Raveendran Natarajan -க்கு என்னுடைய பலகீனம் பிடிபட்டு போயிட்டு. தூண்டிலில் புழுவெல்லாம் மாட்டுவதில்லை. தூண்டிலை நீட்டினாலே சிக்கும் நிலையில் நானிருந்தேன். இந்த முறை உடன் சிக்கியவர்கள் டாக்டர் Karthik Raja R-வும், Osai Chezhiyan-னும்.
உலகையே ஆச்சரியப்பட வைத்த ஒரு சரித்திர நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் குரங்கனி மலையை நோக்கி எங்களது பயணம் துவங்கியது. முதல் நாள் பறவைகள் காண்தலும் அடுத்த நாள் குரங்கனியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேசன் வரை ட்ரெக்கிங் செல்வது என திட்டம். எங்களை இந்தப் பயணத்தில் வழிநடத்தியவர் ஓய்வு பெற்ற வன அதிகாரி திரு.R Ravindran ஆவார்கள்.
காலையில் மதுரையில் இருந்து கிளம்பியபோதே எலும்பியல் மருத்துவரான நண்பர் கார்த்திக் ராஜாவும் நானும் அந்த சரித்திரப் புகழ்பெற்ற நிகழ்ச்சியை கண்டு தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்தோம்.
கார் நேராக வைகை அணைக்கு அருகில் உள்ள வனப்பயிற்சிக் கல்லூரிக்கு சென்றது. அங்கு ரவீந்திரன் சார் எங்களை வரவேற்று அந்தக் கல்லூரியை சுத்திக் காட்டினார். மான்களும், பறவைகளும், பழந்தின்னி வவ்வால்களையும் பார்த்து புகைப்படம் எடுத்த பின்பு வாட்ச் டவரில் ஏறி வைகை அணையை உற்று நோக்கினோம்.
அதற்கு முந்தைய நாள் தான் செல்லூர் விஞ்ஞானி அணை நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் மிதக்க விட்டிருந்தார். அந்தப் புகழ் பெற்ற தெர்மோகோல்கள் எங்கள் கண்களில் சிக்கவேயில்லை.
அதற்குள் மதியமாகி விட போடியை நோக்கிக் கிளம்பினோம். போடியில் மதிய உணவு உண்பதாக திட்டம். அதற்கு முன்பு மலையில் எங்களுக்கு வழிகாட்ட வனத்துறையில் Botanist ஆக இருந்த ஒரு நண்பரும் வந்திருந்தார். போடிக்குள் நுழைந்ததும் பசி மந்தப்பட்டதால் கம்மங்கூழ் குடிப்பது என்று முடிவாகியது.
பஸ் நிலையம் அருகே இருந்த ஒரு கடையில் கம்மங்கூழ் வாங்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
பசி மந்தப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாத வெயிலுக்கு குளிர்ச்சியாக கம்மங்கூழ் இருந்தது. கம்மங்கூழுக்கு தொடுகறியாக மாங்காய் ஊறுகாய், மோர் வத்தல் போன்ற இன்ன பிற வஸ்துக்களுடன் பச்சை மிளகாய் தொக்கும் இருந்தது. அனைவரும் பிரியமுடன் கூழை காலி செய்து கொண்டிருந்தோம். நான் முதலாவது சொம்பை காலி செய்துவிட்டு இரண்டாவதுக்காக காத்திருந்தேன். அப்போது என்னருகில் ஒரு பாட்டியும் பேரனும் கம்மங்கூழ் குடித்துக் கொண்டிருந்தனர். கூழைக் குடிக்க மக்கர் செய்து கொண்டிருந்த பேரனை அதட்டிய பாட்டி பச்சை மிளகாய் தொக்கில் ஒரு மிளகாயை எடுத்து பேரனின் நாக்கில் ஒரு தேய் தேய்த்து விட்டு தனது நாக்கிலும் ஒரு தேய் தேய்த்து விட்டு அந்த மிளகாயை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டார்.
யார் கண்ணிலும் படாத இச்செயலுக்கு நான் மட்டுமே சாட்சியாக இருந்தேன். அடுத்த சொம்பு கம்மங்கூழை எதையும் தொடாமல் மடக்கடித்து விட்டு நகர்ந்தேன். உடன் வந்த மற்றவர்கள் சுவாரசியமாக பேசிக் கொண்டே இரண்டாவது சொம்பு கூழை நிதானமாக குடிக்கத் துவங்கினர். தொடுகறியாக பச்சை மிளகாய் காலியாகிக் கொண்டிருந்தது. காருக்குள் எல்லோரும் அமர்ந்த பின்புதான் பச்சை மிளகாய் விவகாரத்தை அனைவரிடமும் கூறினேன். அதிர்ந்து போன எல்லோரும் ஆசுவாசப்பட்டுக் கொண்டது
“நல்லவேளை, அத நான் தொடல” என்று.
ஒருவழியாக குரங்கனி வந்து சேர்ந்தோம். காரை சோதனைச் சாவடி அருகில் நிறுத்தி விட்டு வனத்துறையின் விடுதியை நோக்கி நகர்ந்தோம். வெயில் தணிந்திருந்ததால் உடனடியாக பறவைகள் காண்பதற்காக குரங்கனி – முதுவக்குடி பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.
முதுவர்கள் என்ற மலைவாழ் மக்கள் காடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்து அவர்களுக்கான அரசு செய்து கொடுத்த செட்டில்மெண்ட் பகுதி தான் “முதுவக்குடி”.
(தேனி டாக்டர் சரவணன் Sarav Urs இந்தப் பகுதிக்கு குழுவினரை ட்ரெக்கிங் அழைத்துச் செல்வார்).
இந்த முதுவர்களை பற்றி சுவாரசியமான தகவல்கள் உண்டு. முதுவர்களிலேயே மலையாள முதுவர்கள், பாண்டிய முதுவர்கள் என்ற பிரிவு உண்டு.
பாண்டிய முதுவர்கள் சில நூறு வருடங்களுக்கு முன்புதான் காட்டில் குடியேறியதாக நம்பப்படுகிறது.
பாண்டிய மன்னன் போரில் தோல்வி அடைந்ததால் மதுரையை விட்டு வெளியேறிய மக்கள் தங்கள் குலதெய்வமான “மீனாட்சி” அம்மையின் விக்கிரகத்தை முதுகில் சுமந்து சென்றதால் முதுவர்கள் என்றும், போரில் இறந்த பாண்டிய மன்னனை முதுகில் சுமந்து சென்றதால் முதுவர்கள் என்றும், மதுரையை விட்டு வெளியேறிய போது குழந்தைகளை முதுகில் சுமந்து சென்றதால் முதுவர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக கருதுவர்.
மற்றுமொரு கருத்தும் உண்டு. கண்ணகி கோவலன் கொலையால் வெகுண்டெழுந்து மதுரையை தீக்கிரையாக்கியதும் செல்வமிழந்த அந்த நகரை விட்டு வெளியேறி காடுகளில் புகுந்த மக்களே முதுவர்கள் என்றும் கூறுவர். ஆக முதுவர்களின் பூர்வீகம் மதுரை என்பது மட்டும் உறுதி.
அந்தப் பாதையில் பலவிதமான பறவைகளை முதன் முதலாகப் பார்த்தேன். Birding பாஷையில் Lifer என்று சொல்வார்கள்.
ஆரஞ்சு மின் சிட்டு – Orange Minivet, சக்களத்தி குயில் – Grey Bellied Cuckoo, சாம்பல் தலை சின்னான் – Grey headed Bulbul, செங்குயில் – Banded bay cuckoo, வெண் மார்புக் கரிச்சான் – White bellied Drongo, பச்சைப் புறா – Yellow footed green pigeon போன்ற பறவைகளை முதன் முதலாகக் கண்டேன். இவை தவிர குக்குறுவான், மாங்குயில், கரிச்சான், காட்டுச் சிலம்பன்களும் கண்டோம். Malabar giant squirrel லையும் பார்த்தோம்.
இந்தக் குழுவில் நண்பர் ரவீந்திரன் பறவைகளை அடையாளம் காண்பதில் அனுபவமுள்ளவர். நானோ கத்துக்குட்டி. அதிர்ஷ்டவசமாக டாக்டர் கார்த்திக் என்னுடன் சேர்ந்து வந்து கொண்டிருந்தார். அவரும் அப்போது தான் பறவைகளைப் பற்றி ஆர்வம் கொண்டிருந்தவர். என்னுடைய அரைகுறை மேதாவித்தனத்தை அவருக்கு எப்படியாவது புரிய வைத்து விட மெனக்கெட்டுக் கொண்டிருந்தேன்.
“அங்க பாருங்க டாக்டர் அது, இங்க பாருங்க டாக்டர் இது“ என்று அளந்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் மற்றவர்கள் முன் சென்றுவிட நானும் டாக்டர் கார்த்திக்கும் பின் தங்கி விட்டோம்.
அப்போது தான் அந்த வித்தியாசமான பறவை என் கண்ணில் பட்டது. வனத்தில் இருக்கும் போது எந்தவிதமான சத்தமோ அல்லது திடீர் அசைவுகளோ பறவைகளை கலவரப்படுத்தி விடும். ஆகையால் சைகையினால் மட்டுமே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வோம். மேலும் ஒரு பறவையின் இருப்பை நமது இடத்திலிருந்து தெரியப்படுத்த Clock Position என்ற முறையை பயன்படுத்துவோம். அதாவது, ஒரு பறவை 3′ o Clock position-ல் இருக்கிறதென்றால் நமது நிலை 12 மணி எனவும், பறவை 3 மணி இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் அர்த்தம். டாக்டர் கார்த்திக்கை சமிக்கை மூலம் அழைத்த நான் “2 o clock position ல பாருங்க” என கிசுகிசுத்தேன்.
ஏதோ ஒரு வித்தியாசமான பறவை.
டாக்டர் கார்த்திக் முதலில் வெறும் கண்களால் நோக்கினார், அடுத்து என்னிடமிருந்த பைனாக்குலரை வாங்கி பார்த்தார், பின்னர் எனது காமிராவில் உள்ள 150- 600 m டெலிலென்ஸ் மூலம் ஜூம் செய்து பார்த்தவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு சத்தம் செய்யாமல் நகர்ந்து விட்டார். மற்றவர்களை கூப்பிடச் செல்கிறார் போலும் என நான் மீண்டும் அதை பைனாகுலரில் பார்க்கும்போது தான் தெரிந்தது, அது ஒரு காய்ந்து போன மரத்தின் இலை. இந்த சம்பவத்திற்கு பின் டாக்டர் கார்த்திக் என் பக்கமே வரவில்லை. இதற்குள் இரவு நெருங்கியதால் வனத்துறை இடத்தை அடைந்தோம். அங்கு எங்களுக்கான டெண்ட் கட்டப்பட்டு தயாராக இருந்தது. இரவு உணவுக்கு குரங்கனி சென்று வந்தோம்.
அந்த டெண்ட் நான்கு பாகங்களாக இருந்தது. நடுவில் இருவர் படுக்குமளவும், தலைமாட்டில் ஒருவர் படுக்குமளவு தனி பிரிவு ஒன்றும் இரண்டு பக்கங்களிலும் ஒருவர் படுக்குமளவு தனிப்பிரிவுகளுமிருந்தது. நானும் டாக்டர் கார்த்திக்கும் நடுவில் படுத்துக்கொள்ள சுற்றியிருந்த பகுதிகளில் மற்றவர்கள் படுத்துக் கொண்டார்கள். சுற்றி அலைந்து வந்த அயற்சியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை டாக்டர் கார்த்திக்கின் அடியும் மிதியும் எழுப்பி உட்கார வைத்தது. அவரோ நன்றாக தாங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி “எதுக்குங்க அடிச்சீங்க?” என்று கேட்டபோது, புன்சிரிப்போடு “ பாம்ப அடிக்கிற மாதிரி கனவு “ என்றார். பச்சை மிளகாய்க்கான பழிவாங்கல் என பின்னர் புரிந்தது.
அடுத்த நாள் அதிகாலையில் சென்ட்ரல் ஸ்டேஷன் ட்ரெக்கிங் கிளம்ப வேண்டும். மரணத்தின் விளிம்பு வரை சென்று வரப் போகிறேன் என்பதை அறியாமல் நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்தேன்.
மறுநாள் அதிகாலையிலேயே சென்ட்ரல் ஸ்டேஷன் எனப்படும் இடத்திற்கு கிளம்பி விட்டோம். இந்த இடமும் தடமும் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை வர்த்தகத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சென்ட்ரல் ஸ்டேஷன் மலைச் சிகரமும், டாப் ஸ்டேஷன் மலைச் சிகரமும் தமிழ்நாட்டில் இருந்தாலும் அதற்கான பாதை மூணாறிலிருந்தது. மூணாறிலிருந்து இருந்து மாட்டுப்பட்டி வழியாக கண்ணன் தேவன் தோட்டத்திலிருந்த தேயிலை பெட்டிகள் ரோப் கார் மூலமாக டாப் ஸ்டேஷன் வந்து, அங்கிருந்து குரங்கனி வந்து அங்கிருந்து மாட்டு வண்டிகளில் போடி வந்து அங்கிருந்து ரயில் மூலம் பல இடங்களுக்குச் செல்லும். இப்படிப்பட்ட முக்கிய கேந்திரமாக இவ்வூர்கள் இருந்திருக்கின்றன. தற்போது இவ்வூர்களில் கொஞ்சம் குடும்பங்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
குரங்கனியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று அவ்வூர் மக்கள் பயன்படுத்தும் பாதை. மற்றொன்று காட்டெருமைகளும், தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகளும் பயன்படுத்துவது. Botanist நண்பர் எங்களை காட்டெருமைகள் பயன்படுத்தும் பாதையில் அழைத்துச் சென்றார். காரணம், அந்தப் பாதை மலைக்காட்டின் உள் வழியாக இயற்கை நீர் வீழ்ச்சிகளும், சுனைகளும் இருந்தது. மக்கள் பயன்படுத்தும் மற்றுமொரு பாதை மலையின் விளிம்பை ஒட்டிச் செல்வதால் பள்ளத்தாக்கின் அழகை மட்டுமே ரசிக்க முடியும்.
காட்டுப் பாதையில் நண்பர் ஒரு நீர்வீழ்ச்சியை காட்டும் பொருட்டு எங்களை அழைத்துச் சென்றார். வனத்துக்குள் செல்லும் முக்கியமான விதியொன்றை நான் கடைபிடிக்கத் தவறியதால் நான் மரணத்தின் வாசலை எட்டிப் பார்த்தேன்.
வனத்தினுள் கூட்டமாக ட்ரெக்கிங் செல்லும் போது முன்பகுதியில் அனுபவமுள்ளவர்களும் பின் பகுதியில் Sweepers எனப்படும் அனுபவமுள்ளவர்களுக்கு மத்தியில் தான் அனைவரும் செல்ல வேண்டும். இதன் மூலம் வனத்தினுள் யாரும் தொலைந்து போவதற்கான சாத்தியக் கூறுகள் குறையும். அப்படியே பாதை தவறிவிட்டாலும் அங்கே இங்கே சுற்றாமல் நின்ற இடத்திலேயே பாதுகாப்பாக நின்று கொண்டு சத்தம் செய்ய வேண்டும். வனத்தினுள் நாமே பாதையை கண்டுபிடிக்க முனைந்தால் அது மேலும் நம்மை உள்பகுதிக்கு அழைத்துச் செல்லும் அல்லது திசை தெரியாமல் ஒரே இடத்தை சுத்தி வந்து கொண்டிருப்போம்.
குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் வனத்தினுள் செல்லும் போது கண்டிப்பாக ஒருவருக்கொருவர் கண்பார்வையில் இருக்க வேண்டும். ஆர்வக்கோளாறில் இந்த விதியை தவறவிட்டேன். Botanist நண்பர் எங்களுக்கு அருவியை நன்கு காமிக்கும் பொருட்டு ஒரு ஒத்தையடிப் பாதையில் அழைத்துச் சென்றார். அது ஒரு பாறையிலிருந்து மற்றொரு சமதளத்துக்குச் செல்லும் வழி. அதில் ஒரு பகுதியில் ஒரே ஒரு சிறு பாறையின் மீது ஒரு பாதத்தை மட்டுமே வைத்து தாண்டிச் செல்ல இடமிருக்கும்.
சமதளத்தில் நின்று டாக்டர் கார்த்திக்குடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நான் ‘Malabar Whistling Thrush’ எனும் சீகார்ப் பூங்குருவியின் பாடலோசை கேட்டு அதை எப்படியாவது படம் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் தனியே வந்த வழி திரும்பினேன்.
அந்தச் சிறிய பாறையின் மீது கால் வைத்து தாண்டும் இடத்தில் கால் தடுமாறி தலைகீழாக சரிந்து விழுந்தேன். கீழே விழும்போது எனக்குள் எழுந்த எண்ணம் “ஆத்தே காமிரா போச்சே” என்பது தான். தரை மீது காமிரா மோதி விடாமல் இருக்க இடது கையால் காமிராவை பிடித்துக் கொண்டு வலது கையை வீசியதில் அகப்பட்ட “சுக்குநாறிப் புல்” எனும் Lemon Grass-ஐ பிடித்து தொங்கிக் கொண்டு தலைகீழாகக் கிடந்தேன். முதுகில் மாட்டியிருந்த காமிரா பையின் கனம் என்னைக் எழவிடச் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இழுத்துக் கொண்டிருந்தது.
அதே Malabar Whistling Thrush ன் பாடலோசை கேட்டு எனக்கு பின்னால் தற்செயலாக வந்த நண்பர் ரவீந்திரன் நான் விழும் சப்தத்தைக் கேட்டு ” ஐய்ய்யா! கேப்டன் விழுந்திட்டார், கேப்டன் விழுந்திட்டார்” என சிரித்துக் கொண்டே வந்தார்.
தலையில் நான் Beret எனும் ராணுவ தொப்பியை அணிந்திருந்ததால் ரவி எனக்கு கேப்டன் எனும் நாமகரணம் சூட்டியிருந்தார்.
சிரித்துக் கொண்டே என்னருகில் வந்தவர் என்னைப் பார்த்ததும் பேயறைந்தது போல முகம் மாறிவிட்டார். நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு நேர் கீழே நூறடிக்கும் மேலான பள்ளம். இடையில் ஒற்றை மரம்.
விழுந்தால் கபால மோட்சம்.
காமிராவை நீட்டிக் கொண்டிருந்த என்னை சட்டை செய்யாமல் விரைந்து என் கால்களை பற்றிக் கொண்டார். அதன் பிறகு மற்றவர்களும் வந்து என்னை மேலிழுத்தால் கபால மோட்ச பிராப்தி கிட்டாமல் போயிற்று. இந்த சம்பவத்திற்கு பின் வன அதிகாரி ரவீந்திரன் சார் Botanist இடம் இத்தகைய ஆபத்தான பாதைகளை தவிர்க்குமாறு கூறி விட்டார்.
கொண்டு போன காலை உணவை ஒரு தோட்டத்தில் வைத்து சாப்பிட்டு விட்டு மீண்டும் மலையேறத் துவங்கினோம். அந்தப் பாதையின் gradient எனப்படும் ஏற்றம் அதிகமாக இருந்தது. அது காட்டெருமைகளுக்கு மட்டுமேயான பாதை.
எப்போது கேட்டாலும், “இந்தா பக்கத்துல வந்தாச்சு” என்பதைத் தவிர நண்பர் வேறெதுவும் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 7 கி.மீ. பாதையை ஏறுவதற்கு நாங்கள் 3 மணி நேரம் எடுத்துக்கொண்டோம். மலை உச்சியை அடைந்து பள்ளத்தாக்கின் முனையில் உட்கார்ந்ததும் ஏறி வந்த அலுப்பெல்லாம் போய் எதையோ சாதித்தது போல மகிழ்ச்சி.
சென்ட்ரல் ஸ்டேஷன் உச்சியிருந்து பள்ளத்தாக்கை தாண்டி பார்த்த போது கொழுக்குமலையும், அதன் பாதையும் அதிலிருந்த ஒற்றை மரமும் எங்களை அடுத்த பயணம் அங்குதான் என பேச வைத்தது.
இயற்கையின் விதி விளையாட்டை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. அதற்கு அடுத்த மாதங்களில் கொழுக்கு மலைக்கு ட்ரெக்கிங் சென்ற 25 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் கருகி உயிரிழந்தனர்.
– குரூஸ் அந்தோணி ஹியுபட்