நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்தவொரு ஆரவாரமும் இன்றி நடைபெற்றது பற்றி ஒரு வாரமாக யோசிக்கிறேன். நான் இளம் வயதில் பார்த்த தேர்தல்கள் தான் உண்மையில் திருவிழா போன்று இருக்கும்.
ரிக்சா வண்டிகள் எல்லாம் கட்சித் தோரணம் கட்டி குறு தேர்கள் ஆகிவிடும். ஏன் இப்படி ஆனது? இதற்கான தேடுதலே இப்பதிவு.
2014 தேர்தலில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணம் பிரசாந்த் கிஷோரின் அமெரிக்க மாதிரி கார்ப்பரேட் தேர்தல் உத்தி. ஆனால் இதற்கு பத்து வருடங்களுக்கு முன்பே கட்சி, குடும்பத்தை கார்ப்பரேட் ஆக்க விதை போட்ட முன்னோடி தமிழ்நாட்டில் ஒருவர் இருந்தார் என்பதுதான் அரசியல் உச்சம்.
சிறுவயதில் பள்ளி படிக்கும் பொழுது காலை ‘இறை வணக்கம்’ கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமை காலை நடைபெறும். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி ஒரு ஆசிரியர் உரைக்குப் பிறகு ‘இந்திய ஒருமைப்பாட்டு உறுதிமொழி’ அதன்பின் தேசிய கீதம் அனைத்து மாணவர்களாலும் பாடப்பட்டு பின் வகுப்புக்குச் செல்லுவோம். மற்ற நாட்களில் பிரேயர் மணி ஒலித்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஒரு நிமிட மவுனத்திற்குப் பிறகு அமர்வோம்.
இந்நிகழ்வில் என் நினைவில் வருவது உறுதிமொழி எடுக்கும் பொழுது ‘உளமாற உறுதி கூறுகிறோம்’ எனும் நிறைவு வரி. தமிழ் நாட்டில் உறுதிமொழி ஏற்புகளில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட மாற்றமிது. இதைத் துவக்கி வைத்தவர் அண்ணாதுரை அவர்கள் என்று நினைவு. அதற்கு முன்னர் ‘ஆண்டவன் மீது ஆணையாக’ என்று கூறுவது வழக்கத்தில் இருந்தது. இன்றும் நீதி மன்றங்களில் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றில் சற்று பின்னோக்கிப் பார்த்தால் மதங்களின் புனிதநூல் மீது கை வைத்து சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்ற உறுதிமொழி எடுத்தல் எம்ஜிஆர் காலம் வரை இத்திராவிட வழக்கப்படி இருந்தது. இதை மீண்டும் மாற்றியவர் ஜெயலலிதா என்பதும் திராவிட அரசியல் வரலாற்றின் நகைமுரண். எவர் மீதோ அல்லது மனசாட்சியின் படியோ ஆணையிட்டாலும் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக நேர்மையாக இருப்பதும், அல்லது இட்ட உறுதிமொழி உண்மையாக அமைவதும் தனிமனிதனின் உளவியலை சார்ந்தது.
நிற்க.
இங்கு நான் சொல்ல வருவது உறுதிமொழி பற்றி அல்ல. மனசாட்சி எனும் சொல் எனக்கு நினைவூட்டுவது கலைஞரையும், அவர் தனது மனசாட்சி என்றுரைத்த மறைந்த முரசொலி மாறன் அவர்களையும் தான். கலைஞரின் அரசியல் வெற்றிக்கு எம்ஜிஆருக்குப் பிறகு (இதில் பலருக்கு ஒவ்வாமை இருக்கலாம். அது தனி விவாதம்) பெரும் பலமாக அமைந்தவர்கள் இருவர்.
பொதுவெளியில் இயக்கத் தோழர் திரு. அன்பழகன். குடும்பத்திலும், கட்சியிலும் முரசொலி மாறன். இனமானப் பேராசிரியர். அன்பழகன் பற்றி அறிந்து கொள்ள ‘இந்தியா டுடே’ தமிழ் பதிப்பில் வெளிவந்த கட்டுரையைத் தேடி படித்துக் கொள்ளவும்.
ஒரு செய்தி உண்டு. இதில் பல மறை பொருளும் இருக்கிறது.
கலைஞர் இரண்டாம் முறை மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்த பொழுது எம்ஜிஆர் ஒரு அமைச்சர் பதவி கேட்டதாக. அதற்கு கலைஞர் திரைப்பட உலகைவிட்டு விலகினால் பதவி வழங்கக் கட்சி பொதுக்குழு முடிவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று பதிலுறுத்ததாக. இதிலுள்ள சட்டச் சிக்கல் பற்றி அன்று மனசாட்சி பேசியிருக்க வாய்ப்புண்டு. காரணம் மெத்த படித்தவர் அவர். ஆனாலும் அவர் அமைச்சர் பதவியை கொடுத்து விடுங்கள் என்றே அறிவுறுத்தியுள்ளார். வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம். பின் நடந்த சம்பவங்கள் வரலாற்றின் எண்ணம் வேறுமாதிரியாக இருந்ததைச் சொல்லுகிறது.
கால மாற்றத்தில் முரசொலி மாறன் கட்சியில் முழுநேர அரசியலுக்குள் பெருமிடத்தைப் பெறுகிறார். டில்லி மத்திய அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவருக்கு 1990களில் ஏற்பட்ட பெரும் மாறுதல் அவரை திமுகவின் முகமாக அங்கு நிறுவுகிறது. கலைஞரின் முழுநேர மனசாட்சியாக மாறுகிறார். கிட்டத்தட்ட திமுக இயக்கம் என்கிற நிலையிலிந்து நிறுவனமாக கட்டமைப்பு பெறுகிறது. இன்றும் பலருக்கு இருக்கும் மனக்குறை இந்துத்துவ முகம் கொண்ட பாஜகவுடனான கூட்டணி. இதற்கும் மனசாட்சியின் பங்கு கண்டிப்பாக இருந்திருக்கும்.
வணிகம் மற்றும் தொழில் துறைகளின் அமைச்சராக பாஜக அரசின் வலதுசாரி தொழிற்கொள்கையை வடித்தவர் முரசொலி மாறன். அவர் வணிக விஷயத்தில் புத்திசாலி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அன்றைய உலகமயமாக்கலின் எதிர்காலத்தை கணித்து கட்சியையும், குடும்பத்தையும் பொதுநிறுவனமாக மாற்றியவர். நான்காம் தூணில் ஏற்பட்டு வந்த மாற்றத்தை கவனித்து ‘சன் டிவி’ என்ற சிறு விதையை விதைத்து, ஆல் போல் வளர்த்து விரித்து, 1996-ஆம் ஆண்டில் திமுகவின் வெற்றிக்கு பெறும் பங்காற்றியவர். இன்றைய கோடி மீடியாவுக்கு முன்பான கேடி மீடியா என்று கூட சொல்லலாம்.
தமிழ்நாட்டிற்கு கூட நல்ல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தவர்தான். ஆனால் இவை எல்லாவற்றிலும் கட்சிக்கும், குடும்பத்திற்கும் ஒரு பங்கு பலன் கிடைக்கவும் வழி வகுத்தவர். சமூகநீதியை கொள்கையாக பேசி வளர்ந்த கட்சியின் வீழ்ச்சி விதையை விதைத்தவரும் மாபெரும் இயக்கத் தலைவரின் மனசாட்சியே.
தாராளமயத்திற்கு இந்தியாவின் கொள்கையை வகுத்தவருக்கு, அரசியல் அதிகாரம் குடும்பத்தினரின் தொழில் விரிவாக்கத்திற்கு எவ்வாறு உதவும் என்று சொல்லிக் கொடுத்தது ஒரு குழந்தை விளையாட்டு. அவர் மறைவிற்குப் பிறகு தந்தையை விஞ்சி தனயன்கள் செய்த சித்து விளையாட்டில் ஏற்பட்ட குடும்ப விவகாரத்திற்கு பலி வழக்கம்போல பொதுமக்கள். பிறகு ‘கண்கள் பனித்து இதயம் இனித்ததையும்’ மக்கள் அமைதியாக கடந்து சென்றாலும் மக்கள் மாக்கள் அல்ல என்பதையும் என்பதை மீண்டுமொரு பத்து வருடங்களுக்கு நிரூபித்தார்கள் (2011 – 21). அந்த வகையில் தமிழ் மக்கள் கொஞ்சம் புத்தி உள்ளவர்கள்தான்.
அதன் பலன் அடிமைகள் ஆட்சி என்று எள்ளப்பட்ட ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் நான்காண்டு ஆட்சியை வெல்லவே சற்று தலையால் தண்ணி குடித்தே வெற்றி பெற வேண்டியிருந்தது. தமிழக மக்களுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த திராவிட பாசமும், பாஜகவின் சர்க்கஸ் வித்தையினால் ஏற்பட்ட அசூயையினால், அதனோடு சேர்ந்த அதிமுகவும் வெற்றிக்கு வழி விட்டது. இதிலும் ஒரு நகைமுரண் மோடி வெல்ல பணி செய்த அதே கார்ப்பரேட் பிரசாந்த் கிஷோர் இம்முறை திமுகவின் தேர்தல் ஆலோசகராக இருந்தது.
பாஜகவின் தந்திரம் மிக எளிது. நேரடியாக வெல்ல முடியாத இடங்களில் இருக்கும் பழம் பெருச்சாளி கட்சி ஊழல் பற்றி தோண்டத் தொடங்கும். தோண்டித் தோண்டி அந்த சிக்கலின் மீது உருண்டு புரண்டு சுரண்டி பிறண்டி பெரிதாக்கும். பிறகென்ன சரணா கதிதான். இன்று தமிழ்நாட்டில் இதை ஒரேயடியாக அமல்படுத்தி மக்கள் வெறுப்பை சம்பாதிப்பதை விட அரசின் கை கொண்டே கண்ணைக் குத்தும் கலையை அது கையில் எடுத்துள்ளது.
பாஜக ஆளாத மாநிலங்களில் நடைபெறும் நிகழ்வுகளினுள் இருக்கும் தொடர் கண்ணியை உண்ணித்து பார்த்தால் அதன் அரசியல் எளிதாகப் புரியும். எதிர்ப்பு அதிகமாக இருப்பின் தழலை ஊதிப் பெருக்கி, தணிய வைத்து பிறகு பூம் என்று வெடிக்க வைப்பார்கள். ஆனால் கொண்ட குறிக்கோளில் கவனம் சிதறாமல் இருப்பார்கள். அடிமை அதிமுக என்று பகடியாட்டம், பாஜக எதிர்ப்பு என்று சொல்லியே ஆட்சியை பிடித்த இன்றைய அரசின் நிலையில் ஏதாவது மாற்றம் உளதா என்பதையும் இந்த தேர்தல் நேரத்தில் சற்று அலசி பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவாக்கு மாற்று அதையே புனருத்ரணம் செய்வது அல்ல. இன்னும் தமிழ் நாட்டில் ஒரு ராமர் கோவில் எழும்பவில்லை என்று வேண்டுமானால் மனச்சாந்தி பெறலாம்.
அன்று பாஜகவின் புதிய தேசியக் கொள்கைகளை எதிர்த்துவிட்டு இன்று மறைமுகமாக அவற்றை ஆமோதித்து அமல்படுத்துதல் ராஜதந்திரம் அல்ல. பச்சை ஏமாற்றுத்தனம்.
சற்று யோசித்து பாருங்கள். கல்விபுலத்தில், உழைப்பாளர் வேலை நேரத்தை உயர்த்தியதில், பசுமைவழிச்சாலை என்று பெயர் மாற்றம் செய்ததில் இந்துத்துவாவை விமர்சிப்பதை தவிர்த்து பாஜவிற்கு எதிராக என்ன நடந்திருக்கிறது?
ஸ்மார்ட் சிட்டி என்று பூர்வகுடிகள் வெளியேற்றம், காவல் கொட்டடி மரணங்கள், ஆணவக்கொலைகள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான அடக்குமுறையை கண்டு வாளவிருத்தல், மலக்குழி மரணங்கள், மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் அடக்கப்பட்ட விதம், விவசாயிகள் மீது ஏவப்படும் கடும் சட்டங்கள் என தொடரும் வழக்கமான கொடும் அவலங்களையும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்
ஆக ஆண்டவன் மீது ஆணையிட்டாலும், உளமாற உறுதி கூறினாலும் உயர்ஜாதி, இடைநிலை ஜாதிகளின் முன்னேற்றமே இந்த மண் வளர்த்த சமூகநீதியாக மாறி நிற்கிறது. இவற்றில் மிக எளிதாக உண்மையான திராவிடத் தலைவர்கள் புதைக்கப்பட்டு விட்டனரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. நடக்கும் அவலங்களே அதை கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்படுத்துகின்றன.
எஞ்சியிருப்பதோ ஜாதி சங்க கூட்டங்களில் லஜ்ஜையின்றி கலந்து கொள்ளும் அமைச்சர்களும், அதை கண்டும் காணாமல் மங்களகரமான தலைவியை உடைய தலைமை குடும்பமும் மட்டுமே.
இந்துத்துவாவை எதிர்க்கும் அதே நேரத்தில், இந்த சிக்கல்களையெல்லாம் எதிர்கொண்டு, தடுத்து, நிறுத்தி, குறைத்து, ஒழித்து, முடிந்தால் எஞ்சியிருக்கும் நம்மையும் எப்படி காப்பாற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…
அதுவரை,
வாழ்க திராவிடம். வெல்க அதன் மாடல்…!