திருவாங்கூர் சமஸ்தான அரசு, திரு-கொச்சி மாநில அரசு, கேரள மாநில அரசு, இந்திய அரசு என நான்கு அரசுகளை எதிர்த்து அரசியல் செய்த மாபெரும் தலைவர் – அச்சுதானந்தன்.
சமஸ்தான காலத்து காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அச்சுதானந்தன், பொதுவுடைமை தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு மக்கள் போராட்டங்களில் இணைந்தார். சர் சி.பி. ராமசாமி திவான் பதவியில் இருந்த காலத்தில் நடைபெற்ற புன்னப்புரா–வயலாறு போராட்டத்தின் போது தீவிரமாகக் களமாடி, சிறை சென்ற போராளிகளில் முக்கியமானவர். திருவாங்கூர் சமஸ்தானக் காலம் முதல் அவரது இறுதி காலம் வரை மக்களுக்கான தலைவராகவே வாழ்ந்தவர்…
திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய மன்னர் ஆட்சியையும் நிலபிரபுத்துவத்தையும், தரவாடிகளையும் கடுமையாக எதிர்த்தவர்.
தன் வாழ்நாள் முழுவதும் திருவாங்கூர் மன்னர்கள் மற்றும் திவான் சர் சி.பி. ராமசாமியின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து எழுதியவர்.
ஜனநாயக நாடாக இந்தியா உருவான பின்பும், திருவாங்கூர் அரச குடும்பம் கோவில்கள் உள்ளிட்ட மக்களுக்குரிய அமைப்புகளில் செல்வாக்கோடு இருப்பதை எதிர்த்தார்.
“சபரிமலையில் திருவாங்கூர் அரச குடும்பத்திற்கு எந்தத் தெய்வீக உரிமையும் இல்லை; அந்தக் கோவில் மக்களுக்குரியது,” என்றார்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தான் பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகளிலிருந்து மிகப்பெரிய அளவில் தங்கம் கண்டெடுக்கப்பட்டது.
“அந்தக் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் மக்களுக்கு சொந்தமானவை. உழைக்கும் மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அந்தப் பொன்னும் பொருளும் மக்களிடமே சேர வேண்டும். அதை கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை தேவை. அரச குடும்பத்திற்கு அதில் எந்த உரிமையும் இல்லை,” என ஆணித்தரமாகப் பேசியவர்.
அந்த நேரத்தில், அவரது பேச்சுக்கு எதிராக கேரள முழுவதுமிருந்து சில இந்து அமைப்புகள் மற்றும் சாதி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், தனது நிலைப்பாட்டில் அப்படியே நிலைத்தார். அவரது கட்சிக்குள் கூட இந்த விடயத்தில் அவருக்கு எதிராக கருத்துகள் எழுந்தபோதும், அவர் அதை அஞ்சாமல் எதிர்கொண்டார்.
தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் செய்தபோது, அவர் மிகத் தீவிரமாக அதனை ஆதரித்தார். கூடங்குளம் எதிர்ப்புக்கு ஆதரவாக நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். 2012-ஆம் ஆண்டு இடிந்தகரை சென்று மக்களைச் சந்திப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தபோது, களியக்காவிளையில் தமிழ்நாட்டு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
தமிழ்நாடு அரசு “பாதுகாப்பு காரணங்கள்” என்று சொல்லி அவரைத் தடுத்தது.
“நான் மக்களை சந்தித்து, மக்களோடு போராட்டத் திடலில் நிற்கவே வந்தேன். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக மட்டுமே திரும்பச் செல்கிறேன்” என்று கூறி அமைதியாகப் புறப்பட்டார்.
“பொதுமக்கள் பாதுகாப்பை புறக்கணிக்கும் எந்த ஒரு திட்டமும் ஏற்கத்தக்கதல்ல” என அவர் அன்று பேசியது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
அணுமின் நிலையத் திட்டத்தின் போதாமைகள், தரமற்ற உபகரணங்கள், பாதுகாப்பு குறைகள் மற்றும் ஊழல் தொடர்பாகத் தொடர்ந்து எழுதி வந்தார்…
2017-ல் கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் முடிவை கடுமையாகக் கண்டித்ததோடு, “அணு உலை கழிவுகள் எங்கே கொண்டு செல்லப்படும்?” என்பதற்கான வெளிப்படைத்தன்மை தேவை என வலியுறுத்தினார்.
ரஷ்ய–இந்திய கூட்டு திட்டமான கூடங்குளம் அணுமின் நிலையத்தை, இந்திய மற்றும் தமிழக கம்யூனிஸ்டுகள் மிகத் தீவிரமாக ஆதரித்த அந்தக் காலத்தில் கூட அவர் தனது நிலைப்பாட்டில் தளரவில்லை.
அணுமின் நிலையத்துக்கு எதிரான அவரது நிலைப்பாட்டிற்காக அவரை அவரது கட்சிதான் கடுமையாக எதிர்த்தது. “பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்கள்” என கட்சி அழுத்தம் கொடுத்தபோதும்,
“நான் மக்களின் பாதுகாப்புக்காக பேசியது தவறு இல்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என இறுதிவரை உறுதியாக நிலைத்தார்…
பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தான ஒடுக்குமுறைகளுக்கே பயப்படாத அவர் கட்சிக்கா பயப்படுவார்…?
அவர் ஒரு மாபெரும் மக்கள் போராளி…
“நான் ஒரு செத்துக்காரனின் மகன்” என்று மேடைகளில் முழங்கி சுவர்களில் விளம்பரம் செய்து அரசியல் லாபம் தேடாத, ஒரு குட்டநாட்டின் ‘அசல் செத்துக்காரனின்’ மகனான தோழர் வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் என்றென்றும் மக்கள் மனதில் நீடித்து நிற்பார்…
லால்சலாம் காம்ரேட்!