கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆயிரக்கணக்கில் உயிர் பலிகள், ஊரடங்கு, உற்பத்தி முடக்கம், பசி பட்டினி என உலகமே அழுதுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனைகளிலிருந்து மீளமுடியுமா என கேள்விக்குறியுடன் உலகம் சுழன்றுக்கொண்டிருக்க, மறுப்பக்கம் சைபர் உலகில் கொரோனா வைரசை வைத்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இனி சைபர் கொரோனாவின் கறுப்பு பக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கொரோனோவின் கறுப்பு சந்தை
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ‘லாக்டவுன்’களை அரசுகள் அறிவிக்கத் தொடங்கின. அதனால் கடைகளுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம், தங்கள் தேவைக்கு மீறி கடன் அட்டைகளைக் கொண்டு பொருட்களை அள்ளிக்கொன்டு சென்றுவிட்டார்கள். அதனால் பலருக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போனது. மறுபக்கம் கொரோனா வைரஸை தடுக்கத் தேவையான, சானிடைசர்கள், மாஸ்க்குகள், இதர மருத்துவ பொருட்கள் கிடைப்பதில் பெரிய தட்டுப்பாடு நிலவியது. இந்த நேரத்தில் இணையத்தில் கள்ளத்தனமாக பொருட்களை விற்கும் டார்க் வெப் (Dark Web) இணையதளங்களில் மேலே குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களின் விற்பனை தொடங்கியது. அதாவது லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் ஐரோப்பாவில் சில மாஃபியாக்கள் இந்தப் பொருட்களை வாங்கி பெருமளவு பதுக்கிவிட்டார்கள். சரியான நேரத்தில் பல மடங்கு லாபம் வைத்து கள்ள சந்தையில் இறக்கிவிட்டார்கள். வெளிப்படையாக கள்ள சந்தையில் விற்றால் அரசு கண்காணித்து பிடித்துவிடும் அதனால் மிகவும் பாதுகாப்பாக டார்க் வெப்பில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள்.
இங்கு நாம் புரிந்துக்கொள்ள டார்க் வெப் பற்றி எளிய அறிமுகம்.
நாம் சாதாரணமாக வலைதளங்களை (அமேசான், ப்ளிப்கார்ட்) பயன்படுத்தி பொருட்களை வாங்குகிறோம் அல்லவா, அதேபோல டார்க் வெப் என்பது ரகசியமாக இயங்கும் ரகசிய வலையுலகம். இங்கு யார் விற்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாக இருக்கும். அரசு நினைத்தால் கூட கண்டுபிடிக்க முடியாத டிஜிட்டல் பாதாள உலகம். இங்கு பொதுவாக போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட மருந்துகள், சிறார் பாலியல் படங்கள் என அரசால் தடை செய்யப்பட்டவை தான் விற்கப்படும். அதை அரசு கஷ்டப்பட்டு கண்காணித்து அவர்களை பிடிப்பார்கள். கொரோனா காலத்தில் சானிடைசர்கள், பால் பவுடர்கள் கூட டார்க் வெப் கள்ள சந்தைக்கு வந்தது தான் அவலம்.
1 லட்சம் புது கொரோனா வலைதளங்கள்
மார்ச் மாதம் மட்டும் கொரோனா, கோவிட்-19 போன்ற தகவல்களைக் கொண்டு புதிதாக சுமார் 1 லட்சம் வலைதளங்கள் பதியப்பட்டு, வலையுலகில் முளைத்திருக்கின்றன.
‘கொரோனோ’ என்ற குறிச்சொல் தான் இணையத்தின் ‘ஹிட்’ என்பதால், கொரோனா கால சமையற் குறிப்புகள் முதல் பசுமஞ்சளை சாப்பிட்டால் கொரோனா வராது என்பது போன்ற மருத்துவ குறிப்புகளுடன் இணையத்தில் ‘கொரோனா’ சக்கை போடு போட, இந்த வலைதளங்கள் 90 சதவீதம் முழுக்க முழுக்க சைபர் விஷமிகளால் திருட்டு வேலைகளுக்காகத் தொடங்கப்பட்டது என்பது தான் அதிர்ச்சியான செய்தி.
கொரோனா காலத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முதல் டிஜிட்டலிலேயே மக்கள் பெரும்பாலான சேவைகளைப் பெறுவதும், தங்கள் பொழுதைக் கழிப்பதுமாக இருப்பதால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நேரத்தில் கொரோனாவின் பயத்தை வைத்து பயனாளர்களின் பாஸ்வேர்ட்களை ஹேக் செய்வது, அவர்களின் ஸ்மார்ட்போன், லாப்டாப்பில் உள்ள அந்தரங்க தகவல்களை திருடிவிட்டால் போதும், காலத்திற்கும் பணம் ஈட்டலாம். உடனடியாக வங்கி கணக்குகள், டிஜிட்டல் வாலட்களில் இருந்து பணத்தை திருடுவது முதல் அந்தரங்க தகவல்களை வைத்து பிற்காலத்தில் மிரட்டி பணம் பறிப்பது என சைபர் திருடர்களுக்கு பொற்காலம் இது.
அதுமட்டுமா டார்க் வெப்பில் இந்த மாதிரியான பல ஆயிரம் தகவல்களைக் கொண்ட ஃபைல்களை நீங்கள் நல்ல லாபத்திற்கும் விற்கலாம். தகவல் சந்தை !
கடந்த இரண்டு மாதங்களில் சைபர் திருடர்கள் தங்கள் கைவரிசையை பெருவாரியாக காட்டியுள்ளார்கள். பல சிறிய வங்கிகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. சைபர் தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. பலரின் அந்தரங்க தகவல்கள் டார்க் வெப்பில் பல லட்ச டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. குவாரன்டைன் காலத்தில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், சிறிய நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுடனும் இணைந்திருக்க ஜூம் (Zoom) செயலியை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஹேக்கர்கள் அந்த செயலியின் பல சிக்கல்களை கண்டுபிடித்து செயலியின் சர்வரையே ஹேக் செய்துவிட்டார்கள். இப்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டாலும், இந்த கட்டுரை எழுதும் நேரம் இந்திய அரசு, அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ‘ஜூம்’ செயலியை பயன்படுத்த வேண்டாம் என தடை செய்துள்ளது.
நம் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவை நம் சொந்த நிதி ஆதாரத்தையும் அந்தரங்க தகவல்களையும் கொண்டுள்ளது. உங்களுக்கு அந்த தகவல்கள் பெரிய மதிப்பில்லை என்றாலும், ஹேக்கர்களுக்கு அது பல ஆயிரம் டாலர்களை பெற்றுத் தரும். இந்த மிக மோசமான சூழலில் நம் உடலை பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ, நம் மனநிலையை பாதுகாத்துக்கொள்வது எவ்வ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் நம் டிஜிட்டல் வாழ்க்கையை (தகவல்களை) பாதுகாத்துக்கொள்வதும்…
• வினோத் ஆறுமுகம்