நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா ?
பெண்கள் அடிக்கடி குழாயடி சண்டை போடுவார்கள். ஒரு குடம் தண்ணீருக்காக அவர்கள் தலைமுடியை பிடித்து கூட அடித்துக்கொள்வார்கள். பலருக்கு மண்டையெல்லாம் பிளந்திருக்கிறது .பல நேரங்களில் இந்த குழாயடி சண்டைகளை ஆண்கள் பரிகசித்திருக்கிறார்கள். எங்கேயாவது இரண்டு பெண்கள் சண்டை போட்டால் உடனே “பாத்தியா கொழாயடி சண்ட போடுதுங்க” என்று கிண்டல் கேலி செய்வார்கள். ஏன் சில சமயம் நானே அந்த சண்டைகளை பற்றி விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் காலம் போக போக அனுபவம் வாயிலாக இந்த குழாயடி சண்டைகள் எனக்கு மிக பெரிய ஞானத்தை கொடுத்திருக்கின்றன. நீங்கள் பாருங்கள், பெண்கள் தத்தம் வீடுகளில் எவ்வளவு அடிமைப்பட்டிருந்தாலும் இந்த மாதிரி சண்டைகளில் குறிப்பாக தண்ணீர், மளிகை கடை போன்ற இடங்களில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சண்டை போடும் இடங்களில் அவர்களில் தனித்தன்மையும் ஆளுமையும் மிளிரும். கண்களில் ஒரு வேட்கை, உடலில் ஒரு தெம்பு, நியாயமான ரௌத்திரம் என்று தன் குட்டிகளுக்கு இரைதேடும் தாய் விலங்கினைப் போல் சீறி எழுவார்கள். மற்ற நேரத்தில் பார்த்தால் இதெல்லாம் இல்லாமல் சாதாரணமாக இருப்பார்கள் . அங்கே அந்த தெரு மூலையில் சண்டை போட்ட பெண்ணை இது இங்கே இப்படி இருக்கிறாரே ஏன் என வியப்பாக இருக்கும் .
பெண்களுக்கும் இருக்கும் அதி விசேஷ குணமே இதுதான். தன் வாழ்வாதாரத்தை எப்படியாவது தக்க வைக்கும் போர்க்குணம். அசாத்திய குணாதிசயம் இது. பெண் விலங்குகளில் இதை அதிகம் காணலாம். இதில் சுயநலம் இருக்காது. முழுக்க முழுக்க மற்றவர் நலன் நோக்கிய அவர்களின் அத்தனை பாய்ச்சலும் இருக்கும். அந்த ஒரு குடம் தண்ணி என்ன அவளுக்கு மட்டும்தானா ? அந்த முழு குடும்பத்திற்கும் தானே ?. மேலிருந்த பார்வைக்கு அது சுயநலமாக தெரிந்தாலும் ஆழமாக சிந்தித்தாலே அதில் பொது நலனே இருக்கும். அதுவே பெண்ணின் குணம் .
இதற்குத்தான் சொல்கிறேன் குழாயடி சண்டை என்பது அசிங்கம் அல்ல , அவமானம் அல்ல, மாறாக பெண்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்க எந்த எல்லை வரை செல்லுவார்கள் என்பதின் ஆக சிறந்த எடுத்துக்காட்டு. ஆகவே இனி பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சண்டை போடும்போது பரிகாசிக்காதீர்கள். ஏனென்றால் ஆண்களால் அதில் கால் பங்கைக் கூட கழட்ட முடியாது .
அதே வேளையில், இந்த குழாயடி சண்டைகளில் வெளிப்படும் பாய்ச்சலை பெண்கள் ஒரு சில வாழ்வாதார விஷயங்களில் காட்டுவது போல் வேறு எந்த பெரிய விஷயங்களில் காட்ட விடப்படுவதில்லை என்பதே எனது மனக்குமுறலாக உள்ளது .
நீங்கள் பாருங்கள்…. இந்த மாநிலத்தின் மிக முக்கியமான சமூக நலம், சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற போராட்டங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது பெண்கள்தான். நெடுவாசலாக இருந்தாலும், கூடங்குளமாக இருந்தாலும், ஸ்டெர்லைடாக இருந்தாலும் அங்கே போராட்டங்களில் அதிகமாக பங்கெடுப்பது பெண்கள்தான். ஆனால் தலைமை ஆணாக இருக்கும். இப்படி பல முக்கியமான போராட்டங்களில் பங்கெடுக்கிற பெண்கள்தான் இது போன்ற போராட்டங்களின் மேல் நடக்கும் ஒடுக்குமுறையிலும் உயிரை விடுகின்றனர்.
போராட்டங்களுக்கு பெண் முக்கியம் என்று தெரிந்து பெண்களை கலந்துகொள்ள சொல்லும் யாரும் அந்த போராட்டங்களை வழிநடத்தும் உரிமையை அவர்களுக்கு கொடுப்பதில்லை . எனக்குத் தெரிந்து இப்பொழுது நடக்கும் ஷாஹீன் பாக் போராட்டங்கள் மட்டும்தான் முழுக்க முழுக்க பெண்கள் தலைமையெடுத்து செய்யும் போராட்டங்களாகும்.
அதுமட்டுமல்ல, இன்னும் கிராமங்களில் நடக்கும் பல முக்கிய போராட்டங்களை பெண்களே நடத்துகின்றனர் . டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களை பெண்களே இதுவரை முன்னின்றி நடத்தி சிறை வாசம் வரை அனுபவித்து வருகின்றனர். தென் தமிழகங்களில் நடக்கும் பெண் சிசு கொலை, பெண் கருக்கலைப்பு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக சிறு அளவிலும் பெண்கள் போராடி கொண்டுதான் இருக்கின்றன. நுண்ணரசியலில் பெண்களின் பங்கு இன்னும் அதிகமாகவே இருக்கிறது .
பெண்கள் போராடும்போது எளிதாக பின்வாங்குவதில்லை, ஆண்கள் போல் குழந்தைகளை வீட்டில் விட்டு வருவதில்லை, இடுப்பில் குழந்தைகளோடு போராடும் எத்தனை பெண்களை பார்த்திருப்போம்? அப்படி இடுப்பில் குழந்தையோடு போராடும் ஆண்களை பார்த்திருக்கிறீர்களா ?
பெண்களை எளிதாக அப்புறப்படுத்த முடியாது, பெண்களோடு எளிதாக சமரசம் செய்துகொள்ள முடியாது, பெண்களுக்கு பிடிவாதம் அதிகம், பெண்களுக்கு வீராப்பு அதிகம், பெண்கள் எளிதாக குறைகளை கண்டுபிடிக்கிறார்கள், பெண்கள் எல்லாவற்றையும் அதிகமாக விமர்சிக்கிறார்கள், பெண்கள் எல்லாவற்றையும் அதிக கேள்விக்குள்ளாக்குகிறார்கள், பெண்களை எளிதாக ஏமாற்ற முடியாது, பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம் …
மேலே சொன்ன அத்தனை குணங்களும் பெண்களின் தீய பண்பாக ஆண்களால் சித்தரிக்கப்படுபவை. ஆனால் பாருங்கள், இந்த பண்புகள்தான் பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், பெண்கள் ஏன் தலைமையேற்கவேண்டும், பெண்கள் ஏன் பெரும்பாலும் சமூக நலன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதன் சாட்சி.
ஆக கூர்ந்து பாருங்கள்… எந்த குணாதிசயங்கள் பெண்ணின் போராட்ட குணத்தையும் , அரசியல் இலக்கையும் கூராக்குமோ அந்த பண்புகளை தான் ஆண்கள் பெண்களுக்கெதிராக பேசி பெண்களின் புத்தியை மழுங்கடிக்க உபயோகிக்கின்றனர் . இதற்கு பல சமயம் பெண்கள் தெரிந்தே அடங்கி போகிறார்கள் . இதைத்தான் நான் உடைத்து வெளியே வரவேண்டும் என்று சொல்லுகிறேன் .
அரசியல்வாதி ஆணாய் இருந்தால் வீரம், பெண்ணாய் இருந்தால் திமிர். அதனாலேயே ஏற்கனவே அரசியலில் இருந்த சொச்சம் பெண்களையும் சொர்ணாக்கா, ராட்சசி, பாஜாரி என்று சொல்லி விமர்சனம் என்கிற பெயரில் ஓரங்கட்டி விட்டார்கள். இனிமேலும் வரும் அரசியல்வாதி பெண்கள் சாந்தமாகவும், கையெடுத்து கும்பிடும்படியும் இருக்க வேண்டுமென்றும் மறைமுகமாகவும் நிரப்பந்திக்கப்படுகிறார்கள்.
ஏற்கனவே அரசியலில் இருக்கும் சொச்சம் பேருக்கே இந்த நிலைமை என்றால் அரசியலுக்கு வர துடித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கான சமூக நிர்பந்தங்கள் என்னென்னவாக இருக்கும் நின்று நினைத்து பாருங்கள் .
உலகெங்குமுள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் தங்கள் சமூக அரசியல் ஆய்வுகளில் செய்து அரசியலில் பெண்களில் பங்கை பற்றி பல முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளன. அதில் முக்கியமாக பெண் தலைவர்கள் அவசியத்தை ஆய்வுகள் கூறுகின்றன.
பாகுபாடில்லாமல் முடிவுகள் ஈடுபாடு, அவசர காலங்களில் அசராமல் முக்கிய முடிவுகள் எடுப்பது, ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் பார்ப்பது, பிரச்சனைகளுக்கான சுமுகமான தீர்வுகளை காணுவது மற்றும் முடிவில் தெளிவு ஆகியவை பெண் அரசியல் தலைவர்களின் பலம் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடனே இங்கே சரியில்லாமல் ஆட்சி செய்த ஒன்றிரண்டு பெண்களை எடுத்துக்காட்டி குறை சொல்ல முயலக்கூடாது. அவர்கள் ஒரு சாம்பிள் அளவு கூட இல்லை. அதுவும் இந்தியாவில் தன்னெழுச்சி பெண் அரசியல் தலைவர்கள் மிக குறைவு .
பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்த நாடு எவ்வாறு முன்னேறுகிறது என்று பல நல்ல எடுத்துக்காட்டுகளை அவர்கள் நமக்கு தருகின்றனர். குறிப்பாக சப் சஹாரா நாடுகள் என்று சொல்லப்படுகிற ஆப்பிரிக்க நாடுகளில் பெண் அரசியல் தலைவர்கள் தலையெடுத்தபின் அங்கே நிகழ்ந்த நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் அதிகம். உலகிலேயே ருவாண்டா நாட்டில் 61 சதவிகித பெண்கள் அரசியலில் இருக்கிறார்கள். அதன் பின்னே அங்கே எல்லாமும் ஏறுமுகம்தான். அதேபோல் தற்போது நியூஸிலாந்து, பின்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், ஜார்ஜியா போன்ற நாடுகளில் பெண்கள் பிரதமர்களாக, குறிப்பாக இளம் பெண்கள் பிரதமர்களாக வந்த பிறகு நடக்கும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளன .
பெண்கள் அரசியல் தலைவர்களாக மட்டுமில்லாமல், எல்லா நிலையிலும் அடுக்குகளில் இருப்பது அந்த நாட்டின் ஜனாயகத்திற்கும் நல்லது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் எங்கெல்லாம் சரியான அளவில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஒருதலைபட்சமான முடிவுகள் தடுக்கப்படுகின்றன, அங்கெல்லாம் சமநிலை நிலவும், inclusive growth என்று சொல்ல படுகின்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியப்படும்.
குறிப்பாக அந்தந்த கட்சிகள்/இயக்கங்கள் தவறவிடுகிற சில முக்கிய கோட்பாடுகளையும், சமூக நலன்களையும் பெண்கள் மீட்டெடுக்க முயல்வார்கள். பெண்கள் சம அளவில் முக்கிய பதவிகளில் இடம் வகிக்கும்போது கட்சிகளில் பெண்கள் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிசெய்யப்படுகின்றன .
உலகெங்கும் பாராளுமன்றங்களில் 77 சதவிகிதம் ஆண்கள்தான் இருக்கின்றனர். அதிலும் இந்தியாவில் சமூகநீதிக்கென்று ஒரு மத்திய அமைச்சரவை இருந்தும் இன்னும் பெண்களுக்கான முப்பத்தி மூன்று சதவிகித இடஒதுக்கீடு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தியா கலாச்சாரத்தில், பண்பாட்டில் மற்ற நாடுகளை விட பெரியது என்றால் அவர்களின் பெண்களுக்கு சம வாய்ப்பை ஏன் கொடுக்க முடியவில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை.
அதுவும் பெண்கள் பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், உள்ளாட்சிகளிலும் பிரதிநிதித்துவம் பெறும்பொழுது அவர்கள் தங்களுக்கு பல காலமாக மறுக்கப்பட்டு வந்த உரிமைகளையும், சட்டங்களையும் போராடி பெற முடியும் .
இந்தியாவை பாருங்கள் இங்கே கூட்டம் கூட்டமாக அவற்றில் ஆண்கள் உட்கார்ந்துகொண்டு எல்லா பிரச்னைகளுக்கும் தங்களுக்குள்ளேயே தீர்வைத் தேடுகின்றனர். இந்த நாடு சார்ந்த எந்த வித சட்டம் மற்றும் சட்ட திருத்தங்களானாலும் அதை முடிவு செய்வது அங்கே பெருன்பான்மையாக இருக்கும் ஆண்கள் தான். அங்கே பெண்கள் பங்கே மிக குறைவு .
அதுகூட வேதனையில்லை, பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா விதமான தேசிய அளவு முடிவுகளை கூட ஆண்களே விவாதித்து, ஆண்களே முடிவு செய்கின்றனர். சானிட்டரி நாப்கினுக்கு வரி விதிக்க வேண்டுமா வேண்டாமா? ‘Marital rape’ சட்டப்படி குற்றமா இல்லையா? அபார்ஷன் உரிமைகள் பெண்ணுக்கு இருக்கிறதா இல்லையா? என்று பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் ஆண்கள் விவாதித்து சட்டம் இயற்றுகின்றனர்.
அதனாலேயே பல முக்கிய விஷயங்கள் ஆண்களுக்கு சாதகமாகவே முடிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, பெண்களின் சட்டப்படி வயது என்ன என்பது உட்பட.
அதேபோல் பெண்கள் கோவிலுக்கு போகலாமா வேண்டாமா என்பதை கூட நான்கு ஆண்கள் பெருன்பான்மையாக உட்கார்ந்து கொண்டு தீர்ப்பு சொல்லுகிறார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய இழிவு?
முதலில் பெண்களுக்கு என்ன வேண்டும் என்று ஆண் அரசியல்வாதிகளுக்கு முற்றிலும் தெரியுமா? வெறும் வேலை, படிப்பு மட்டும்தான் பெண்களுக்கு தேவையா? இது தான் பெண்களுக்கு என்ன தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் தேவைகள் இருக்கிறது என்று ஆண்களுக்கு தெரியுமா? இந்த கேள்விகளுக்கு விடை நமக்கு நன்றாக தெரியும்.
எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் பெண் உரிமைகள், பெண்ணுக்கான சலுகைகள் என்று சொல்லும் அனைத்துமே பொதுவாக ஆண்களுக்கு சாதகமான விஷயங்கள் தான். குறிப்பிட்டு முக்கிய பிரச்னைகள் அதில் இருக்காது. குறிப்பாக ஒரு தேர்தல் அறிக்கை சொல்லுகிறது “பெண்களுக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளும் சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும்”. நீங்கள் சொல்லுங்கள் பெண்களுக்கு தேவை துப்பாக்கியா, இல்லை ஆண்கள் மனநிலையில் மாற்றமா? ஆண்களை சரி செய்வோம், இல்லை வன்புணர்வுகளை குறைக்க சட்டங்களை சரி செய்வோம் என்று சொல்லவில்லை, மாறாக துப்பாக்கி வைத்துக்கொள்ள சொல்லுகிறார்கள். கையில் குழந்தையோடு கைப்பையில் பால் புட்டி, டயபர், துணிகள், மணிபர்ஸ், மருந்துகள், உணவு பொட்டலங்கள் கொண்டு போகும் பெண்கள் துப்பாக்கியை எங்கு வைப்பார்கள்? புல்லட்டுகளை எப்படி லோட் செய்வார்கள்? ஆக, இந்த பாரமும் பெண்கள் மீது தானா? ஒரு பிரச்சனையை சரி செய்ய இன்னொரு பிரச்சனையை கிளப்புவதா? இதே இந்த அறிக்கையை பெண்களும் சேர்ந்து தயார் செய்து இருந்தால் இந்த தீர்வை நிச்சயம் முன் வைத்து இருக்க மாட்டார்கள். பெண்களுக்காக யோசிப்பது வேறு, பெண்ணாக இருந்து யோசிப்பது வேறு .
இங்கே பெண்களுக்கான தீர்வு மற்றும் உரிமைகள் என்று ஆண்கள் முன்மொழிவதெல்லாமே அவர்களின் கோணத்தில் இருந்து சிந்திப்பதுதான். அதற்காகத்தான் அரசியலில் பெண்களின் பங்கு இன்றியமையாததாகிறது .
அதேபோல் இந்நாடு பல ஆண் தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் பார்த்துவிட்டது. அதிகபட்சமான ஆண்கள் அரசியலில் இருக்கும் இந்த நாட்டின் நிலை மோசமாகதான் இருக்கிறது. இந்த நாட்டின் அரசியலுக்கு பாலினம் இருக்கிறது. ஆம் இந்த நாட்டின் அரசியல் ஒரு ஆண். இந்த ஆண் அரசியல் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நம்மை எங்கே கொண்டு வந்துள்ளது என்பது அரசியல் விமர்சகர்களுக்கு ஆய்வாளர்களுக்கும் நன்கு தெரியும். இங்கே ஏற்கனவே ஆட்சி செய்த பெண்களும், இப்பொழுது பதவியில் இருக்கும் பெண்களும் இந்த அரசியலில் சிக்கி ஆணை போல சிந்தித்து செயல்படுவதுதான் இங்கே பல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்த அரசியலில் பெண்களுக்கு பெண் பண்புகள் முக்கிய தேவையாக இருக்கிறது. இங்கே பெண்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது .
போராட்டக்களங்களில் பெண் தலைவர்கள் பாய்ச்சலோடு தேவைப்படுகிறார்கள். அரசியலில் தங்கள் இடங்களை விட்டுக்கொடுக்காத பெண்கள் தேவைப்படுகிறார்கள். தங்கள் உரிமைகளை பிடிவாதமாய் வாங்க பெரும் பெண்கள் தேவைப்படுகிறார்கள். அரசியலின் போக்கை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் பெண்கள் தேவைப்படுகிறார்கள். எதிரிகளை கண்டு பயப்படாமல் கொள்கை உறுதியுடன் செயல்படும் பெண்கள் தேவைப்படுகிறார்கள்.
குழாயடி சண்டையில் என்னென்ன விதைகளை இறக்கினார்களோ அந்த விதைகளை அரசியலில் பொதுநலத்திற்காக உபயோகப்படுத்துதை பெண்கள் கற்க வேண்டும். ஆம் அரசியலை பொறுத்தவரை பெண்கள் சண்டைக்காரிகளாக இருக்க வேண்டும் . அவர்களின் உரிமையை பெற அவர்கள் அதே வேகத்தோடும் ,பாய்ச்சலோடும் சண்டை போடவேண்டும் . ஆனால் இம்முறை பெண்களோடு அல்ல சண்டை காலம் காலமாக அவர்கள் தலையில் தட்டி உட்கார வைத்து அவர்களின் வாய்ப்புகளை பறித்த இந்த ஆணாதிக்க சமூகத்தோடு, பழமைவாத ஆண்களோடு பெண்கள் சண்டை செய்ய வேண்டும் .
- ஷாலின் மரிய லாரன்ஸ்
1 Comment
நித்தியானந்தம் கிருட்டிணகுமார்
வணக்கம்,
உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது . பெண்கள் தாங்களுக்கு தாங்களே எதிராக செயல்படுவது குறித்து மேலும் அவர்கள் அறிய செய்ய சில பதிவுகளை இடுங்கள்.