பிரான்சு தமிழ் சங்க துணைத் தலைவருக்கு தமிழக அரசின் இலக்கிய விருது !

தமிழக அரசு நிறுவனமான மதுரை உலகத்‌ தமிழ்ச்‌ சங்கம்‌, இலக்கியத்தில்‌ சிறந்து விளங்கும்‌ அயலகத்‌ தமிழறிஞருக்கு ஆண்டுதோறும்‌ உலகத்‌ தமிழ்ச்‌ சங்க விருதினை வழங்கிச்‌ சிறப்பித்து வருகின்றது. தமிழ்‌ மொழி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றும் பெருமக்களைக்‌ கண்டறிந்து அவர்களின்‌ பணிகளைப்‌ பாராட்டியும்‌, அவர்களைப்‌ பெருமைப்படுத்தும்‌ விதமாகவும்‌ தமிழக அரசே இவ்விருதுகளை வழங்கி கௌரவிக்கின்றது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக 2020 ஆண்டிற்கான ‘உலகத்‌ தமிழ்ச்‌ சங்க இலக்கிய விருது’ பிரான்சு நாட்டைச்‌ சார்ந்த புதுவைத்‌ தமிழ்ப்‌ பேராசிரியரும் பிரான்சு தமிழ் சங்கத்தின் துணைத் தலைவருமான முனைவர்‌ அலெக்சிசு தேவராக சேன்மார்க்‌ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க்

இவர்‌ பிரான்சு தேசத்திற்குப்‌ புலம்‌ பெயர்ந்த பிரெஞ்சுக்‌ குடியுரிமை பெற்ற பேராசிரியரும்‌, எழுத்தாளருமாவார்‌. 

இவ்விருது கடந்த திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திருவாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது. தமிழில் இவர் செய்த இலக்கியப்‌ பணிகளைப்‌ பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுவைப்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ தமிழ்‌ இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்‌ பெற்ற இவர்‌, சங்க இலக்கியம்‌, காப்பியம்‌, மானிடவியல்‌, பண்பாடு, புலம்‌ பெயர்‌ இலக்கியம்‌ சார்ந்த ஆய்வுத்‌ துறையில்‌ தொடர்ந்து இயங்கி வருபவர்‌. சென்னை இலயோலா கல்லூரியிலும்‌, கடலூர்‌ தூய வளனார்‌ கல்லூரியிலும்‌ பேராசிரியராகப்‌ பணியாற்றியவர்‌. தமிழ் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முனைவர் அவர்கள், தமிழ்‌ இலக்கியப்‌ பட்டிமன்றப்‌ பேச்சாளர்‌, ஆய்வரங்கங்கள்‌ கருத்தாளுநர்‌, பாட்டரங்கத்‌ தலைவர்‌ எனப்‌ பன்முகத்‌ தன்மை கொண்டவராகச்‌ செயல்பட்டு வருகின்றார்‌. பன்னாட்டுக்‌ கருத்தரங்கங்களில்‌ ஆய்வுக்‌ கட்டுரைகளையும்‌, பன்னாட்டு ஆய்விதழ்களில்‌ பல்வேறு கட்டுரைகளையும்‌ எழுதியுள்ளார்‌. ஏழு ஆய்வு நூல்களையும்‌, ‘பாரிசு ஒரு பரிசு’ என்னும்‌ சுற்றுலா இலக்கிய நூலையும்‌, ‘நகரம்‌ முதல்‌ நாடு வரை’ என்னும்‌ பயண இலக்கிய நூலையும்‌ படைத்துள்ளார்‌.

ஊடக செய்தி…

தமிழுக்கு தொண்டாற்றி விருது பெறும் ஐயா அவர்களை வணக்கம் பிரான்சு குழுவும், பிரான்சு தமிழ் இளைஞர்களும் வாழ்த்துகின்றோம். ஐயா அவர்களின் தமிழ் பணி மென்மேலும் சிறக்கவும் வேண்டுகின்றோம்.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment