‘டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது? அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்?’ என்று பல நண்பர்கள் இன்பாக்ஸில் கேட்டிருந்தார்கள். இந்த பிரச்சனையின் தீவிரம் புரிந்த அளவுக்கு அதற்கான காரணங்கள் குறித்து பொதுவெளியில் போதுமான புரிதல் இல்லை என்றே நினைக்கிறேன்.
கிருஷ்ணாவின் செயல்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நான்கு தளங்களில் வைத்து புரிந்துகொள்ளலாம்.
1.இசைக் கலைஞனாக அவரின் இடம்.
2.இசை குறித்த கருத்துகள்
3.இசைச் சூழல் குறித்த கருத்துகள்
4.இசை தவிர்த்த சமூக , அரசியல் பார்வைகள்
1.ஒரு பாடகராகவும் கலைஞனாக நாம் கிருஷ்ணாவை எங்கே வைக்கிறோம் என்பது இங்கே முதன்மையான கேள்வியாகிறது .
‘சர்ச்சைக்குரிய விஷயங்களை நீங்கள் ஏன் பேச வேண்டும் ?, கர்நாடக சங்கீத பாடகர்கள் யாருமே அதிகம் பேசுவதோ, பொது விஷயங்களைப் பற்றி கருத்து கூறுவதோ இல்லையே? என்று கேள்விக்கு ‘நான் பாடுவதால் தான் பேசுகிறேன்’ என்றார். இசை மூலம் ஆழம் கொண்ட நுண்ணுணர்வு தன்னை பேசவும் கேள்வி கேட்க வைத்தது என்கிறார்.
என்னளவில் சமகால பாடகர்களில் கிருஷ்ணா ஒரு மாஸ்டர் என்றே கருதுகிறேன் – கணக்கு வழக்கில் , கற்பனை வளத்தில், அழகியலில் , படைப்பூக்கத்தில். அவர் இசையில் முன்னெடுக்கும் சில பரிசோதனைகளும் மாற்றங்களும் பெரும் மாற்றங்கள் கொண்டு வருமா என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் அதை முழு புரிதலோடுதான் செய்கிறார் என்று நம்புகிறேன். அதன் காரண காரியங்களை அவரால் சீராகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் முன்வைக்க முடிகிறது .
கர்நாடகாவில் அவர் ஜோகப்பாக்களுடன் (பால் புதுமையினர் ) சேர்ந்து நடத்திய இசை நிகழ்ச்சி, அது போன்ற fusion வகை இசை நிகழ்வுகளை எப்படி நிகழ்த்த வேண்டுமென்பதற்கு ஒரு நல்ல உதாரணம். இசை, அழகியல், கலை என்று பூரணமான புரிதல் இல்லாத ஒருவரால் இது போன்ற நிகழ்வை நிகழ்த்த முடியாது.
இசையைப் பொறுத்தவரை கிருஷ்ணா technically ஒரு மாஸ்டர் தான் ஆனால் அவர் சிறப்பு அதுவல்ல. நுட்பத்தில் அவரை விஞ்சும் கில்லாடிகள் பலர் இருக்கிறார்கள். இந்த ‘கணக்கு வழக்கு’ ஒரு பிளாட்பார்ம் மட்டுமே. அதிலிருந்து அவர் கற்பனை வளத்தால் மேலே தாவிப் பறக்கிறார் , அங்கு தான் கலை நிகழ்கிறது. அந்த புள்ளியில் இருந்து பார்க்கும் போது இசை என்பதன் மையம் என்ன அதன் மீது நாம் சுமத்தி வைத்திருக்கும் சில அத்தியாவசியங்கள் என்ன என்ற தெளிவு பிறக்கிறது.
இன்றளவும் அவர் கருத்துக்களை மிக வன்மையாக எதிர்ப்பவர்கள் கூட அவர் இசையை சிலாகிப்பதை கண்டுள்ளேன்.இதுவரை கர்நாடக இசைச் சூழலில் அவர் மரபுவாதிகளால் சகித்துக்கொள்ளப்படுகிறார் என்றால் அது ஒரு பாடகராக அவர் நிராகரிக்கப்பட முடியாதவர் என்பதால் தான்.
2. ஒரு இசைக்கலைஞனாக அவர் தொட்ட உச்சங்கள் அனுபவங்களை முன் வைத்தே இசையில் பல மாற்றங்களை முன்மொழிகிறார் .எல்லா பாடல்களையும் ஏதொ ஒரு வகையில் பக்தியுடன் இணைத்துவிடும் போக்கு குறித்த விமர்சனம் ,பாடல் வரிகளின் பொருளை விட (literality of text ) அவற்றின் இசைத்தன்மை குறித்த முக்கியத்துவம், இசையில் பெண்களுக்கான இடம், கச்சேரி வடிவில் சில மாறுதல்கள் , வாத்திய கலைஞர்களூக்கான சில வெளிச்சங்கள் , முன்னிறுத்தல்கள் , என்று பல மாற்றங்களை முன்வைத்தும் , செயல்படுத்தியும் வருகிறார் .
சிட்னியில் நடந்த கச்சேரியில் ஒன்றில் கஞ்சிரா வாசிப்பவரை மேடையில் முன்னால் அமரச் செய்தார். மேற்பார்வைக்கு இது ஒரு gimmick போல தோன்றினாலும்? அது கச்சேரியின் dynamics யையும் ரசிகர்களின் மனநிலையையும் மாற்றி அமைத்தது என்பதே உண்மை . இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை இப்படியும் இருக்கலாமே என்பதே இந்த அணுகுமுறை .
பெண் கலைஞர்களை நிகரிசை கலைஞர்களாக தொடர்ந்து பயன்படுத்துவது , கச்சேரிக்கான இடம், மேடை , உடை என்று பல விஷயங்களில் வேறு மாதிரி முயன்று பார்த்திருக்கிறார் . இறுக்கத்தை தளர்த்தியிருக்கிறார். பாடல் வரிகளின் இசைத்தன்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட பக்தி தவிர்த்த பல புதிய களங்களை கர்நாடக இசைக்கு கொண்டு வந்திருக்கிறார் .
பெருமாள் முருகன் எழுத இவர் பாடிய பல கீர்த்தனைகள் இன்று அவர் கச்சேரிகளில் ரெகுலராகி விட்டன . வட்டார வழக்கு சொற்கள் கர்நாடக கச்சேரிகளில் கேட்க முடிகிறது . கடந்த பத்து வருடங்களில் அவர் முன்வைத்த பல விஷயங்கள் தற்போது வழமையானவை என்றாகிவிட்டிருக்கிறது . இவ்வாறான சில முயற்சிகள் எடுபடாமலும் போகலாம் that’s the nature of any change . இவற்றின் பாதிப்புகளை நீண்ட கால நோக்கிலேயே நாம் எடைபோட முடியும்.
3.மேற்சொன்ன இரண்டு தளங்களில் இருந்தே நம் சமூகத்தில் கர்நாடக இசைக்கு இருக்கும் இடம் , இசைச் சூழலில் பன்முகத்தன்மை இல்லாதது , கலாச்சார மேலாதிக்கம் , மரபிசையில் ஆர்வமிருக்கும் அனைவருக்கும் இசையை அணுக்கமாக்குவது போன்ற கருத்துகளை உருவாக்கி முன் வைக்கிறார் .மரபிசை என்ற வார்த்தைக்கு மாற்றாக கலைஇசை ( art music ) என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அதே போல நாட்டார் இசையை சமூக இசை ( social music ) என்று விளிக்கிறார். இவைகளை அவர் மேல் கீழ் என்று அடுக்குவதில்லை இவை இசையின் வெவ்வேறு வடிவங்கள் , தளங்கள் என்கிறார்.
இந்த தளத்திலே அவர் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறார். தீவிரமாக பல விமர்சனங்கள் இந்த தளத்தில் எழுந்தன.
“இசையில் பிராமண ஆதிக்கமே இல்லை என்று பிராமணரில்லாத ஒரு லிஸ்ட்டை தருவது . பிராமணரல்லாதோரை யார் இசை கற்பதிலிருந்து தடுக்கிறார்கள் என்ற வாதம் , கர்நாடக இசை எல்லோருக்கும் ஆனதல்ல , கர்நாடக இசையை பிராமணர்கள் போஷித்தார்கள் இதை அவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதில் என்ன தவறு?.நீ சொல்வதோ செய்வதோ புதிதல்ல முன்பே இதை செய்து விட்ட்டார்கள் , நீ என்ன செய்திருக்கிறாய் இதுவரை ?, உன்னை வளர்த்து விட்ட சங்கீதச்சூழலுக்கே நீ துரோகம் இழைத்துவிட்டாய் ” என்று பெரிய பட்டிலே இருக்கிறது.
என்னளவில் கிருஷ்ணா இந்ததளத்தில் முக்கியமான கருத்து ரீதியான மாற்றங்களை நிகழ்த்தியிருப்பதாகவே உணர்கிறேன். இது குறித்து அவர் தொடர்ந்து பல தளங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.இது போன்ற ஆலோசனைகளை நான் சொல்லலாம் , நீங்கள் சொல்லலாம் ஆனால் அவை மிக எளிதாக புறம்தள்ளப்படும் ஆனால் கர்நாடக சங்கீதத்தின் கர்ப்பகிரகத்திலிருந்தே இப்படியொரு குரல் எழும் போதும் அது நிராகரிக்கப்படவே முடியாக ஒரு குரலாகிறது.தன் கச்சேரிக்கு இடையே கிருஷ்ணா பேசினால் மொத்த ரசிகர்களும் காது கொடுத்து கேட்கத்தான் வேண்டும் இந்த mindset மாற்றம் முதலில் நிகழ வேண்டிய டார்கெட் ஆடியன்ஸ் அங்குதான் உள்ளார்கள் .
ஜோகப்பாஸ் , ஆல்காட் குப்பம் போன்ற இவர் களப்பணிகள் நடப்பது இந்த தளத்திலேயே .இசையை குப்பத்திற்கு எடுத்துச்செல்வது இசையை அவர்களுக்கு சொல்லித்தரவோ, திணிக்கவோ அவர்கள் உடனடியாக அதை ரசிக்கவோ அல்ல.கர்நாடக இசை எங்கோ எவரே மட்டும் புழங்கும் ஒரு கலைவடிவமல்ல அது தங்களுக்குமானதே அது தங்களையும் உள்ளடக்கமுடிவதே என்ற inclusive உணர்வை உண்டாக்குவதே அதன் முதல் குறிக்கோளாக இருந்தது.
சமூகம்,கலை போன்ற விஷயங்களில் மனமாற்றம் வேண்டி முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் கருத்துருவாக்கத்திலேயே பெரும் கவனம் கோருபவை . அந்த அளவில் கிருஷ்ணா மதிக்கத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாகவே நினைக்கிறேன் .
4.இது இசை தவிர்த்து அவரின் சமுகம் அரசியல் குறித்தான நிலைப்பாடுகளில் அவர் – இந்துத்துவ விமர்சகராகவும் , பால் சமத்துவம் , சூழியல் பாதுகாப்பு ,பன்மைதன்மை பேணுதல் என்று இடதுசாரி முற்போக்கு சிந்தனைகள் ஒட்டிய நிலைப்பாட்டை எடுக்கிறார் . இசைத்துறைக்கு வெளியே கிருஷ்ணாவை அறிந்தவர்களுக்கு இந்த களத்தின் அவர் முன்வைக்கும் முகம் மட்டுமே தெரிய வந்திருக்கும் , இதன் மூலம் அவரின் இசைக்குள் இழுக்கப்பட்டவர்கள் பலர் .
இந்த நான்கு தளத்திலும் அதிகம் புண்படுவது ஆச்சாரவாதிகள் தான் . ஆச்சாரத்தையும் தாண்டி இசையின் மீதான தங்கள் கட்டுப்பாடு விட்டுப்போய்விடக்கூடாது என்று எண்ணுபவர்கள் .
கர்நாடக இசைக்கு பக்தி மட்டுமே ஆதாரம் இல்லை என்பதே கிருஷ்ணா உடைத்த முதல் பர்னிச்சர் .பக்தியை எடுத்துவிட்டாலும் இசையில் அதன் நுட்பமோ , அழகியலும் சிதைந்து போய்விடாது என்பதை நடைமுறையில் நிகழ்த்திக்காட்டினார் .பக்தி எலிமெண்ட் இல்லாவிட்டாலும் இசையில் எந்த குறையும் வராது என்பது பலருக்கு பதற்றத்தை உருவாக்கியது . பக்தி என்ற இறுக்கமான கயிற்றால் கட்டப்பட்ட இசைச்சூழல் கலையுமோ , குலையுமோ என்ற அச்சம் உருவானது , இதை பக்திக்கு எதிரான தாக்குதலாக மடைமாற்றினார்கள் ஆனால் இதை அறிவுப்பூர்வமான தளத்தில் யாரும் எதிர்கொள்ளவில்லை .
இதில் தொடங்கிய அச்சம் , கச்சேரி சூழலில் அவர் முன்வைத்த பிற மாற்றங்களுக்கும் பரவியது . இவ்வளவு காலம் கட்டிக்காக்கப்பட்ட ஒரு குறுக்குழுவுக்குள் இவை ஒரு உடைவை நிகழ்த்துமோ, கர்நாடக இசையின் மீதான தமது பிடி நழுவுமோ என்ற அச்சம் உருவானது. கிருஷ்ணாவின் சமூக- அரசியல் கருத்துகள் அவரை bull in a china shop வகை முழு கலகக்காரராகவே நிறுவிவிட்டன .
இது இன்று நேற்று உருவான விஷயமல்ல இந்த பதற்றம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது .கிருஷ்ணா தனது இளவயது கச்சேரிகளில் இப்படியான ஆளுமையாக இருந்திருக்கவில்லை . இந்த மாற்றங்கள் எல்லாம் இசையின் மூலம் நிகழ்ந்ததே . மேலும் கிருஷ்ணா வெளி ஆள் என்றால் எளிதில் புறக்கணித்து அவரை விளிம்புக்கு தள்ளியிருக்க முடியும் ஆனால் அவர் ஒரு insider, வலுவான பின்புலம் கொண்டவர் .
எனவே இந்த அதிருப்தி நெடுநாளாக உள்ளூர கொதித்துக்கொண்டே தான் இருந்தது . கிருஷ்ணாவின் அணுகுமுறையும் கொஞ்சம் தடாலடியானது தான் . பட்டென்று மனதில் தோன்றுவதை அப்பட்டமாக போட்டு உடைத்துவிடுவார். அவ்வப்போது இவர் கச்சேரிகள் கடைசி நிமிடத்தில் வெளி அழுத்தங்களால் ரத்து செய்யப்பட்டது நடந்திருக்கிறது. ஆனால் மதிப்பு மிக்க இந்த விருதை அவருக்கு வழங்குவது , அவரை இன்னுமே நிராகரிக்க முடியாத Icon ஆக்கிவிடும் என்பதான அச்சமே இன்று இந்த முழு எதிர்ப்பாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
கர்நாடக இசைச்சூழலில் ஒரு தரப்பு இவரை எதிர்த்தாலும், இவரின் அணுகுமுறையை புரிந்து கொண்ட முதிர்ந்த தரப்பும் உள்ளது. பக்தி போக்கு , பக்தி தவிர்த்த போக்கு என்ற இரண்டுமே மிக அழகாக எந்த சிதைவும் இன்றி கர்நாடக இசைச்சூழலில் இருக்க முடியும் .ஆனால் இப்போது கிருஷ்ணாவை ஒரு outsider ஆக ஆக்கும் முயற்சி அவருக்கு மேலும் பரவலான பொது சமூகத்தின் ஆதரவை உருவாக்குவதில் தான் முடிந்திருக்கிறது.
எந்தக் கலையானாலும் திறமையும் படைப்பூகமும் , அதன் ஆதார அழகியலும் தான் மாறா அடிப்படைகள் .பிற விஷயங்கள் காலத்துக்கேற்ப விரிந்தும் வளர்ந்தும் பரிணாமம் கொள்வபவை .இன்று பாரம்பர்யம் என்று நாம் கருதும் பல விஷயங்கள் ஒரு காலகட்டத்தில் ‘அதெப்படி’ என்று நாம் ஜெர்க்கான முற்போக்குகளே
இந்த மாற்றத்தின் இன்றியமையாமையை உணர்ந்து, கிருஷ்ணா போன்றோருக்கும் அதில் ஒரு இடம் உண்டு என்று ஏற்று முன்செல்வதே கர்நாடக இசைச்சூழலுக்கு நல்லது , அதுவே புத்திசாலித்தனம் .அதுவே நியாயமும் கூட…