2022ஆம் ஆண்டின் சில தலைசிறந்த நிகழ்வுகள்

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையளிக்கையும் உலக நிகழ்வுகளில் சில…

ஆல்சைமர், உறங்கிக்கொண்டேயிருக்கும் நோய்த்தன்மை மற்றும் எய்ட்ஸ் மருந்துக்கான ஆய்வில் முன்னேற்றம்

பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த ஆல்சைமர், உறங்கிக்கொண்டேயிருக்கும் நோய்த்தன்மை, புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்துக்கான ஆய்வில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மீண்டு வரும் அருகிய விலங்கினங்கள்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு அனத்தோலிய சிறுத்தை துருக்கி நாட்டில் தென்பட்டுள்ளது. மேலும், புலிகளின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளதாக பன்னாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பிரான்சில் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டிருந்த பழுப்பு ஓநாய்களின் எண்ணிக்கையும் 921-ஆக உயர்ந்துள்ளது.


காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க ஓரணியில் சேரும் நாடுகள்

கால நிலை மாறுபாட்டிற்கு எதிராக போராடி வரும் சூழலில், பிரேசிலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள, அரசு அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவதை முற்றிலும் நிறுத்தப்போவதாக உறுதி அளித்துள்ளது. காடுகள் அழிக்கப்படுவதற்கு மூல காரணிகளாக கருதப்படும் பால்ம் ஆயில், சோயா காபி உள்ளிட்ட பல வகை பொருட்களின் ஏற்றுமதியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை செய்யவிருப்பதாகவும் தெரிகிறது.

மரண தண்டனையை தடை செய்த மேலும் மூன்று நாடுகள்

பாப்புவா நியூ கினி, மத்திய ஆப்ரிக்க குடியரசு மற்றும் ஈக்வடோரியல் கினி ஆகிய நாடுகள் மரண தண்டனையை ஒழிப்பதற்கான சட்டத்தை இயற்றியுள்ளன. மொத்தமுள்ள இருநூறு நாடுகளில் 111 நாடுகள் மரண தண்டனையை தற்போது முற்றிலுமாக கைவிட்டுவிட்டதாக மரண தண்டனைக்கு எதிரான உலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ஈரான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் 80 சதவிகித மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளன.

பால்புதுமையருக்கான உரிமைகளை அங்கீகரித்த உலக நாடுகள்

கியூபா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பால்புதுமையருக்கான உரிமைகளை அமல்படுத்த உள்ளன. ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும், தத்தெடுப்படுப்பதற்கும் அனுமதியளிப்பதற்கான வாக்கெடுப்பில் 67 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் கம்யூனிஸ்ட் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது கியூபா.

மாதவிடாய் கால பொருட்களை இலவசமாக்கிய ஸ்காட்லாந்து

உலகின் முதல்முறையாக மாதவிடாய்க்கு தேவைப்படும் சுகாதார பொருட்களை இலவசமாக்கியுள்ளது ஸ்காட்லாந்து. 2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி பொது இடங்கள், கல்வி நிலையங்கள், நூலகங்கள் மற்றும் சமூக மையங்களில் மாதவிடாய் கால சுகாதார பொருட்கள் இலவசமாக வைக்கப்பட உள்ளன. இதை செயலியின் வழியாகவும் அறிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க கால்பந்து அணிகளிலுள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம்

கடந்த மே மாதம் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தேசிய கால்பந்து அணிகளில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே சமமான ஊதியத்தை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலக கால்பந்து விளையாட்டு வரலாற்றில் இது முதன் முறையாகும்.

அண்டத்தின் அறிந்திராத பகுதிகளை படம் பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

கடந்த ஜூலை பதினொன்றாம் தேதி, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி அண்டத்தை படம்பிடித்து தனது முதல் வண்ணப்படத்தை வழங்கியது. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பினால் உண்டான விண்மீன் மண்டலத்தின் வியக்கத்தக்க வண்ணப்படத்தை மிக நுட்பமாக எடுத்துள்ளது ‘இந்நூற்றாண்டின் சிறந்த தொலைநோக்கி’ என்றழைக்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

வறுமையிலிருந்து மீளும் இந்தியா

2005 – 2019 இடையேயான ஆண்டுகளில் கிட்டத்தட்ட 415 மில்லியன் இந்திய மக்கள் சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல தரப்பட்ட வறுமைகளிலிருந்து மீண்டுள்ளதாகவும், இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. வறுமையிலிருக்கும் சிறார்களின் சதவிகிதம் 34.7 சதவிகிதத்திலிருந்து 21.8 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவில் பூர்வீக பழங்குடியின மக்களிடமே திருப்பியளிக்கப்பட்ட ஊசியிலை காடுகள்

பத்து பூர்வீக பழங்குடியினங்களிடம் கிட்டத்தட்ட 500 ஏக்கருக்கும் மேலான ஊசியிலை மரக்காடுகள் பாதுகாக்கப்படவும், சரிசெய்யப்படவும் அவர்களிடமே திருப்பளிக்கப்பட்டன.  அருகி வரும் ஊசியிலை மரங்களுக்கு மட்டுமல்லாது பல அருகி வரும் விலங்குகளுக்கும் வீடாக அந்த காடு விளங்குகிறது.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment