பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (அக். 30) முதல் மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இன்று தெரிவித்தார். இன்று (புதன்கிழமை, அக். 28) தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய அவர் ‘பிரெஞ்சு மக்களை காப்பது தனது கடமை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
• மக்கள் வேலைக்கு செல்ல, பள்ளிக்கு செல்ல, மருத்துவரைச் சந்திக்க, வேண்டியவர்களுக்கு அவசரத்தில் உதவ, அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அனுமதி சான்றுடன் (attestation) வெளியே செல்லலாம்.
• வெளியே செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
• மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை.
• பார்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமில்லாத வணிகங்கள் மூடப்பட்டிருக்கும்.
• பல்கலைக்கழகங்கள், உயர்நிலைப் பள்ளிகள் இணையம் வழியே இயங்கும்.
• ஐரோப்பிய எல்லை திறந்திருக்கும்.
• வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திற்குள் வெளியே செல்ல அனுமதி.
• குழந்தைகளுடன் பள்ளி செல்ல, முதியவர்களுக்கு உதவ, மருத்துவர் அல்லது மருந்தகங்களுக்கு செல்ல தக்க அனுமதி சான்றுடன் வெளியே செல்லலாம்.
• பிரெஞ்சு குடிமக்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வர அனுமதி.
• உடல் அடக்க நிகழ்வுகளுக்கு அனுமதி.
• ஒன்றுகூடல்கள் தடை செய்யப்படுகின்றன.
• வீட்டை விட்டு வெளியே வரும்போது அரசு கூறிய அனுமதி சான்றுடன் (attestation) அல்லது பணிக்கு செல்லும் அனுமதி சான்று இருக்க வேண்டும்.
• அனுமதி சான்றில்லாமல் வெளியே செல்பவர்களுக்கு 135€ அபராதம்.
எவை எவை திறந்திருக்கும்?
- பள்ளிகள்
- அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் வழங்கும் வணிகங்கள்
- தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள்
- பொது நிர்வாக சேவைகள்
- விவசாயம் சார்ந்தவை
மருத்துவமனைகள் நிரம்பி வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மக்ரோன் கூறியுள்ளார். மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை இதன் தாக்கம் அளவிடப்பட்டு அதனடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படும் என்றார்.
இந்த ஊரடங்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை குறைந்தது 4 வாரங்கள் அமலில் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,000 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.