மனித வாழ்க்கையில் புலம் பெயர்தல் ஓர் அங்கமாகிவிட்டது. இதற்குத்தான் என்றில்லை ஏதோ ஒன்றிற்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு புலம் பெயர்தல் நமக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது. சொந்த மண்ணில்வாழ வாய்ப்புள்ளவர்கூட இரைதேடும் பாம்பாகவோ, கிளைதேடும் புள்ளினமாகவோ சில கணங்களேனும் அலைந்தேனும் மீண்டும் பொந்துக்கோ, கூட்டிற்கோ திரும்பவேண்டிய வாழ்வியல் சூழலுக்குப் பழகியுள்ளோம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரெஞ்சுமண்ணில் எனது இருப்பினை நிறுத்திக்கொள்ள உதவிய நகரம் ஸ்ற்றாஸ்பூர்(Strasbourg). என்னை அறிந்த நண்பர்களுக்கும், மாத்தாஹரி என்ற எனது நாவலை வாசித்தவர்களுக்கும் ஸ்ற்றாஸ்பூர் ஓர் பரிச்சயமான பெயர். சகமனிதர்களோடு உறவு என்ற சொல்லை முன் வைக்கிறபோது சராசரியாக நம் எதிர்ப்படுகிற மனிதர்களைக் காட்டிலும் கூடுதலாக அவர்களைப் புரிந்துகொண்டிருப்போம் அல்லது கூடுதலாகப் புரிந்து கொண்டதுபோல ஓரு பாவனை செய்வோம். நேசமோ பகைமையோ இரண்டுமே நமக்கென்ன நன்மைகள் என்ற அடிப்படையில்தான் முளைக்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகள் உறவுகொண்டிருக்கிறேன் எனில், அவ்வுறவு இந்நகரத்திடமிருந்து கொண்டது அதிகம் கொடுத்தது குறைவென்ற உண்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதென்பது சத்தியம். பிறதேசங்கள் பிறநகரங்கள் என்றறிவது இருக்கட்டும், நான் பிறந்த குக்கிராமத்தை பின்னர் எண்பதுகளில் இந்த முல்லைக்குத் தேராக நேர்ந்த ஸ்ற்றாஸ்பூர் நகரைப்பற்றி எனக்கென்ன தெரியுமென்ற தேடலில் அறிந்ததை இந்த ஒரு மாதத்திற்கு உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுத உட்கார்ந்தேன்.
உலகின் எல்லா கிராமங்களும் நகரங்களும் ஒன்றுபோலவே தோற்றம்தறினும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தோற்றத்தில் தமிழ்நாட்டில் நான் பிறந்த கொழுவாரி என்ற கிராமமும் எனது அண்டைகிராமமும் ஒன்று போலவே இருந்தாலும் ஓர் ஐம்பது வேற்றுமைகளை பட்டியலிட்டு பள்ளி இறுதி வகுப்பில் படித்தபோது நண்பர்களிடம் விவாதித்து இருக்கிறேன். எனது பக்கத்து கிராம நண்பனிடம் இப்படித்தான் உங்கள் ஊரில் இருக்கிறவர்களுக்கெல்லாம் மூக்குப்பெரிது என்று சொல்லப்போக (இது எனது கற்பனையில் உருவானது) அவன் ஆரம்பத்தில் மறுத்தான். ஆனாலும் பல நாட்கள் அப்பிரச்சினை அவனை தூக்கமில்லாமல் செய்துவிட்டது. விளையாட்டாக சொன்னேன் என்ற உண்மையைத் தெரிவித்தபோதும், நான் உருவாக்கியிருந்த அவனது ஊர்க்காரர் சித்திரத்திலிருந்து விடுபடமுடியாமல் அவன் தவித்தான். பல ஆண்டுகள் அவனது கவனம் தமது ஊர்க்காரர்கள் மூக்கிலேயே இருந்ததாக ஒருமுறைத் தெரிவித்தான். அவனது பெண்பார்க்கும் படலத்தின்போதுகூட சகோதரியின் மூக்கையே முதலில் கவனித்தானாம். இப்போதுகூட அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறபோது எனது மூக்கின்மீதே அவனது கவனம் இருப்பதுபோன்ற உணர்வு.
ஐரோப்பிய நகரங்களுக்கென பொதுப்பிம்பங்கள் உண்டு. சாலைகள், பரபரப்பு, நிர்வாகம், ஒழுங்கு, ஆடம்பரபொருட்களுக்கான கடைகள் என்பவைகளெல்லாம் அப்பட்டியலுக்குள் அடங்கும். இவைகள் தவிர்த்த சிறப்பு பிம்பங்கள் உண்டு. அவை உலகில் பழமையான நகரங்கள், நவீனத்தில் இணைத்துகொள்கிற நேரத்திலும் புராதன, மரபான கலைகளை போற்றும் பண்புக்குரியவை. இப்பண்பினை உலகின் வேறுபகுதிகளில் நாம் அறியமுடிவதில்லை. ஸ்ற்றாஸ்பூர் நகரம் என்றவுடன் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரம் என்ற தகவல் முக்கியமானது, ஐரோப்பிய பாராளுமன்றம் இங்குள்ளது என்பது பரவலாக உலகம் அறிந்த தகவல். இங்குள்ள தேவாலயம் மிக முக்கியமானது. Cathedrale Notre Dame de Strasbourg என்ற பெயர்கொண்ட இத்தேவாலயம் இந்நகரத்தில் ஓர் அங்கம். தஞ்சைக்குப் பெரிய கோவில்போல. கி.பி 1015 முதல்கல் வைக்கப்பட்டதென்றால் கட்டிமுடிக்கப்பட்டதோ கி.பி 1439ம் ஆண்டு. பாடல் பெற்றஸ்தலம் என நாம் சொல்வதுபோல பிரெஞ்சு படைப்பாளிகளால் புகழப்பெற்ற இடம். ‘மகோன்னதத்திற்கும், அசாதாரணத்திற்கும் பெருமையூட்டுமிடம்’ என விக்தொர் யுகோவால் கொண்டாடப்பட்டிருக்கிறது. கோபுரத்தின் உயரம் 142மீட்டர். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை உலகின் மிகப்பெரிய தேவாலயமாக இருந்திருக்கிறது. 332படிகளைக்கடந்ததுமுள்ள தளத்தில் நின்று பார்க்கிற ஸ்ற்றாஸ்பூர் நகர காட்சியில் பிரம்மித்துபோவீர்கள். ஆலயத்தில் உட்புற விதானமும் 32மீட்டர் உயரம் கொண்டது. பதிமூன்றாம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரகண்ணாடிகளின் அழகை நேரில் கண்டு வியக்கவேண்டும். அவற்றுள் பதினைந்து மீட்டர் விட்டம்கொண்ட பெரிய ரோஜா ஓர் அதிசயம். பொதுவாக தேவாலயத்து சித்திரகண்ணாடிகளில் புனிதமதகுருமார்களின் சித்திரங்களையே உருவாக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தபோதிலும், நகரில் அப்போது கோதுமை வாணிபம் உச்சத்திலிருந்ததை நினைவூட்டும்வகையில் கோதுமைக் கதிர்களால் இச்சித்திர சன்னலை உருவாக்கியிருக்கிறார்கள்.
– நாகரத்தினம் கிருஷ்ணா