பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலால் ஒன்றின்பால் ஈர்க்கப்பட்டு ஏதாவது ஒரு கலையில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் அதேபோல் தன்னுடைய வாழ்வில் புகைப்படக்கலையில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் திரு. நாராயண சங்கர். புதுச்சேரியை சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பின் தன் செல்லமகள் பிறந்தவுடன் அவளது ஒவ்வொரு அசைவையும், வளர்ச்சியையும் ஒவ்வொரு காலகட்டமாக அதனை பதிவு செய்து மகளிடமே அந்தப் படங்களை « பொக்கிஷமாக » தந்தையின் பரிசாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவருள் தோன்றவே உடனடியாக ஒரு YASHICA பிலிம் ரோல் கேமராவை 1997-இல் வாங்கி புகைப்படக்கலையில் கால் பதித்திருக்கிறார்.
அன்று மகளை படம் பிடிக்க வேண்டும் என்ற அந்த ஆசையே இன்றும் அவரை புகைப்படக்கலையில் பயணிக்க வைக்கிறது என்கிறார். தனது குழந்தையை படம் பிடிக்கத் தொடங்கிய அவர் பின்னர் படிப்படியாக புகைப்படக்கலையில், தொழில்நுட்ப வளர்ச்சியால் பிலிம்ரோல் கேமராக்கள் டிஜிட்டல் கேமராக்களாக உருவெடுத்ததும் இவரது புகைப்படக்கலையும் வேகமெடுத்தது. குழந்தை மற்றும் குடும்ப உறவுகளின் நிகழ்வுகளை படமெடுத்துக்கொண்டிருந்த திரு.நாராயண சங்கர் பின்னர் தனது வசிப்பிடமான புதுச்சேரியை தனது வித்தியாசமான கோணத்தால் அழகுபடுத்திக் காட்டியிருக்கிறார். அவரது புதுச்சேரி படங்கள் முகநூலில் மிகப்பிரபலம். எடுத்த படத்தை எடிட்டிங் என்ற பெயரில் அதன் உண்மைத்தன்மையை மாற்றாமல் அப்படியே கேமரா அளிக்கும் ரிசல்டை பதிவேற்றம் செய்வது அவரது வாடிக்கை.
முகநூலில் இவரது புதுச்சேரி படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற பின்னர் புகைப்படக்கலையில் ஏதாவது வித்தியாசமாக சாதிக்கவேண்டும் என எண்ணியபோது அவருக்கு தோன்றியது 365 photo project. அதாவது வருடம் 365 நாட்களும் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதுதான். இதற்கு அவர் தேர்ந்தெடுத்தது புதுச்சேரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையாகும். 365 நாட்கள் தொடர்ந்து புதுச்சேரி காந்தி சிலையை வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டார். இக்கால கட்டத்தில் அவர் வெளியூர்களுக்கு செல்வது மற்றும் சில முக்கிய குடும்ப நிகழ்வுகளையும் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி Smile என்ற தலைப்பில் மக்களின் புன்னகையை படம் பிடித்து வைத்திருக்கிறார். இவரது இப்புன்னகை பொக்கிஷத்தில் இன்றைய தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின், புதுச்சேரி முன்னால் முதல்வர் திரு.நாராயணசாமி, நடிகர்கள் விவேக், ரேவதி, சந்தானமும் அடங்குவர். மேலும் இன்று நலிவுற்று இருக்கும் தெருக்கூத்து கலை புதுவையைச் சுற்றி எங்கு நடந்தாலும் (தமிழகம்) அவற்றை படம் பிடித்து முகநூலில் பதிவிட்டு அவர்களை தன்னால் இயன்றவரை ஊக்கப்படுத்திக்கொண்டு வருகிறார். அதேபோல் பரதநாட்டிய நிகழ்ச்சியை படம் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். நாட்டிய கலைஞர்களின் அபிநயத்தை அப்படியே தத்ரூபமாக படம்பிடிப்பதில் வல்லவர். பல நாட்டிய கலைஞர்களையும் இவரது கேமரா சிறைபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10,000 க்கும் மேலான பரத நாட்டிய புகைப்படங்கள், சுமார் 1000 க்கும் மேலான « புன்னகை » படங்கள் மற்றும் புதுச்சேரியின் படத்தொகுப்பில் சுமார் 1500 படங்களுக்கு மேல் என ஒரு பெரிய புகைப்பட களஞ்சியத்தையே தன்வசம் வைத்திருக்கிறார் திரு. நாராயண சங்கர் அவர்கள்.
இவரது படங்களுக்கெல்லாம் முதல் ரசிகையாக இவர் குறிப்பிடுவது இவரது மனைவியைத்தான். எடுத்த படங்களை முதலில் மனைவியிடம் காட்டி மகிழ்கிறார் திரு.நாராயண சங்கர். இவரது படங்களை ரசிக்கும் அவர் இவரது புகைப்படக்கலைக்கு இன்றும் மிகவும் ஊக்கம் தருகிறார். இரண்டாவது ரசிகையாக தன் மகளை குறிப்பிடுகிறார்.
எந்த மகளுக்காக அவர் இந்த புகைப்படக்கலைக்குள் நுழைந்தாரோ இன்று இவரது படங்களால் கவரப்பட்ட மகள் செல்வி. ஆனந்தலஷ்மியும் ஒரு புகைப்படக்கலைஞராக கேமராவை கையில் எடுத்திருப்பதை மகிழ்ச்சியாகவும் பெருமிதத்தோடும் கூறுகிறார்.
தன் மகளை சிறு குழந்தையிலிருந்து வளரும் பருவம் வரை (இன்று M.com இறுதியாண்டு படிக்கிறார்) அவர் எடுத்த சுமார் 500 பிலிம் ரோல் படங்களை ஒரு பெரிய ஆல்பத்தில் ஒட்டி அவரது மகளுக்கு பொக்கிஷமாக கொடுத்திருக்கிறார் அவர். இன்றைய உலகம், டிஜிட்டல் உலகம் என்பதால் டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் படங்களை மகளிடம் அவ்வப்போது digital backup ஆக கொடுத்து விடுகிறார்.
மேற்கண்ட செய்திகளை வைத்து அவர் தொழில்முறை புகைப்படக்கலைஞர் என எண்ணி விடவேண்டாம். அவரது தொழில் விவசாயம். ஆர்கானிக் முறையில் சுருள் பாசி வளர்த்து அதனை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.
மேலும் புதுச்சேரி புகைப்படக்கலைஞர்கள் குழுமத்தில் (Pondicherry Photography Club) சீனியர் அட்மினாகவும் செயல்பட்டு வருகிறார் திரு நாராயணசங்கர் அவர்கள்.
இவரது முகநூல் பக்கம் : https://www.facebook.com/narayana.sankar.7
எழுத்து :
–நித்தி ஆனந்த்.
5 Comments
Vaidegi
Wowwww it’s really great news you deserved for this… You are pride of Pondicherry…. Congratulations 🎉🥳🥳
saravanan arunachalam
நல்வாழ்த்துக்கள் நாராயணசங்கர் சார்
Harshath khan
Happy to see Narayan Shankar sir in this article . Very proud. Thank you Nithi anand for the write-up.. Great work. Congrats.
Sridevi
Nice coverage Nithianand..and Thanks for upbringing Narayana Shankar who has real passion, dedication on his doing. Wishing good luck to you both… All the best
karunakaran. G
Great going Narayana Shankar Sir, his legendary composing of photography is just awesome……..