வணக்கம்! Bonjour!
இன்று ‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது. இச்சிறை ஜூலை 14, 1789 அன்று புரட்சியாளர்களால் தாக்கப்பட்ட நாளே ‘பஸ்தில் நாள்’ என பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஜூலை 14 பிரெஞ்சு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள். இதே தேதியில் இந்நாளுக்கு பின் பல வரலாறுகள் உள்ளன. இந்நாளின் பல்வேறு சிறப்புகளையும் வரலாற்றையும் அறிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
பஸ்தில் நாள்
பிரெஞ்சு மக்கள் இந்நாளை பொதுவாக ‘பஸ்தில் நாள்’ (Bastille Day) என்று அழைக்க மாட்டார்கள், மாறாக, ‘la Fête Nationale Française’ (French National Day) அல்லது ‘Fete Nat’ அல்லது இன்னும் எளிமையாக ‘la Fête du 14 Juliet’ என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு தோராயமாக ‘தேசிய பிரெஞ்சு நாள்’ அல்லது ‘14 ஜூலை கொண்டாட்டம்’ என்பது பொருள்.
பஸ்தில் நாள் பிரான்சின் சுதந்திரம் மற்றும் பிரெஞ்சு குடியரசின் துவக்கத்திற்கான நாளாக கொண்டாடப்படுகிறது. பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரை, இந்த தேதி தேசிய பெருமைக்குரிய நாள். எனவே தான் இந்நாளை ‘la Fête Nationale Française’ என்று அழைக்கிறார்கள். அதோடு, 14 ஜூலை 1790 அன்று பிரெஞ்சு புரட்சியின் போது பிரெஞ்சு நாடே ஒன்று சேர்ந்ததன் நினைவாக பிரான்சின் ஒற்றுமை நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்நாள் பிரான்சின் தேசிய கீதமான La Marseillaise-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் (liberté,égalité மற்றும் fraternité) ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு பெருநாளாகும். பஸ்தில் சிறைச்சாலை தகர்க்கப்பட்ட தேதி இதே நாளில் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான் என்று கூறலாம்.
‘பஸ்தில் நாள்’ கொண்டாட்டம் ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், இந்நாள் அமெரிக்கர்கள் தங்கள் பிரெஞ்சு மரபுவழியினை நினைவுக்கூர்ந்து கொண்டாடும் ஒரு நாள் என்றும் பிரெஞ்சுக்காரர்கள் கூறுகிறார்கள்.
மேலும் உலகெங்கிலும் பல நாடுகளின் சுதந்திர நாள் ஒரு நிகழ்வுடன் தொடர்புடையதாக இருப்பதால் பஸ்தில் சிறை தகர்ப்பு நாளும் ஒரு வரலாற்று நிகழ்வோடு தொடர்புப்படுத்தப்பட்டிருக்கலாம் என பிரெஞ்சுக்காரர்கள் கூறுகிறார்கள்
‘பஸ்தில் நாள்’ பிரான்சில் பொதுவாக ‘La fête nationale’ என்றும் ‘Le quatorze juillet’ என்றும் அழைக்கப்படுகிறது.
பஸ்தில் தினத்தின் வரலாறு
அமெரிக்கப் புரட்சியைப் போலவே, பிரெஞ்சுப் புரட்சியும் அறிவொளி இயக்கத்தின் கருத்துகளால் (Enlightenment Movement) உந்தப்பட்டது
இழந்த சுதந்திரங்களை திரும்பப் பெறுவதும், அரசாட்சியை எதிர்ப்பதும் இதில் அடங்கும்.
கி.பி. 1780-களின் காலகட்டத்தில் பிரெஞ்சு மக்களுக்கு வறுமை, சமூக-பொருளாதாரம் என பல சமூக சிக்கல்கள் இருந்தன. மன்னர் பதினாறாம் லூயியின் கடுமையான வரிவிதிப்பும், உணவு பற்றாக்குறையும் மக்களை வாட்டின. சாமான்ய மக்கள் உண்ணும் ரொட்டியின் விலை விண்ணை முட்டியது. 1780-களின் பிற்பகுதியில் மக்கள் ஆளும் மன்னர் மற்றும் ராணிக்கு எதிராகப் பேசவும், புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி ஒன்று கூடவும் துவங்கினர்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுடைய சிக்கல்களையும் கோரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். மக்கள் எழுப்பிய கோரிக்கைகளை மன்னரும் ராணியும் தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் மக்கள் மிகுந்த சோர்வடைந்தனர். அதோடு, பிரான்சில் பெயர்போன அமைச்சராக இருந்த ஜாக் நெக்கர் (Jacques Necker) என்பவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. மேலும், மன்னர் பதினாறாம் லூயி பாரீசு நகரத்தை சுற்றி இராணுவ படைகளை குவிப்பதில் முனைப்பாக இருந்ததையும், பாரீசு இராணுவ படைகள் மயமாவதையும் மக்கள் விரும்பவில்லை.
பஸ்தில் எனும் சிறை பாரிசில் பிரபலமானது. பல பிரெஞ்சு மக்களுக்கு இது அரச சீர்கேட்டின் அடையாளமாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய சமூக-பொருளாதார பிரச்சினைகள் குறித்து அப்போதைய பிரெஞ்சு மன்னர் மற்றும் ராணியை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் அனைவரும் பஸ்தில் (Bastille) எனப்படும் இச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இது மக்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் கோபமூட்டியது.
இங்கு ஏராளமான போர்க்கருவிகளும், வெடிமருந்துகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது புரட்சியாளர்களின் கவனத்திற்கு வந்தது. ஏற்கனவே கிட்டத்தட்ட மூவாயிரம் துப்பாக்கிகளையும், ஐந்து பீரங்கிகளையும் தாக்கி கைப்பற்றிய புரட்சியாளர்களுக்கு நிறைய வெடிமருந்து தேவைப்பட்டது. இச்சிறையைத் தாக்க பிரெஞ்சு புரட்சியாளர்கள் முடிவெடுத்தனர். இதுவே பிரெஞ்சு புரட்சியில் மிக முக்கியமான துவக்கமாகும்.
பாரீசின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த பஸ்தில் கோட்டையின் இராணுவ ஆளுநரான இருந்தவர் பெர்னார்ட் ரெனே (Bernard-René Jordan de Launay). பஸ்தில் சிறை புரட்சிக்காரர்களின் தாக்குதல் இலக்காக இருக்கலாம் என அஞ்சி அவர் அரசிடம் கூடுதல் படைகளை வேண்டினார். ஜூலை 12 அன்று அவருக்கு 250 பீப்பாய்கள் நிறைய வெடிமருந்துகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பிற்காக தன்னுடைய படையை வரவழைத்ததுடன் கோட்டை வாயிலிலிருந்த தூக்குபாலத்தையும் மூடினார் டிலனாய்.
ஜூலை 14, 1789 அன்று விடியற்காலையிலேயே துப்பாக்கி, கத்தி மற்றும் கையில் கிடைத்த பல கருவிகளை ஆயுதங்களாக ஏந்தி பெருங்கூட்டம் பஸ்தில் சிறைச்சாலையை சுற்றி சூழத்துவங்கியது. பெர்னார்ட் டிலனாயின் சிறிய படையால் எவ்வளவு முயன்றும் சீற்றமான அக்கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் அதிமாக அதிகமாக அச்சமடைந்த ஆளுநர் பெர்னார்ட் கோட்டையின் மேல் ஏறி வெள்ளைக் கொடியுடன் சரணடைவதாக கூறினார். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய மிகச்சிறிய படையால் பஸ்திலை தற்காக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் தூக்குப்பாலங்களில் ஒன்றினை இறக்கி வாயிலை திறந்தார். உள்ளே ஆயுதங்களுடன் நுழைந்த மக்கள படை அவரை பணயக்கைதியாக பிடித்தது.
இறுதியில் அச்சிறைச்சாலை புரட்சிக்காரர்களால் தகர்க்கப்பட்டு, அங்கு சிறை பிடிக்கப்பட்டிருந்த ஏழு பேர் மீட்கப்பட்டனர். இந்நாளே பஸ்தில் நாளாக கருதப்படுகிறது.
இந்நிகழ்வில், எட்டு சிறைக்காவலர்களும், நூறு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். பணயக்கைதியாய் பிடிக்கப்பட்டு நகர மன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆளுநர் பெர்னார்ட் ரெனே பெருங்கூட்டத்தினரால் கொல்லப்பட்டார்.
இச்சிறைச்சாலை, பெரிய ஆயுதங்கள் எதுவுமின்றி கைகளினாலேயே உடைக்கப்பட்டது. செங்கல் செங்கலாக பெயர்க்கப்பட்டது. அச்செங்கல்கள் மக்களிடையே கொடுக்கப்பட்டன. சிலர் விற்பனையும் செய்தனர். அக்கற்கள் அரச கொடுங்கோல் முடிவின் சின்னமாக கருதப்பட்டன.
பஸ்தில் தாக்குதல் நிகழ்வு இறுதியில் மன்னர் பதினாறாம் லூயிஸ் மற்றும் அவரது மனைவி மேரி அந்துவானேத் ஆகியோர் 1793 இல் சிரைச்சேதம் செய்யப்படுவதற்கு வழிவகுத்தது..
பாஸ்டில் தினம் இப்போது எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பஸ்தில் நாள் ஒரு அரசு விடுமுறை நாளாகும். அன்று பஸ்தில் நாள் கொண்டாட்டங்கள் பிரான்ஸ் முழுவதும் நடத்தப்படுகின்றன. வருடாவருடம் பஸ்தில் நாள் அணிவகுப்பின் போது பிரெஞ்சு துருப்புக்கள் Champs Elysees எனுமிடத்தில் அணிவகுத்துச் செல்கின்றன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான இராணுவ அணிவகுப்பு பாரீசில் உள்ள Champs-Élysées எனும் இடத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி, மற்ற அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெறும்.
இது பிரான்சில் மிகவும் பிரபலமான நிகழ்வாகும். தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும்.
கொடுங்கோல் ஆட்சியின் குறியீடாக இருந்த பஸ்தில் இன்று விடுதலையின் சின்னமாக விளங்குகிறது.
- வணக்கம் பிரான்ஸ் செய்திக்குழு