின்றனர்.

கீழ்நமண்டி கிராமம் இன்று தொலைதூர கிராமமாக இருந்தாலும் பண்டைய காலத்தில் இது முக்கிய வணிகச்சாலையில் இருந்திருக்கலாம் என்று கருத இடந்தருகிறது. இவ்விடத்திலிருந்து தென்மேற்கே தொண்டூர், நெகனூர்பட்டி, செஞ்சி, திருநாதர்குன்று என தமிழி எழுத்துக்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ளன.

கீழ்நமண்டியில் உள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் சில சிதிலமடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண்குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. தொல்லியல் சிறப்பு வாய்ந்த இந்த கீழ்நமண்டி கல்வட்டங்களை தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்து பண்டைய தமிழரின் பண்பாட்டை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும் என அப்பகுதி மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோருகின்றனர். இப்பகுதியை பாதுகாக்கவும் உரிய முறையில் அகழாய்வு செய்யும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முயற்சிகளை மேற்கொள்ளும்…

தொடரும் ஆய்வுகள் வெளிவரும் ஆச்சர்யங்கள்…


நன்றி –
புகைப்பட உதவி. திரு. பழனி, மின்வாரிய அலுவலர்,
சபரி, கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர்கள்.

  • திரு.பால முருகன் அவர்களின் பதிவு…
What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment