ஆகஸ்டு 22, 1911.
நேரம் காலை 9 மணி.
பாரிஸ் நகரின் லூவர் அருங்காட்சியம் திடீரென பரபரப்பாகிறது.
காரணம், அருங்காட்சியத்தில் இருந்த ஓர் ஓவியத்தைக் காணவில்லை.
‘மாவீரன் நெப்போலியன் மயங்கிய ஓவியம்…’ என்பதைத் தவிர, வேறு எந்த அடையாளமும் அப்போது அந்த ஓவியத்திற்கு இல்லை.
அது ஒரு ஓவியம். அழகான ஒரு பெண் ஓவியம். அவ்வளவு தான்!
ஆனால் திருடு போன அந்த ஒரு நாள், அதன் வரலாற்றை மாற்றியது.
அன்று பாரிஸ் மட்டுமில்லாமல் உலக நாடுகள் ஒருசேர உச்சரித்த வார்த்தை, ‘மோனாலிசா’.
முன்னணி நாளிதழ்கள் ‘மோனாலிசா ஓவியம் களவாடப்பட்டது’ என தலைப்பு செய்தியாக வெளியிட்டன.
லூவர் அருங்காட்சியகம் முன்பு மக்கள் திரண்டனர். முட்டி மோதிக் கொண்டு அங்கே கூடிய கூட்டம், ஐம்பதாயிரத்தைத் தாண்டி இருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
எதற்காக?
திருடப்பட்ட மோனாலிசா முன்பு இருந்த இடத்தைப் பார்க்க. அதாவது… ஓவியம் மாட்டப்பட்டிருந்த நான்கு ஆணிகளைக் காண!
எனில், திருடப்பட்டதால் தான் மோனாலிசா புகழ் அடைந்தாளா?
‘ஆமாம்….’ என தலையாட்டுகிறது வரலாறு.
மோனாலிசாவைத் திருடியவர்கள் யார் என ஆராயத் தொடங்கிய காவல்துறை, புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிக்காசோ உள்ளிட்ட பலரின் பெயரை சந்தேகப் பட்டியலில் சேர்த்தது.
Art Theft-ல் கைதேர்ந்தவர்கள் பலரை அவர்கள் விசாரித்தனர்.
ஆனால்…
வின்சென்சோ பெருகியா எனும் பெயர் கொண்ட, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியை அவர்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை, அவனே வந்து சிக்கும்வரையில்.
வின்சென்சோ பெருகியா.
இத்தாலியன்.
ஓவியங்களுக்கு சட்டம் செய்வது, வெளிப்புற முகடுகளை சரி செய்வது என கிடைக்கும் வேலையை செய்பவன்.
பெருகியா, லூவர் அருங்காட்சியத்தில் சிறிது காலம் வேலை செய்தான்.
பணியாளர்கள் அணியும் வெள்ளை அங்கியை அணிந்து கொண்டதால், மோனாலிசாவை சுருட்டி உள்ளே வைத்துக் கொள்ள மிகவும் வசதியாக இருந்தது!
சுலபமாக திருடி விட்டான்.
எப்படியோ இரண்டு வருடங்கள் ஓடின.
1913, நவம்பர் மாதம்.
ஒரு இத்தாலிய கலைப் பொருள் வியாபாரியிடம் ஓவியத்தை விற்கப் போய் மாட்டிக் கொண்டான் பெருகியா.
மீண்டும் லூவரை வந்தடைந்தாள் மோனாலிசா.
அப்போது எடுத்த புகைப்படம் தான் இது. அருகில் அப்போதைய லூவரின் இயக்குநர், ‘இது அசல் மோனாலிசா தானா…’ என்பதை ஆராய்கிறார் போலும்.
‘நான் ஒரு இத்தாலியன். டாவின்சி ஒரு இத்தாலியர். டாவின்சி வரைந்த இந்த ஓவியம் இத்தாலிக்கே சொந்தம். இந்த ஓவியம் எங்கள் நாட்டில் இருப்பது தான் சிறப்பு. நியாயமும் கூட…’
கைது செய்யப்பட்ட பின்பு பெருகியா சொன்ன வார்த்தைகள் இது.
திருட்டை ஒரே நொடியில் தேசப்பற்றாக அவன் மாற்றியதை யாரும் எதிர்ப் பார்க்கவில்லை. சில இத்தாலியர்கள் பெருகியாவை ஆதரித்தனர்!
இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெருகியா, 1925 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தான்.
இன்று தினமும் லட்சக்கணக்கானோர் மோனாலிசாவை தரிசனம் செய்கிறார்கள். பாரிஸின் அடையாளமாக மோனாலிசா இருக்கிறாள்.
ஆனால் திருடப்பட்ட அந்த இரண்டு ஆண்டுகளும் பெருகியாவின் சிறிய அறையில், ஒரு இரும்புப் பெட்டியின் உள்ளே அடைந்து கிடந்தாள் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.
உண்மையில் தேசப்பற்றின் காரணமாகத் தான் மோனாலிசா திருடப்பட்டாளா என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் ஒரு கதையை முன்வைத்து எழுதுகிறார்கள்.
அதேபோல அவளைச் சுற்றி புனையப்படும் பல கதைகளை மெளனமாக கேட்டுக்கொண்டு, அதே மாயப் புன்னகையுடன் இன்றும் லூவரில் மிளிர்கிறாள் மோனாலிசா.
- சரத்