இசை எங்கிருந்து வருகிறது?

வடிவேலுவின் கேள்விதான்.

பல நேரங்களில், நாம் எளிதில் நெருங்க முடியாத கேள்விகளுக்குப் பாமரத்தனமான முகமூடி ஒன்றை அளித்துவிடுகிறோம். அப்படி பாமரத்தனத்தை அளிப்பதன் வாயிலாகவே அக்கேள்வியின் உள்ளார்ந்த மேன்மை நமக்குள் எப்போதும் தங்கிவிடுகிறது.

“இசை எனக்குள்ளிருந்து அதுவாகவே உருவாகிறது”

இளையராஜா இந்த பதிலை தன் பேட்டிகளில் பல முறை சொல்லக் கேட்டிருக்கிறோம். இதுவும் நாம் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத பதில்தான். ஆன்மீகத்தின் உச்சம் என்பது ஒரு மனம் தன்னையே அந்த உச்சமாக உணர்வது. கலையின் உச்சத்தையும் மனம் அவ்வாறே உணர்கிறது. கற்றற்ற இசை அங்கிருந்தே உருவாகிறது.

ஒரு காட்சி திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே அக்காட்சிக்கான இசைக் கோர்வையை காகிதத்தில் உடனுக்குடன் அவரால் எழுத முடிகிறது என உடனிந்த சக கலைஞர்கள் குறிப்பிடக் கேட்டிருக்கிறோம். இசை அவருடைய உள்ளுணர்விலிருந்து அதுவாகப் பெருகி வருகிறது எனில் அவருடைய இசை அறிவிற்கான வேலைதான் என்ன? அது இயல்பாகவே அந்த உள்ளுணர்வை மற்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக பொது மொழிக்கு சீர்படுத்துகிறது. அவ்வளவுதானே?

கணித மேதை ராமானுஜத்திற்கு ஒரு சிக்கல் இருந்ததாகச் சொல்வார்கள். மிகவும் சிக்கலான கணிதத் தீர்வுகள் அதுவாகவே ஆழ் மனதிலிருந்து கிளர்ந்து எழுந்து வந்தன. ராமானுஜம் அவற்றை அவர் வழிபடும்  ‘நாமகிரி’ கடவுளே வழங்குவதாக நம்பினார். அந்த உள்ளுணர்வை மற்றவர்கள்  புரிந்துகொள்ளும் பொது மொழியில் விவரிப்பதே அவருக்கான சிக்கலாக இருந்தது. இளம் பருவத்தில் தரையிலும், சிலேட்டிலும் அவர் எழுதி எழுதி அழித்த வழிமுறைகள் அவருக்குள் திரண்ட அறிவாய் உறைந்து போனது. தான் காணும் காட்சிகள் அனைத்தும், அவருக்கு எண்களாகவும், கணிதக் குழப்பங்களாகவும் தென்படத்துவங்கின. அழ்மனம் இயல்பாகவே அவற்றிற்கான தீர்வுகளை தேடித்தேடித் கண்டடையத் தொடங்கியது.  

இளையராஜா இப்போது நம் கண்முன் நிகழ்த்திக் கொண்டிருப்பதிலும், ராமானுஜத்தின் தவிப்பிலும் இழையோடுவது “அதுவாக வருகிறது” எனும் மேன்மை பொருந்திய பாமரத்தனம்தான். இந்த ஞானம் அவர்களின் திரண்ட அறிவின் வழியே காலம் காலமாய் கனிந்து உருவானது.

நமக்குள்ளும் இப்படியான “உள்ளுணர்வுகள்” உண்டு. எளிய உதாரணமாக நாம் கைப்பேசிகளிலும், கணிணியிலும் தட்டச்சு செய்யும் வேகத்தை எடுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஒவ்வொரு எழுத்தையும் தேடும் உந்துதல், கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை உள்ளுணர்வாகச் சேமிக்கத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் எந்த எழுத்து எங்கே இருக்கிறது, நம் விரல்கள் ஒவ்வொரு எழுத்திற்கும் எந்த அளவு நகரவேண்டும் என்பதெல்லாம் உள்ளுணர்வாக பதிந்துவிடுகிறது. இளையராஜாவின் இசையுணர்விற்கும், ராமானுஜத்தின் கணிதவுணர்விற்கும் நம் தட்டச்சு வேகத்திற்கும் ஒரு வித்தியாசம். நம் உள்ளுணர்வில் ஓங்கி இருப்பது “பயிற்சி” மட்டும்தான்.

நண்பர் ஒருவர் கணிதம் பயின்றவர். கணினித் துறையில் பணிபுரிபவர். அவர் ராமானுஜம் உருவாக்கிய கணிதக் குறிப்புகளை சிலாகித்து விவரிக்கும் தருணங்களும், நாம் இளையராஜாவை விவரிக்கும் தருணங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. அவருக்குள் கணிதமும், நமக்குள் இசையும் கிளர்த்தும் பரவசங்களுக்கு பெரிதான வேறுபாடுகள் இருந்ததில்லை. இன்னும் கூர்ந்து யோசித்தால், நாம் நம் தரப்பு மேதைகளின் மேன்மை பொருந்திய அந்த பாமரத்தனத்தை, பின்னோக்கி சென்று புரிந்துகொள்ள முயற்சி செய்வதன் வழியாகப் பெறும் பரவசங்கள் அவை.

என்னப்பன் அல்லவா…

பார்த்தவிழி பார்த்தபடி..

என்னுள்ளம் கோயில்…

மாதா உன் கோயிலில்..

குறையொன்றும் இல்லை..

ஜனனி ஜனனி…

அழைக்கிறான் மாதவன்…

இப்படியாக ஒரு playlist உண்டு. இதில் பெரும்பாலான பாடல்கள் இளையராஜா இசை அமைத்தவை. இந்தப் பாடல்களை கேட்பதற்கென பிரத்யேக மனநிலை என்றெல்லாம் இருந்ததில்லை. ஆனால் இந்தப் பாடல்களைக் கேட்கத் தொடங்கியதும் மனம் தானாகவே தன் இறுக்கங்களை தளர்த்திக் கொள்வதை உணர முடியும்.

இன்னும் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் இந்தப் பாடல்களில் ஒரு துல்லியமான ஒற்றுமை புலப்படுகிறது. இளையராஜா பாடல்கள் தன்னிலை துறந்து ஆன்மீகத்தின் உச்சத்தை, கலையின் உச்சத்தை வெகு இயல்பாக சென்றடைய எத்தனிக்கும் ஒரு எளியவனின், பித்தனின், வறியவனின், பற்றற்ற அகோரியின் குரல்களாக ஒலிக்கின்றன. இன்னும் எளிமையாகச் சொன்னால்  இந்த ஒவ்வொரு பாடலும் இளையராஜாவுக்குள் இயங்கும் அந்த பாமரத்தனத்தின் குரலாகவே ஒலிக்கின்றன. 

மேலும், இந்தப் பாடல்களில் எவையும் தாழ்வுணர்வைத் தூண்டவில்லை. மாறாக, சுயபெருமிதங்களிலிருந்தும், அகந்தையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு மனம் தன் மேன்மைகளிடம் சரணடைவது போன்றதொரு உணர்வைத் தருகின்றன. இளையராஜா நமக்கு அளித்திருப்பவை மேன்மையின் பிரதிகளை. அந்த பாமரத்தனத்தை நோக்கி நம்மை நகர்த்துவற்கான வழிகளை.

இளையராஜா “இசை” குறித்து பேசும்போது இசையின் தண்ணுவர்வையே பிரதிபலிக்கிறார். “இசை என்பது தெரியாதவரைதான் மகத்துவமே” என்கிறார். இதன் பொருள் அறியாமையோடு இருப்பதல்ல. எல்லையற்று விரியும் கலை தரும் மேன்மைகளை எனக்குத் தெரியும் என்ற அகந்தை இல்லாமல் எதிர்கொள்வது. என்னளவில், இந்த படைப்பியக்கத்துக்கு வெளியில்தான் நான் இளையராஜாவின் “மற்ற” சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பொருத்திப் பார்க்கிறேன். ஏனெனில் அவருக்குள் அகமாக இயங்கும் படைப்பு சார்ந்த உள்ளுணர்வு அவரால் கூட நுட்பமாக முழுவதும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். அவரின் மற்ற மேடைப் பேச்சுகள் புறவயமானவை. உண்மையில் அவை அவருக்குள் ஆழமாக புதைந்து கிடக்கும் படைப்புணர்வுக்குத் தொடர்பற்றவை. 

இளையராஜாவின் இசை நிலத்திலிருந்து ஒரு விருட்சத்தைப் போல முளைத்து எழுகிறது. அது தனக்கான காலத்தில் வெளிப்படுகிறது. பின்னர் அந்த விருட்சத்தின் இருப்பு அடர்ந்த வனம் போல நம்மைச் சுற்றிப் படர்கிறது. வனத்தின் இருப்பை உணர்பவன் அந்த விருட்சம் தோன்றிய காலத்தையோ அல்லது அது கிளர்ந்து எழுந்த நிலத்தையோ கணக்கில் கொள்வதில்லை. 

இளையராஜாவின் இசையை ரசிப்பவன் அடர்ந்த வனங்களுக்குள், தன்னையும் அறியாமல், அவர் அளித்த அறிவின் சாரத்தின் வழியே பயணிக்கிறான். மாறாக, தன்னுடைய இசை அனுபத்தினாலோ, அல்லது இசை குறித்த சிற்றறிவினாலோ இளையராஜாவின் மேதைமைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்பவன், அவரை மற்ற இசையமைப்பாளர்களுடன் ஒப்பிட்டு, முட்டுச் சந்துகளில் நின்றுவிடுகிறான்.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment