மகாராஷ்டிரா மாநிலம், நைகான் என்னும் சிற்றூரில் சாவித்திரிபாய் 3.1.1831 இல் பிறந்தார். கல்வி கற்க இயலாத இளம் வயதில் (13 வயது) ஜோதிராவ் கோவிந்தராவ் ஃபுலே என்பவரை மணந்தார்.
ஜோதிராவ் ஃபுலே ஒரு சமூகப் போராளி. கல்வி மறுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடியவர். அவரது போராட்டங்களின் விளைவாக, 1846 ஆம் ஆண்டில், அவரே தன் முயற்சியால், தான் வாழ்ந்த ஊரில் ஒரு பள்ளியைத் தொடக்குகிறார். அதில் தன்னால் கல்வி கற்பிக்கப்பட்ட சாவித்திரி பாய் அவர்களை ஆசிரியையாக நியமிக்கிறார். 1848-ஆம் ஆண்டில் புனேவில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்குகிறார். அதன் தலைமை ஆசிரியை சாவித்திரி பாய் ஃபுலே.
கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு அந்நாளில் நிலவியது. என்றாலும் அவற்றை எதிர்கொண்டு, கல்விப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், விதவைப் பெண்களை மொட்டை அடிக்கும் வழக்கத்தில் இருந்து மீட்டு, மறுமணம் செய்து வைத்தார் சாவித்திரி பாய்.
1852 ஆம் ஆண்டில் பெண்கள் சேவை மையம் (மகிளா சேவா மண்டல்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். 1870 ஆம் ஆண்டில் ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக உறைவிடப் பள்ளிகளைத் தொடக்கினார்.
1897 ஆம் ஆண்டில் பிளேக் தொற்று நோய் பரவிய காலத்தில், மருத்துவரான தன் வளர்ப்பு மகனைக் கொண்டு, புனே அருகில் மருத்துவமனை ஒன்றைத் துவக்கினார். அம் மருத்துவமனைச் சேவையில் ஈடுபட்டதால், நோய்த் தொற்று ஏற்பட்டு 3.10.1897 அன்று இறப்பைத் தழுவினார்.
போற்றுதலுக்குரிய இவருடைய சேவைகளுக்காக இந்திய அரசு, 1998ல் அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.
2015 ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகம், “சாவித்திரி பாய் பல்கலைக்கழகம்” எனப் பெயர் மாற்றம் பெற்றது.
இந்தியச் சீர்திருத்தப் பெண்மணிகளின் வரிசையில் முதலிடம் வைத்துப் போற்றக் கூடியவர் சாவித்திரி பாய் ஃபுலே.
கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் கல்வியைத் தொடங்கிப் பின் அதை நிறுவனமயம் ஆக்கியவர்கள் சாவித்திரி பாயும் அவரது கணவர் ஜோதிராவ் ஃபுலேவும்.
சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சமூகச் சிந்தனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் 191 ஆவது பிறந்த நாள் இன்று.