இடம்: பிரெஞ்சிந்தியா (புதுச்சேரி).
காலம்: 1926 ஆம் ஆண்டு.
இரண்டு நாட்களாகத் தூக்கமே பிடிக்கவில்லை சிவப்பிரகாசத்திற்கு.
ஈ.வெ. ராமசாமி நாயக்கர் புதுச்சேரிக்கு, அதுவும் தன் சொந்தக் கிராமமான முத்தியால்பேட்டைக்கு வருகிறார் என்று கேள்விப் பட்டதிலிருந்தே அவருடைய கால்கள் பூமியில் பதியவில்லை. ‘குடியரசு’ இதழ் மூலமாக அறிமுகமாகித் தன்னுடைய புத்தொளிர் சிந்தனைகளின் நீரோட்டத்தை நெறிப்படுத்தி வரும் ஆசானாக அவரை ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே சிவப்பிரகாசத்தின் இந்தப் பரபரப்பிற்குக் காரணம்.
அவர் எப்படி இருப்பார்? நம்ம ஊர் சின்னாத்தா முதலியார் மாதிரி இருப்பாரோ? சித்துக்கிருஷ்ண செட்டியார் போல இருப்பாரோ? தளவா வீராசாமி போல இருப்பாரோ? பஸ்தே இரிசப்பன் போல இருப்பாரோ? இப்படி எல்லாம் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு, அவரைப் பார்க்கவும், அவருடைய பேச்சைக் கேட்கவும் கனவிலேயே மிதந்து கொண்டிருந்தார், பதினெட்டு வயது இளைஞரான சிவப்பிரகாசம். காணும் நண்பர்களை எல்லாம் “ஈ.வெ.ரா. பேசுகிறார் வர்றியா?” என்று கேட்டுக் கேட்டு ஒரு குழுவை சேர்த்துக் கொண்டார். அந்த நாளும் வந்தது.
புதுவை, முத்தியால்பேட்டை, சாலடித் தெருவில் அந்த ‘உபந்நியாசம்’ நடந்தது. அக்காலத்தில் பொதுக்கூட்டம், சொற்பொழிவு என்ற சொல் வழக்குகள் இல்லை. ஈ.வெ.ரா. அவர்களுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டமும் இல்லை. மாலை தொடங்கிய உபந்நியாசத்திற்குத் ‘திராவிடன்’ இதழ் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர், சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை போன்றோரும் வந்திருந்தனர். அவர்களது பேச்சிலும், ஈ.வெ.ரா.வின் நீண்ட உபந்நியாசத்திலும் பெரிதும் கவரப்பட்டார் சிவப்பிரகாசம். பின்னர் அவருடன் நேரடியாக அறிமுகம்.
“போன்ழூர் முசியே” – சிவப்பிரகாசம்.
“அப்படின்னா இன்னா” – ஈ.வெ.ரா.
“தம்பி நமஸ்காரம் சொல்லுதுங்க” – சித்துக் கிருஷ்ண செட்டியார்
“என்ன செய்யறீங்க” – ஈ.வெ.ரா.
“பத்தாவது வரை படித்து விட்டுத் தறி வேலை செய்து கொண்டிருக்கிறேன்” – சிவப்பிரகாசம்.
“இந்த இயக்கத்துல எப்படி ஈடுபாடு வந்தது?”
“குடியரசு படிச்சுத் தெரிஞ்சுகிட்டேன்”
“இங்க எல்லாம் கிடைக்குதா?”
“கிடைக்கிதுங்க!”
“வீட்டுல ஒன்னும் சொல்றது இல்லையா?’
“சொல்றாங்க தான்! பெரிய கூட்டுக் குடும்பங்க. தலைமுறைத் தலைமுறையா பக்தியில் திளைத்து வந்தவங்க. இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க!”
“அவங்களை எல்லாம் மாத்த முடியாது. உங்கள மாதிரி இளைஞர்கள் முன் வந்தால் போதும். நம்ம தலைமுறையில் இருந்து மாற்றிக் காட்டுவோம்”.
“சரிங்க, ரொம்ப மெர்சிங்க!”
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடனான சந்திப்பும், உற்சாக வார்த்தைகளும் சிவப்பிரகாசம் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தன. தன்னிலிருந்து தலைமுறையையே மாற்றுவது என்று வைராக்கியத்தை மனது ஏற்றுக் கொண்டது. அன்று ஏற்பட்ட அந்த வைராக்கியம்தான், அன்று பெரியாரோடு கொண்ட தொடர்புதான், பின்னர் புதுவையில் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைக் காண வைத்தது.
(கவிஞர் புதுவைச் சிவம் என்று பின்னாட்களில் அறியப்பட்ட திரு ச. சிவப்பிரகாசம் (என் தந்தையார்) அவர்களின் 33 ஆவது நினைவு நாள் இன்று).
- முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.